PUBLISHED ON : ஆக 30, 2019

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கடவுள், விநாயகர். யானை முகமும், பானை வயிறும், மூஞ்சூர் வாகனமும், பக்தர்களை அள்ளி அணைக்கும். சதுர்த்தி என்பது விநாயகரின் பிறந்த தினம்.
முதல் வணக்கம்!
விநாயகரை வழிப்பட்டு சுபகாரியம் துவங்கினால், சிறப்பாக நிறைவேறும். கொழுக்கட்டை, கொய்யாப் பழம், வாழைப்பழம், தேங்காய், பூந்தி மற்றும் லட்டு விநாயகருக்கு பிடித்த உணவுகள். எருக்கம் பூ மாலை வைத்து எளிமையாக வழிபட்டாலும், விநாயகர் மகிழ்வார்.
படிப்பு சிறக்க!
கல்வியில் சிறக்க வழிசெய்வார் பிள்ளையார். அருகம்புல் வைத்து, புத்தகங்களுக்கு பொட்டிட்டு, கற்கண்டு, பாதாம் படைத்து, துாபி, தீபமேற்றி வழிபட வேண்டும்.
அவருக்கு எண்ணற்ற பெயர்கள் உண்டு. இறைவனின் மூத்த பிள்ளை என்பதால், 'பிள்ளையார்' என்றும், வாழ்வில் வரும் தடைகளை விலக்குவதால், 'விக்னேஸ்வரர்' என்றும் பக்தர்கள் அழைப்பர்.
எலி மீது யானையா...
விநாயகர், யானை வடிவம் உடையவர்; அவரது வாகனமோ எலி.
எலி மீது, யானை எப்படி அமர முடியும்... இந்த சந்தேகம் எழுவது இயல்பே. இவற்றை, இரண்டு உருவங்களாக, பொருள் கொள்ளக் கூடாது. அணுவுக்குள் அணுவாகவும், பெரிதுக்கும் பெரிதானதாகவும், இறைவன் இருக்கிறார் என்பதே இதன் தத்துவம்.
இறைவனை புரிந்து கொள்ள முடியாது; அவரது குணநலன்களை அறிந்து கொள்ள முடியாது. எலி மீது யானை ஏறுவது, எப்படி கற்பனைக்கும் சாத்தியமில்லையோ, அதுபோல், கற்பனைகளை கடந்தவர் என்பதே தத்துவம்.
விநாயகரே சரணம்!
அனைத்துக்கும் முதல்வர் அவரே. அதுபோல, நற்செயல்களில் முதலாவதாக இருக்க முயல்வோம்!
அனைத்திற்கும் முதல் என்றாலும், அன்னை, தந்தையை மதிக்க மறந்ததில்லை மரகத கணபதி. அவர் போல், தாய், தந்தையரை மதித்து சிறப்புற வாழ்வோம்.
