
திருவாரூர் மாவட்டம், வடுவூர் உயர்நிலைப் பள்ளியில், 1976ல், ஆசிரியராகப் பணியாற்றிய போது நடந்த சம்பவம்...
அன்று, பள்ளியை ஆய்வு செய்ய வந்திருந்தார் மாவட்ட கல்வி அலுவலர். வகுப்பறையில், நான் பாடம் நடத்திய திறனை கவனித்து, பாடக்குறிப்பேடு பற்றி கேட்டார். மாதம் ஒருமுறை எழுதி வருவதாக கூறினேன். ஒவ்வொரு வாரமும் எழுத அறிவுறுத்தினார்.
ஆய்வை முடித்த பின் கூட்டம் நடத்தி, நிறை, குறையை சுட்டிக்காட்டி புறப்பட்டார். பின், ஆசிரியர்கள் கூடி, அன்றைய அனுபவத்தை பகிர்ந்தோம். தமிழாசிரியர் புலவர் ராமலிங்கம், 'பாடக்குறிப்பேட்டை திங்கள் தோறும் எழுதி வருவதாக கூறியதை கேட்டு பாராட்டினார் அதிகாரி...' என பகிர்ந்தார்.
அவர் குறிப்பிட்டிருந்த, 'திங்கள்' என்ற சொல் வாரத்தின் முதல் வேலை நாளையும், 'மாதம்' என்ற பொருளையும் தரும். வார்த்தை ஜாலத்தில் ஏமாந்து அதிகாரி பாராட்டியிருந்ததை விவாதித்து சிரித்தோம்.
தற்போது, என் வயது, 74; சாதுார்யமாக பேசிய ஆசிரியர் அமரர் ஆகிவிட்ட போதும், அந்த அனுபவம் நினைவில் தங்கியுள்ளது.
- எஸ்.கண்ணன், சென்னை.
தொடர்புக்கு: 94441 37719