தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தங்க ஆப்பிளும், அதிசய கிளியும்! (1)

தங்க ஆப்பிளும், அதிசய கிளியும்! (1)

தங்க ஆப்பிளும், அதிசய கிளியும்! (1)


PUBLISHED ON : ஆக 03, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 03, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மூலனுார் கிராமத்தில், முத்துவேல் என்னும் விவசாயி வசித்து வந்தார். தானியங்களை உற்பத்தி செய்ததோடு, தோட்டம் அமைத்தும், பாதுகாத்து வந்தார். அவர் தோட்டத்தில், பல்வகைக் கனி தரும் மரங்கள் நிறைந்திருந்தன.

கடின உழைப்பாளி; துாங்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் தோட்டத்தில் தான், முத்துவேலை பார்க்க முடியும்.

முத்துவேலின் இடைவிடாத உழைப்பையும், தோட்டத்தையும் கண்டு, ஊர் மக்கள் பெரிதும் பாராட்டினர்.

அவர் தோட்டத்தில், அதிசய ஆப்பிள் மரம் ஒன்று இருந்தது.

ஒரு நாள் -

தங்க ஆப்பிள் ஒன்று, அந்த மரத்தில் காணப்பட்டது. மறுநாள் பார்த்த போது, அதை காணவில்லை. ஆனால், வேறு ஒரு தங்க ஆப்பிள், மரத்தின் வேறொரு கிளையில் காணப்பட்டது. அந்த தங்க ஆப்பிளை, யாரோ திருடிச் சென்று விட்டனர். முத்துவேல் வயது முதிர்ந்தவர்; வேறு எங்கும் செல்ல இயலாமல், வீட்டோடு இருந்தார். அதனால், தோட்டத்துப் பொறுப்பை மகன்கள், மூன்று பேரும் கவனித்து வந்தனர். அச்சந்தர்ப்பத்தில் தான், ஆப்பிள் மரத்தில் இருந்த, தங்க ஆப்பிள் திருடு போன விஷயம் அவர்களுக்கு தெரிய வந்தது.

இதில், ஆச்சரியம் என்னவென்றால், அந்த அதிசயமான ஆப்பிள் மரத்தில் தினமும் மாலையில், ஒரு தங்க ஆப்பிள் தோன்றும். அன்றிரவு, அது திருடு போய் விடும். பின், மறு நாள் மாலையில், மீண்டும் ஒரு தங்க ஆப்பிள் தோன்றும். அதுவும், அன்றிரவே திருடு போய் விடும். இப்படியாக நடைபெற்று வந்த திருட்டைப் பற்றி, மகன்கள் மூவரும் தந்தையிடம் கூறினர்.

மூத்த மகனை நோக்கி, ''நீ, இன்றிரவு முழுவதும் துாங்காமல் இருந்து, தங்க ஆப்பிள் மரத்தைக் காவல் செய். திருடன் யார் என்பதை கண்டுபிடித்தாக வேண்டும்...'' என்று கண்டிப்புடன் கூறினார்.

பொதுவாக, நள்ளிரவுக்குப் பின், வரும் நேரத்தை தான், திருடர்கள் தேர்ந்தெடுப்பர். காரணம், அந்நேரத்தில் எல்லாரும் அயர்ந்து துாங்கிக் கொண்டிருப்பர். திருடுவதற்கு வசதியான நேரம் அது. எனவே, தங்க ஆப்பிள் மரத்துக்கு காவல் புரிய தயாராகி விட்ட முத்துவேலின் மூத்த மகன், வீட்டில் மற்றவர்கள் துாங்கி விட்ட வேளையில், கையில் தீப்பந்தத்துடன், தோட்டத்துக்குச் சென்று, அந்த ஆப்பிள் மரத்தின் அருகில் உட்கார்ந்து காவல் புரிந்தான்.

இரவு மணி, 2:00. அவன் இமைகள் மூடின. மரத்தடியில் சாய்ந்தவாறே துாங்கி வழிந்தான். சட்டென்று விழித்து, ஆப்பிள் மரத்தை அண்ணாந்து பார்த்தான்; மரக்கிளையில் இருந்த ஆப்பிளைக் காணவில்லை.

திருடனைப் பிடிக்காமல் வெறுங்கையோடு திரும்பி வந்த மகன் மீது, தந்தை பெருங்கோபம் கொண்டார்; மண்டையில் உரைக்குமாறு நன்றாக திட்டி தீர்த்தார்.

பதிலேதும் கூறாமல், தலை குனிந்து நின்றான்.

அப்போது, இரண்டாவது மகன் தந்தையைப் பார்த்து, ''அப்பா... கோபப்படாதீர்; நான், அந்த திருடனை கட்டாயம் பிடித்து, உங்கள் முன் நிறுத்துகிறேன்...'' என்று, உறுதி கூறினான். அவன் பேச்சு முத்துவேலுக்கு தெம்பூட்டுவதாக இருந்தது; கோபம் தணிந்தது.

மறுநாள் -

இரண்டாவது மகன், தீப்பந்தம் ஒன்றைக் கையில் எடுத்து, தங்க ஆப்பிள் மரம் இருந்த இடத்தை நோக்கிச் சென்றான். அவனும், தங்க ஆப்பிள் மரத்தின் அருகே அமர்ந்து, காவல் புரிந்தான். நேரம், நள்ளிரவை தாண்டி கொண்டிருந்தது. கண் இமைகள், துாக்கத்தை வர வழைப்பது போல் தோன்றியது.

