PUBLISHED ON : ஆக 03, 2018

சோம்பேறியும், முட்டாளுமான ஒருவன், 'உழைக்க கூடாது; உடல் நோக கூடாது; ஆனால், சம்பாதிக்க என்ன செய்யலாம்' என்று யோசித்தான்.
அப்போது, சற்றுத் தொலைவில் உள்ள தீவில், ஒற்றைக்கண் மனிதர்கள் வசிப்பது தெரிய வந்தது.
'அந்தத் தீவுக்கு சென்று, ஒற்றைக் கண் மனிதன் ஒருவனை, எப்படியாவது கொண்டு வந்துவிட வேண்டும். அவனை காட்சிப்படுத்த, எவ்வளவு கட்டணம் நிர்ணயித்தாலும், ஏராளமாக பணம் குவித்து விடலாம்' என்று நினைத்தான்.
அந்த சோம்பேறிக்கு, ஒரு நண்பன் இருந்தான்; அவனிடம், தன் எண்ணத்தை தெரிவித்தான்.
''உன்னோட சோம்பலை மூட்டை கட்டி வை; இங்கே உழைத்தால், ஏராளமாக பொருள் ஈட்ட முடியும்...'' என்றான் நண்பன்.
சோம்பேறி கோபமானான்.
''நான், பெரிய பணக்காரனாகி விடுவேன் என்று பொறாமையா...'' என்றான்.
''அந்த தீவில், ஆபத்தில் மாட்டிக் கொள்ளாதே...'' என்றான், நண்பன்.
''இல்லை... நான் அந்த தீவுக்கு செல்வேன்; ஒற்றைக் கண்ணன் ஒருவனைத் துாக்கி வருவேன். அவனை வேடிக்கை காட்டி, ஏராளமாக சம்பாதிப்பேன்...'' என்று சவால் விடுவது போல, பேசினான் சோம்பேறி.
''எக்கேடாவது கெட்டுப்போ...'' என்று சொல்லி, சென்று விட்டான், நண்பன்.
சோம்பேறி கிளம்பினான். படகில் பயணம் செய்தான்; ஒற்றைக்கண் மனிதர்கள் இருக்கும் தீவை நோக்கிப் படகு சென்றது.
பாதி வழியிலேயே, இரண்டு ஒற்றைக் கண்ணர்கள், இன்னொரு படகில் வந்தனர்.
'அவர்களில் ஒருவனை எப்படியும் துாக்கி செல்ல வேண்டும்' என்று நினைத்தான், சோம்பேறி.
ஆனால், நடந்ததோ வேறு -
ஒற்றைக் கண்ணர்கள் இருவரும் சேர்ந்து, சோம்பேறியைத் துாக்கியபடி தீவுக்கு சென்றனர்.
'இரண்டு கண்ணுள்ள மனிதன் பார்க்க வாரீர்...' என்று அறிவித்தனர்.
அவனை காட்சிப் பொருளாக, ஒரு கண்ணாடிப் பேழைக்குள் நிற்க வைத்தனர்; கூட்டம் கூட்டமாக வந்து வேடிக்கை பார்த்து சென்றனர் ஒற்றைக் கண்ணர்கள்.
அவனைத் துாக்கி வந்தவர்கள் ஏராளமாக பணம் சம்பாதித்து விட்டனர்.
'நண்பன் பேச்சைக் கேட்காததற்கு அனுபவித்து தான் ஆக வேண்டும்' என்று, சொல்லிக் கொண்டான் சோம்பேறி.
குட்டீஸ்... சோம்பேறிக்கு கிடைத்த தண்டனையை பார்த்தீர்களா... சுறுசுறுப்பா இருந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம்.
