PUBLISHED ON : ஜூன் 06, 2014

பெருந்தலைவர் காமராஜர் தமிழக முதல்வராக இருந்த போது ஒரு சமயம் சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அவர் ஆத்தூருக்கு வந்து கொண்டிருந்த போது, வழியில் உடையார்பட்டி என்னும் ஊரில் அவருக்கு வரவேற்பு கொடுப்பதற்காக மக்கள் திரண்டிருந்தனர்.
காரில் வந்தபடியே காமராஜர் மக்கள் கூட்டத்தைப் பார்த்தார். ஒரு பக்கத்தில் வசதியுள்ள மனிதர் கள் பெரும் கும்பலமாக காமராஜரை வரவேற்க நின்று கொண்டிருந்தனர். இன்னொரு பக்கத்தில் சாதாரண ஏழை, எளிய மக்கள் காமராஜரை வரவேற்க திரண்டிருந்தனர்.
அந்த ஊரைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் காமராஜருடன் காரில் வந்து கொண்டிருந்ததால், அவர் வசதியான மனிதர்கள் நின்று கொண்டிருந்த பக்கம் காரைக் கொண்டு போகுமாறு சொன்னார்.
ஆனால், காமராஜரோ ஏழை, எளிய மனிதர்கள் நின்ற பக்கத்தைச் சுட்டிக் காட்டி, 'முதல்ல அந்தப் பக்கம் போகட்டும்' எனக் கூறிவிட்டார்.
அதன்படியே முதலில் அந்த ஏழை எளிய மக்களின் வரவேற்றைப் பெற்றுக் கொண்ட காமராஜர், அடுத்து அந்த வசதியான மக்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.
அங்கே எல்லாரிடமும் விடை பெற்று காமராஜர் மறுபடி பயணமானார். அப்போது காரில் காமராஜருடன் வந்து கொண்டிருந்த அந்த பிரமுகர் 'ஏன் முதலில் எளிய மனிதர்களிடம் வரவேற்பை ஏற்றுக் கொண்டீர்கள்?' என கேட்டார்.
''வசதியானவங்க தங்களுடைய சொந்த வேலைகளுக்கு அச்சாரம் போடுவதற்காக இங்கே என்னை வந்து வரவேற்றனர். ஆனா, அங்கே இன்னொரு பக்கம் நின்று கொண்டிருந்த ஏழை எளிய மக்கள் எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல், எனக்கு மாலை போடுறதை மட்டுமே பெருமையா நினைச்சு வந்து காத்து நிற்கிறாங்க. அதனால்தான் அவங்க மாலையை முதல்ல வாங்கினேன்,'' என்றார்.
முதல்வர் ஏன் எளியவர்களிடம் முதலில் மாலையை வாங்கினார் என்பதை இப்போது புரிந்துக் கொண்டார் பிரமுகர்.
