
'காணம் விற்றேனும் ஓணம் கொண்டாடு...' என்பது மலையாள பழமொழி. வசதி- வாய்ப்பற்ற குடும்பங்களிலும் இந்த பண்டிகையை கொண்டாட வேண்டும் என்பதே இதன் பொருள். ஜாதி, மத வேறுபாடின்றி கொண்டாடுகின்றனர் கேரள மக்கள். அறுவடைத் திருநாள் என்றும் அழைக்கின்றனர்.
மலையாள மாதமான சிங்கம், ஹஸ்தம் நட்சத்திரத்தில் துவங்கி, திருவோணம் வரை, 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது, ஓணம் பண்டிகை. மன்னன் மகாபலியை வரவேற்கும் வகையில், ஒவ்வொரு வீட்டு வாசலிலும் பூக்களால் போடப்படுகிறது அத்தப்பூ கோலம். இதில், தும்பை, காசி, அரளி, தாமரை, மல்லி, கேந்தி போன்ற வண்ணப் பூக்கள் இடம் பெறும்.
அறுவடையை குறிக்க ஒன்பது சுவையில் உணவு சமைப்பர். இதில், 64 வகை உணவுகள் வரை இருக்கும். இதை, 'ஓண சத்யா...' என்பர். அடை அவியல், அடை பிரதமன், அரிசி சாதம், பருப்பு நெய், சாம்பார், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரைப் புரட்டி, கிச்சடி, பச்சடி, இஞ்சிக்கறி, எரிசேரி, பரங்கிக்காய் குழம்பு, பப்படம், ஊறுகாய், பால் பாயாசம், அடை பாயாசம், சிறுபருப்பு பாயாசம் என, உணவு வகைகள் இடம் பெறும்.
சமைத்ததும் கடவுளுக்கு படைப்பர். பின், நண்பர், உறவினருடன் வாழை இலையில் பரிமாறி ரசித்து உண்பர். கசவு என்ற துாய வெண்ணிற ஆடை அணிந்து பெண்கள், நடனம் ஆடுவர். மகாபலியை வரவேற்கும் விதமாக பாடல்கள் அமைந்திருக்கும்.
இந்த மகிழ்ச்சியை காண, மன்னன் மகாபலி வலம் வருவதாக நம்புகின்றனர் கேரள மக்கள்.
புராண கதை...
மன்னன் மகாபலி, முற்பிறவியில் எலியாக சிவன் கோவிலில் திரிந்து கொண்டிருந்தார். அங்கு ஏற்றியிருந்த விளக்கு, அணையும் நிலையில் இருந்தது. அந்த எலியின் வால் பட்டதால் விளக்கின் திரி துாண்டப்பட்டு பிரகாசமாக எரிந்தது.
இந்த நற்காரியத்தை செய்த எலியின், அடுத்த பிறவி தான் மன்னன் மகாபலி. அவரது ஆட்சியில் நாடு செழிப்பாக இருந்தது; மக்கள் நலன் காக்க யாகம் நடத்தி, தானம், தர்மம் செய்ய தீர்மானித்தார் மன்னன் மகாபலி. அதை நடத்த அசுர குரு சுக்ராசாரியாரை நியமித்தார். இதை எதிர்த்து, மன்னன் மகாபலியுடன் போரிட்டு தோற்றனர் தேவர்கள்.
உடனே அச்சமடைந்து, மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவர்களை காக்கும் வகையில், வாமன அவதாரம் எடுத்தார் மகாவிஷ்ணு. தான, தர்மங்கள் செய்த மன்னன் மகாபலியிடம் வந்தார்.
அவரை பார்த்ததும், 'தாமதமாக வந்துவிட்டீரே... இப்போது தான் தானத்தை நிறைவு செய்தேன்...' என்றார் மகாபலி. அதற்கு, 'நானோ மூன்றடி உயரம் உடைய சிறுவன். பெரிதாக எதையும் கேட்க மாட்டேன். மூன்றடி நிலம் கொடுத்தால் போதும்...' என்றார் வாமனன்.
அதன்படி, மண், விண்ணை அளந்தார் வாமனன். மூன்றாவது அடியை தன் தலையில் வைக்க சொன்னார் மகாபலி. மகாவிஷ்ணுவின் பாதம் தலையில் பட்டதும், பாதாளலோகம் சென்றார் மகாபலி.
மக்களுக்கு நன்மை செய்த மகாபலியிடம், 'என்ன வரம் வேண்டும்...' என கேட்டார் மகாவிஷ்ணு. பதிலாக, 'என் நாட்டு மக்களை ஆண்டுக்கு ஒருமுறை பார்த்து செல்ல விரும்புகிறேன்...' என்றார்.
அந்த வரத்தை அளித்து, 'மக்களை நீ காண வருவதை பண்டிகையாக கொண்டாடுவர்...' என வரம் அளித்தார் மகாவிஷ்ணு. இதை தான் ஓணம் பண்டிகை என புராணம் கூறுகிறது.
100 அடி படகு 150 பேர் துடுப்பு!
ஓணத்தை ