
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு, இந்து பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், 1970ல், 10ம் வகுப்பு படித்த போது, தடை தாண்டும் ஓட்ட போட்டியில் ஆறு மாணவியர் பங்கேற்றோம். ஐந்து தடைகள் இருந்தன. கடைசியாக, நீர் நிறைந்த செம்பை தலையில் ஏந்தி எல்லைக்கோட்டை அடைய வேண்டும்.
அதற்கு முந்தைய, ஊசியில் நுால் கோர்க்கும் தடையை தாண்டிய போது, நான் பின்தங்கி விட்டேன். முந்தியவர்கள் செம்பை தலையில் நிறுத்த முயன்று கொண்டிருந்தனர். பதற்றமின்றி முன்னேறி அவர்களுடன் சேர்ந்தேன்.
செம்பு என் தலையிலும் தங்கவில்லை. ஒலிப்பெருக்கியில், 'தலையில் செம்பை நிறுத்த முடியாவிட்டால், கையால் பிடித்தபடி எல்லை கோட்டை அடையலாம்...' என, தலைமை ஆசிரியை ஆர்.எஸ்.ராஜம்மாள் அறிவித்தார். இதை கவனித்து, அதன்படி வெற்றி இலக்கை தொட்டு, கை தட்டல் பெற்றேன்.
மற்ற மாணவியர், என் வெற்றியை ஏற்க முடியாமல் அடம்பிடித்தனர். அறிவிப்பை சுட்டிக்காட்டிய போது, மாணவி பருவதம் மட்டும் ஏற்க மறுத்து அழுதாள். அவளை சமாதானம் செய்ய முடியாததால் ஆசிரியை பரிமளா, 'இரண்டாம் பரிசு பெற்று கொள்கிறாயா...' என என்னை கேட்டார்.
யோசித்து நின்றபோது, 'தடைகளை தாண்டி வரும் திறன் உன்னிடம் இருக்கிறது. அத்துடன், விட்டுக் கொடுக்கும் பண்பும் சேர்ந்தால் வாழ்வில் உயர்வாய்...' என அறிவுரைத்தார். அதை ஏற்று பாராட்டு பெற்றேன். பின், விட்டுக்கொடுப்பதை வாழ்க்கை முறையாக்கிக்கொண்டேன்.
எனக்கு, 68 வயதாகிறது; கல்லுாரி நுாலகராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். விட்டுக் கொடுக்கும் குணத்தை மனதில் பதிய வைத்தவரை, நன்றியுடன் நினைவில் கொண்டுள்ளேன்.
- கே.பட்டம்மாள், திருநெல்வேலி.
தொடர்புக்கு: 94879 85015