'துாங்கி விடுவோமோ' என்ற பயம் அவன் மனதில் தோன்றியது. அதனால், 'எழுந்து சிறிது நேரம் அங்கும், மிங்கும் நடக்கலாம்' என்று எண்ணி, ஒருமுறை தோட்டத்தைச் சுற்றி வந்தான். எங்கும், எந்த விதமான ஆள் நடமாட்டமும் தென்படவில்லை; மீண்டும் மரத்தடிக்கு வந்து, ஆப்பிள் மரத்தை அண்ணாந்து பார்த்தான். மரத்தில், தங்க ஆப்பிள் அழகாக, 'பள பள' வென அந்நள்ளிரவில் மின்னியது. மரத்தின் மீது சாய்ந்தான். அவ்வளவு தான், அயர்ந்து துாங்கி விட்டான்;

கீழ் வானம் சிவந்து, சூரியக் கதிர்கள் வீசின; கண் விழித்தான். ஆப்பிள் மரத்தை அண்ணாந்து பார்த்தான். 'பள பபள' என மின்னிக் கொண்டிருந்த, தங்க ஆப்பிளைக் காணவில்லை.

வீட்டுக்கு வெறுங்கையோடு திரும்பி வந்த, இரண்டாவது மகனைப் பார்த்த முத்துவேலுவுக்கு எரிச்சலாக வந்தது. தந்தை பேசியதற்கு பதில், பேசாமல் தலை குனிந்து நின்றான். மூத்த மகனும் அங்கிருந்தான்; மூன்றாவது மகனோ எதுவும் பேசாமல், மவுனமாக இருந்தான்.

தந்தை, அம்மூவரையும் பார்த்து புலம்பினார்.

'இத்திருட்டை கண்டுபிடிக்க, என் பிள்ளைகளால் முடியவில்லை. நான், கண்ணை மூடி விட்டால், இந்த சொத்தை எல்லாம், இந்த பிள்ளைகள் எப்படி காப்பாற்ற போகின்றனரோ, அடக்கடவுளே... எனக்கு, இப்படி பயனில்லாத பிள்ளைகளை கொடுத்து விட்டாயே' என்று, புலம்பி தீர்த்தார், முத்துவேல்.

'சொத்தை சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியம், அந்த சொத்தை பாதுகாப்பது தான்' என்று, தந்தை 'முணுமுணு'ப்பதை மூன்றாவது மகன் புரிந்து கொண்டான்.

'தங்க ஆப்பிளை திருடுபவனை எப்படியும் கண்டு பிடித்தே தீருவது' என்று மனதில் உறுதி பூண்டான்.

தந்தையும், அண்ணன்களும் துாங்கிய பின், தீப்பந்தம் ஒன்றை எடுத்து, ஆப்பிள் மரத்தை நோக்கி சென்றான் விக்ரம் என்ற மூன்றாவது மகன்.

மூன்றாம் நாள் இரவு -

எங்கும் இருள் சூழ்ந்து, பயங்கரமாக இருந்தது. வயதில் இளையவனான விக்ரமிற்கு, அந்த பயங்கரமான இருள் சிறிது பயத்தை ஏற்படுத்தியது. உடம்பு லேசாக நடுங்க துவங்கியது. ஆனால், அவன் உள் மனம், 'அஞ்சுபவன் கோழை; அஞ்சாமல் இரு; வெற்றி பெறுவாய்' என்று அறிவுறுத்தியது.

துாக்கத்தை மறந்தான். துணிச்சலை வரவழைத்துக் கொண்டான். தலையை நிமிர்த்தி, வானத்தை நோக்கிப் பார்த்தான். அப்போது, திடீரென்று வானத்தில் நிகழ்ந்த ஒரு அற்புத காட்சியைக் கண்டான்.

நெருப்பைக் கக்கியபடி, ஒரு கிளி பறந்து வந்தது. அதன் உடல் முழுவதும், 'தக தக'வென மின்னியது. தன் அலகால், தங்க ஆப்பிளைப் பறிக்க வந்தது. இதைப் பார்த்த விக்ரம், அந்த கிளியை பிடிப்பதற்காக விரைந்து, மரத்தின் மீது ஏறினான்.

அவன் கை, கிளிக்கு மிக மிக அருகில் சென்று விட்டது. கிளியின் சிறகுகளில் ஒன்றை பிடித்துக் கொண்டான். 'சிறகு போனால் போகட்டும்' என்று எண்ணிய கிளி, தங்க ஆப்பிளைப் பறித்தபடி, அவனிடமிருந்து தப்பி, பறந்து சென்று விட்டது. ஆனால், அதன் சிறகு மட்டும் அவன் கையில் சிக்கியது.

காலையில் எழுந்து பார்த்தனர் தந்தையும், அண்ணன்களும். வீட்டில் தம்பி விக்ரமை காணவில்லை என்று தெரிந்து கொண்டனர்; தந்தைக்கு ஒரே ஆச்சரியம்; அதே சமயம் கவலை!

அவர்கள் மூவரும் துாங்கிய பின், அவன் எழுந்து போய் விட்டான் என்பதை உணர்ந்த அவர், 'ஐயோ... விக்ரம் எங்கு போனானோ... என்ன ஆயிற்றோ... சின்னப் பையன் ஆயிற்றே...' என்று, புலம்பிக் கொண்டிருந்தார்.

- தொடரும்...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us