
சென்னை, சவுகார்பேட்டை, மெட்ராஸ் ப்ரொக்ரசிவ் யூனியன் பள்ளியில், 1943ல், 8ம் வகுப்பு படித்தபோது, வகுப்பு ஆசிரியராக இருந்தார் ஸ்ரீ ஜகத்குரு முதலியார். ஒருநாள், 'அப்பாவை போல் நான் ஆனால்... ஆயிரம் ரூபாய் சேர்த்திடுவேன்... ஆனை, குதிரை வாங்கிடுவேன்...' என்ற பாடலை கற்பித்தார்.
அதை விளக்கும் வகையில், 'நம்பிக்கை, விடா முயற்சி மற்றும் நேர்மையாக எந்த பணியை செய்தாலும் வெற்றி பெறலாம்...' என அறிவுரைத்தார். அது, பசுமரத்தாணி போல் பதிந்து, சம்பாதிக்கும் உத்வேகத்தை தந்தது.
என் வீட்டில் மின்சார வசதியில்லை. மண்ணெண்ணெய் விளக்கு ஒளியில் தான் படித்தேன். இருட்டறையில் தேள் கொட்டி, பல நேரம் அவதிப்பட்டிருக்கிறேன்.
அப்போது, இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தது. சென்னையை விட்டு வெளியேற மக்களுக்கு உத்தரவிட்டது ஆங்கிலேய அரசு. குடும்பத்துடன் மயிலாடுதுறை சென்றோம். திருவாவடுதுறை ஆதீன பள்ளியில், 9ம் வகுப்பு சேர்ந்தேன். பேருந்து வசதியின்மையால், கால்நடையாக, 8 கி.மீ., துாரம் சென்று வருவேன்.
பின், சென்னை திரும்பி எஸ்.எஸ்.எல்.சி., முடித்தேன். பொறியியல் கல்லுாரியில் சேர்ந்தபோது, என் தந்தை மறைந்தார்; நம்பிக்கை இழக்காமல் படித்தேன்; கனவிலும் எதிர்பாராத வாழ்வின் உச்சத்தை தொட்டேன்.
என் வயது, 94; தமிழகத்தில் கீழ் பவானி பாசன திட்டம், மத்திய பிரதேசம், பிலாய் உருக்கு ஆலை திட்டம், பீகார், பொகாரோ இரும்பு உருக்கு ஆலை நிர்மாண திட்டம், ஹிந்துஸ்தான் ஸ்டீல் ஒர்க்ஸ் உள்ளிட்ட முக்கிய திட்டங்களை நிறைவேற்றும் பொறுப்புகளை வகித்து ஓய்வு பெற்றேன். வாழ்வில் உச்சம் பெற வழிகாட்டிய ஆசிரியரை வணங்குகிறேன்!
- ஏ.விஜயராகவன், சிங்கப்பூர்.