PUBLISHED ON : ஆக 03, 2018

'காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு என
வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா!'
என்ற பாரதியார் பாடல், நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், தற்போது, எந்த குழந்தைகளுமே, மாலையில் ஓடி, ஆடி விளையாடுவது இல்லை. மொபைல் போனும், 'டிவி'யும் அவர்களை ஆக்கிரமித்து உள்ளது.
பாரம்பரிய விளையாட்டான, பாண்டி, நொண்டி, பச்சைக் குதிரை, பல்லாங்குழி, கூட்டாஞ்சோறு, களி மண்ணில் மண் பாண்டங்கள் செய்தல், பம்பரம் விடுதல் என, ஏராளமான விளையாட்டுக்களை, இப்போதுள்ள குழந்தைகள் அறிய வாய்ப்பில்லை.
ஒவ்வொரு விளையாட்டை பற்றியும் தெரிந்துக் கொள்வோமா...
நொண்டி விளையாட்டு!
இருவர் அல்லது அதற்கு மேற்பட்டோர் விளையாடலாம். இந்த விளையாட்டிற்கு மண் தரையாக இருந்தால் நன்றாக இருக்கும். இருவர் விளையாடினால் நான்கு கட்டமும், நான்குபேர் விளையாடினால் இரண்டு அணியாக விளையாட எட்டு கட்டமும் போட்டுக் கொள்ளுங்கள். விளையாடுவதற்கு சிப்பி ஒன்றை தயார்படுத்தி கொள்ளவும்.
முதலில் சிப்பியை நான்கு கட்டங்கள் தாண்டி போடவேண்டும். அதை நொண்டி அடித்தவாறு ஒவ்வொரு கட்டமாக சென்று, சிப்பியை மிதிக்க வேண்டும். பின், சிப்பியை காலால் எற்றித்தள்ளி, அதனை மீண்டும் வந்து மிதிக்க வேண்டும்.
பின், நான்கு, மூன்று என ஒவ்வொரு கட்டமாக சிப்பியை போட்டு இதை போன்று விளையாட வேண்டும்.
நான்கு கட்டங்களும் முடிந்த பிறகு, ஆட்டம் கடினமாகும். இதையே பாடிக்கொண்டு விளையாடவேண்டும். பின், நொண்டி அடித்தவாறு ஒற்றைக்காலில் சிப்பியை வைத்து; தலையில் வைத்து; கழுத்து பகுதியில் வைத்து; திரும்பி நின்று, தலைக்கு மேல் கையை கொண்டு சிப்பியை வீசுவது; எற்றித்தள்ளும் சிப்பியை கையால் எடுப்பது; கண்களை மூடிக்கொண்டு ரைட்டா, ரைட்டா என்று கேட்டவாரே கோடுகளை மிதிக்காமல் செல்வது என்று ஆட்டம் நீண்டு கொண்டே போகும்.
இதை எல்லாம் விளையாடி முடித்தால் நான்கு கட்டங்களில் ஒரு கட்டம் அவர்களுக்கு சொந்தமாகும். விளையாடும் போது அதில் அவர்கள் காலை ஊன்றிக்கொள்ளலாம். மற்றவர்கள் அதை தாண்டி தான் செல்ல வேண்டும்.
சில விதிமுறைகள்:
விளையாடும் போது நீங்கள் வீசும் சிப்பி கட்டம் தவறி விழக்கூடாது. கட்டத்திற்குள் சிப்பியை போட்டுவிட்டு, போகும் போது அந்த கட்டத்தை தாண்டியும், வரும்போது சிப்பியை மிதித்து, எற்றித்தள்ள வேண்டும். எற்றித்தள்ளும் சிப்பி கட்டத்திற்கு வெ ளியே விழவேண்டும். கட்டத்திற்குள் விழுந்தால் தவறான ஆட்டம்.
இதை விளையாடுவதன் மூலம், கை, கால், சுறு சுறுப்பாகவும், வியர்வை அதிகமாக வெளியேறி, உடலை ஆரோக்கியமாக்கும்; இரவு நிம்மதியாக துாங்கி, காலையில் புத்துணர்ச்சியுடன் எழுந்திருக்கலாம்.
பம்பரம் விடுதல்!
இருவர் அல்லது அதற்கு மேற்பட்டோர் விளையாடலாம். மண் தரையில் சிறியதாக ஒரு வட்டம் போடவும். பின், பம்பரத்தை கயிற்றில் சுற்றி, அந்த வட்டத்தினுள் பம்பரத்தை விடவேண்டும். பம்பரம் சுற்றமல் போனாலோ அல்லது வட்டத்திற்கு வெ ளியே பட்டாலோ அந்த நபர் பம்பரத்தை உள்ளே வைக்க வேண்டும். மற்றவர்கள் அந்த பம்பரத்தை தங்கள் பம்பரத்தை கொண்டு வெ ளியேற்றுவர்.
பம்பரத்தை கயிற்றால் சுற்றி விட்டால், அது, 'கற... கற...' என சுற்றுவதை, பார்ப்பதற்கே அழகாக இருக்கும்; அதை பார்க்கும் போது, பம்பரம் போல், நாமும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்.
களி மண்ணில் விளையாட்டு பொருள் செய்யும் முறை!
முதலில், என்ன விளையாட்டு பொருள் செய்ய விரும்புகிறீர் என்பதை, தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின், அதற்கு தேவையான, களி மண்ணை எடுத்து, தண்ணீர் ஊற்றி, கெட்டியாக பிசைந்து செய்யலாம்.
உங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு, அழகாக, அனைத்து வடிவிலான பொம்மைகள் செய்யலாம்; விருப்பப்படும் பொருட்களை செய்து, அவற்றை வெயிலில் காய வைத்து, வண்ணம் தீட்டி மகிழலாம்!
கூட்டாஞ்சோறு!
கிராமங்களில், பள்ளி விடுமுறை நாட்களில், சிறுவர்கள் ஒன்றாக அமர்ந்து, செங்கல் வைத்து அடுப்பு மூட்டுவர். ஒவ்வொருவர் வீட்டிலிருந்து ஆளுக்கொரு பொருளாக, அரிசி, பருப்பு மற்றும் காய்கறி என எடுத்து வந்து, அனைத்தையும் நன்றாக கழுவி, ஒரே பாத்திரத்தில் போட்டு சமைப்பர்.
சமைத்ததை, மரத்தடியில் அமர்ந்து, ஒன்றாக சேர்ந்து சாப்பிடுவர். அவற்றின் மூலம், ஒற்றுமையாக பகிர்ந்து உண்ணும் உணர்வு, ஒவ்வொரு குழந்தைகளின் மனதிலும் ஏற்படும். இதே மாதிரியான, எத்தனையோ பாரம்பரிய விளையாட்டுகள் அழிந்து விட்டன.
குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியத்தையும், கல்வி அறிவையும் கொடுக்கும், நம் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடிப் பாருங்கள். 'ஸ்மார்ட் போனை' கையில் கொடுத்து, அவர்களை ஒரே இடத்தில் அமர செய்து, 'சைக்கோ'வாக்கி விடாதீர்!
- என்.கிருஷ்ணவேணி.
