PUBLISHED ON : ஜூன் 06, 2014

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!
பறப்போமா வானத்தில்!
பயணங்கள் பல வகைப்படும். சொந்த கார், பஸ், ரயில், விமானம் என அவை பல வகைப்படும். வசதியான பயணம், நேரம் மிச்சம் என்பதால் உள்நாட்டுப் பயணிகளும், வெளிநாட்டு பயணிகளும், விமானப் போக்குவரத்தை அதிகம் விரும்புகின்றனர்.
இரண்டாம் உலகப் போருக்கு பிறகு விமான பயணம் மிகவும் பிரபல மடைந்தது. 1953ல் நமது நாடு விமானப் போக்குவரத்தை நாட்டுடமை யாக்கியது.
நாட்டில் வெளிநாட்டு விமானப் போக்குவரத்தை ஏர் இந்தியா இன்டர்நேஷனல் கழகமும், உள் நாட்டு விமானப் போக்குவரத்தை ஏர் இந்தியா கழகமும் செயல்படுத்தி வருகின்றன.
பல தனியார் மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்களும் இந்தியாவில் விமான போக்குவரத்தை நடத்தி வருகின்றன.
1958-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஜெட் விமானங்கள் சுற்றுலா பயணிகளுக்கு சொகுசாகவும், விரைவாகவும் பயணம் செய்ய உதவின.
தொடர்ந்து அதிநவீன விமானங்களான போயிங் 707, 747, மேக்டனல் டக்ளஸ் டி.சி.10, ஏர்பஸ் ஏ300, ஏ380 லாக்ஹட், ட்ரை ஸ்டார்-1101 ஆகியவை சுற்றுலா பயணத்தில் புரட்சியை ஏற்படுத்தின.
இதையடுத்து கான்கார்டு, டுபோலேஸ் 144 போன்ற சூப்பர்சானிக் மின்னல் வேக விமானங்கள் அறிமுகப் படுத்தப்பட்டதால் பன்னாட்டு சுற்றுலா பயணம் பெருகியது.
கான்கார்டு விமானங்கள் அதிக அளவில் விபத்துக்குள்ளானதால், அந்த வகை விமானங்கள் தடை செய்யப்பட்டன.
நமது நாட்டில் 11 பன்னாட்டு விமான தளங்களும், 100 உள்நாட்டு விமானங்களும் உள்ளன.
பெங்களூரு, ஐதராபாத், கொச்சி, அகமதாபாத், கோவா, அமிர்தசரஸ், கவுகாத்தி, மதுரை ஆகியவை பன்னாட்டு விமானத்தளங்களாக தரம் உயர்த்தப் பட்டுள்ளன.
கோவா, ஐதராபாத், பெங்களூரு ஆகிய இடங்களில் தனியாக பன்னாட்டு விமான தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள மிகப்பெரிய 4 விமான நிலையங்கள், தனியார் நிறுவனங்களுக்கு நீண்ட கால குத்தகைக்கு விடப்பட்டு உள்ளன.
வாயுதூத் விமான சர்வீஸ், விமான டாக்சிகள், ஹெலிகாப்டர்கள் ஆகியவையும் சுற்றுலா பயணிகளுக்கு பயன்பட்டு வருகின்றன.
விமான டாக்சிகள் 11 தனியார் நிறுவனங்கள் நடத்துகின்றன.
பாட்டில் வாட்டர் குட் - ஆ!
நமக்கு மிக மிக அத்தியாவசியமான ஒன்று வாட்டர்- தண்ணீர்.
வெயிலை பார்த்தால், தாகம்தான். ஒரு நாளில் விழித்திருக்கும் போதெல்லாம் மட்டுமல்ல நித்திரையின் போது எடுக்கும் தாகம்.
நதி, ஆறு, ஓடை, குளம், வாய்க்கால், கிணறு, பம்ப், மோட்டர் என வந்த தண்ணீர் இன்று வாட்டர் பாட்டிலில் அடைப்பட்டு அளிக்கப்பட்டு அருந்தப்படுகின்றன.
பாட்டில் தண்ணீர் அல்லது பதப்படுத்தும் முறைகளை மேற்கொண்டு பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் தண்ணீரில் எந்த வித கனிமங்களும் கிடையாது.
அவற்றை சுத்திகரிக்கும்போது, அந்த தண்ணீரின் கனிம சத்துக்கள் அனைத்தும் எடுக்கப்பட்டு விடுகின்றன.
வெயில் அதிகம் உள்ள இடங்களில் இந்த தண்ணீரை அதிகம் வாங்கி பயன்படுத்தும் மக்களின் உடலுக்கு நாளடைவில் தேவையான மக்னீசியம், பொட்டாசியம், சிலிகா, சல்பேட் ஆகிய கனிமங்களை சேர விடாமல் செய்கின்றன.
இந்த கனிமங்கள் இல்லாத காரணத்தால் திசு சீரமைப்பு மற்றும் சக்தி தருவது போன்ற செயல்கள் செய்வது தடைபடுகிறது.
அம்மா ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!
இது கோடைக்கு ஏற்ற 'ஸ்ட்ராபெர்ரி ஜுஸ்' செய்முறை நேரம்.
தேவையானவை: ஸ்ட்ராபெர்ரி பழம் - 10, சப்போட்டா பழம் - 2, இளநீர் - ஒரு டம்ளர், சர்க்கரை - ஒரு கப்.
செய்முறை: கழுவிய ஸ்ட்ராபெர்ரி, தோல் உரித்த சப்போட்டாவை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
அரைத்ததை நன்கு வடிகட்டி, சர்க்கரை, இளநீர் சேர்த்து கலந்து பரிமாறவும். இது வித்தியாசமான சுவையில் இருக்கும். இந்த ஜுஸ் தோல் வறட்சியை போக்கும். மிகுந்த புத்துணர்ச்சியை தரும்.
என்றென்றும் அன்புடன், அங்குராசு.
***
