தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/உலோகங்களின் அரசன் தங்கம்!

உலோகங்களின் அரசன் தங்கம்!

உலோகங்களின் அரசன் தங்கம்!


PUBLISHED ON : ஜூன் 01, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 01, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மனித வாழ்வில் தங்கம் விளையாடியதைப் போல, வேறு எந்த உலோகமும் விளையாடியதில்லை. தங்கத்துக்காக நடந்த போர்கள், அழிந்த சாம்ராஜ்யங்கள், அரச வம்சங்கங்கள் எத்தனை எத்தனை! தங்கத்தை கைப்பற்ற, கொடுங்கொலை, கொடுமைகளை மனிதன் செய்திருக்கிறான்; தங்கத்துக்காக, மனிதன் பட்ட வேதனைகளை சொல்லி மாளாது!

பண்டைக் காலத்தில், மனிதனை தங்கம் ஆட்டிப் படைத்த நிகழ்வுகளைப் பார்ப்போம்.

* மிடாஸ் மன்னன், 'தொட்டது எல்லாம் பொன்னாக வேண்டும்' என்று, தங்கத்தின் மீது கொண்ட பேராசையால் வரம் பெற்றான். அதனால், அவன்பட்ட அவஸ்தை கொஞ்ச நஞ்சம் அல்ல; நாடு, நகரம், வீடு, தோட்டம், நீர், உணவு, உடை, பெற்ற மகள் என, அத்தனையும் தங்கமாக... தவித்துப் போய், வரத்தை திரும்ப பெற்றுக் கொள்ளும்படி கடவுளிடம் கெஞ்சி மன்றாடிய கதை உலகறியும்.

* வடகிழக்கு ஆப்ரிக்காவில் பண்டை காலத்தில், பணக்கார நாடாக விளங்கியது எகிப்து. புதை பொருள் ஆய்வாளர்கள், எகிப்தியக் கல்லறைகளான பிரமிடுகளில் தங்கம் பளபளப்பதை கண்டனர். தரை, சுவர் எல்லாமே தங்கம்; இறந்த உடலை பதப்படுத்தி தங்கப் பாளத்தால் மூடி வைத்திருந்தனர்.

* ஆஸ்திரியா ராணி, சொக்கத் தங்கத்தால், பெண் கடவுள், ரீக்கு சிலை வடித்தாள். இரு புறமும் சிங்கங்கள் நிற்க, நடுவில் ஆசனத்தில் அமர்ந்திருந்தாள் ரீ தேவி.

* தங்கக்காசுகள் கி.மு., 6ம் நுாற்றாண்டிலேயே தோன்றியது. மேற்கு ஆசியா மைனரில் உள்ள, லிடியா தேசத்தவர், முதன் முதலில், தங்க நாணயங்களை உருவாக்கினர். தங்க நாணயத்தின் ஒரு பக்கத்தில், ஓடும் நரியின் உருவம் பொறிக்கப் பட்டிருந்தது; லிடியர்களின் முதன்மை தெய்வமான பஸ்ஸாரியஸின் சின்னம் அது.

* அமெரிக்கக் கண்டத்தை கொலம்பஸ் கண்டுபிடித்த பின், 1492ல் அஸ்டக், இன்காஸ், மாயா இனத்தவரிடமிருந்த தங்கம், ஐரோப்பாவில் மழையாகப் பொழியலாயிற்று. அமெரிக்கப் பூர்வ குடிகளை படுகொலை செய்து, ஸ்பானியர்கள், தங்கத்தை தங்கள் நாட்டுக்குக் கொண்டு போன கதை உலகப் பிரசித்தம். போர்த்துக்கீசிய, ஸ்பானியக் கப்பல்கள், தங்கக் குவியலோடு கடலில் மூழ்கிய சம்பவங்களும் உண்டு.

* ஆசியா கண்டத்தில் உள்ள தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்குக்கு அருகே, மிகப் பெரிய புத்தர் சிலை இருந்தது. அங்கு, ஒரு மரத்தொழிற்சாலை நிறுவ, அந்தச் சிலையைச் சேதமின்றி அப்புறப்படுத்த முயன்றனர். எச்சரிக்கையாக செயல்பட்டும், புத்தர் சிலையில் விரிசல் ஏற்பட்டது. விரிசல் கண்ட புத்தர் சிலையின் உள்ளே, 5.5 டன் எடையில் சுத்த தங்கத்தில் அதே வடிவில் புத்தர் சிலை பளபளத்தது!

அச்சிலை, 700 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று, ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அன்னியர் படையெடுப்பின் போது, தங்க புத்தரைக் காப்பாற்ற, கல்லால் உறையை உருவாக்கி, அதன் மீது போர்த்தியிருக்க வேண்டும். அந்த புத்தர் சிலையின் இன்றைய மதிப்பு, கிட்டத்தட்ட, 350 கோடி ரூபாய்.

* ஆசியா கண்டத்தில் உள்ள ஜப்பான் நாட்டு சுற்றுலா நிறுவனம் பூஜிகாங்கோ, சுற்றுலா பயணிகளுக்கு, பனபாரா ரிஸார்ட்டில் தங்கத்தால் ஒரு தொட்டியையே உருவாக்கியது. தங்கத் தொட்டிக் குளியலுக்கு, கடும் கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால், தங்க மோகம் கொண்டவர்கள், கட்டணத்தைப் பொருட்படுத்தவில்லை.

* நம் நாட்டு கோவில்களில், தங்க சிலைகள் ஏராளம். பங்காரு காமாட்சி தங்கத்தினாலானது; ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் உற்சவர் சிலை தங்கத்தினாலானது. பல கோவில் விமானங்கள் தங்கத் தகடு போர்த்தப்பட்டவை. மொகலாயர் காலத்தில், பல கட்டட சுவர்கள், பொன் தகடுகளால் மூடப்பட்டிருந்தன.

இவ்வளவு பெருமை இருந்தும், தங்கத்துக்கு எப்போதும் சிறைவாசம் தான்! பூமிக்குள் சிறைப்பட்டிருந்த இந்த உலோகம், மனிதன் கைக்கு வந்த பிறகும் சிறை வாழ்க்கை தான்! இரும்புப் பெட்டிகளிலும், பாதுகாப்புப் பெட்டகங்களிலும், கஜானாக்களிலும் பூட்டியே வைக்கப் படுகிறது இந்த மஞ்சள் உலோகம்!

கடந்த, 1848 ஜனவரியில், ஜேம்ஸ் மார்ஷல் என்ற அமெரிக்கர், குதிரையில் கலிபோர்னியா கடற்கரையை நோக்கி சென்றார். சான் பிரான்சிஸ்கோ வந்தார். அடர்ந்த காடு; தொழிற்சாலைக்கு ஏற்ற இடம். சாக்ரமெண்டோ நதி ஓடியது அங்கு. வெட்டிய மரங்களை அப்புறப்படுத்தி, அப்பகுதியை ஆராய்ந்து கொண்டிருந்த போது, ஒரு மஞ்சள் கல் தட்டுப்பட்டது. அது தங்க கட்டி. மேலும் தேடினார். அடுத்து, அடுத்து தங்கக் கட்டிகள் கிடைத்தன.

உலகின் மிகப் பெரிய தங்கச் சுரங்கத்தையே கண்டு விட்டார், ஜேம்ஸ் மார்ஷல்!

ஆதியில், எகிப்தியர்கள் தங்கத்தை மணலிலிருந்தே பெற்றனர். ரோமானியர்கள், சுரங்கங்களிலிருந்து வெட்டி எடுத்தனர்.

கடந்த, 20 ம் நுாற்றாண்டில் தான், அமெரிக்காவின் கலிபோர்னியா, அலாஸ்கா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, ஆப்பிரிக்காவில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. தங்கத்தைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்திலும் முன்னேற்றம் ஏற்பட்டது. தங்க உற்பத்தியும் அதிகமானது.

நதி மணலில் உள்ள தங்கத்தைப் பிரித்தெடுக்கும் முறைக்கு, 'அலுவியல்' என்று பெயர். தங்கத் சுரங்கங்களின் வழியே ஓடி வரும் நதி, மணலோடு தங்கத் துகள்களையும் அடித்து வரும். நதிக்கரையில், மணலை தட்டுகளில் ஏந்திச் சலிப்பர். கனம் குறைந்த மணல் நீரோடு அகல, கனமான தங்கத் துகள் தட்டில் தங்கி விடும்; இதுதான், மணலிலிருந்து தங்கத்தை பிரித்து எடுக்கும் பழைய முறை.

தங்கம், பாறைகளில் வேறு பல தாதுக்களோடு சேர்ந்திருக்கும். இது, ரசாயன, இயந்திர முறைகளில் பிரித்து எடுக்கப்படுகிறது. சுரங்கத்தில், பாறைகளை வெட்டி, பொடி செய்து, ரசாயனங்கள் மூலம் தங்கத்தை பிரிப்பர். பாதரசத்தோடு, தங்கம் கலக்கும். ஆகவே, தங்கம் கலந்த மணலில் பாதரசத்தைக் கலந்து, அந்தக் கலவையை சூடாக்க, பாதரசம் ஆவியாகிப் பிரியும், தங்கம் தங்கி விடும்.

வெள்ளை தங்கம் என்று ஒருவகை உண்டு. தங்கத்துடன், பல்லாடியம் அல்லது நிக்கல் உலோகத்தை சேர்த்து, வெள்ளைத் தங்கம் உருவாக்குகின்றனர். இதில், ஆபரணங்களைச் செய்து அணிகின்றனர்.

உலோகங்களில், அதிகம் வளையக் கூடியது தங்கம் தான். மிக மிக மெல்லிய தகடுகளாக்கலாம். ஒரு தீக்குச்சித் தலை அளவுள்ள தங்கத்தை, மூன்று மீட்டர் நீளமுள்ள கம்பியாக்கலாம். தங்கம் கனமான உலோகம். ஆனால், மிருதுவானது. ஆபரணங்கள் செய்ய, தாமிரம், வெள்ளி ஆகியவற்றைக் கலந்து பயன்படுத்துவர். தங்கத்தை அளக்க, 'காரட்' என்ற அளவீடு பயன்படுகிறது. மேல் நாடுகளில், 9 - 18 காரட் தங்கங்களையே பயன் படுத்துகின்றனர். திருமண மோதிரங்களுக்கு மட்டுமே, 22 காரட் தங்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us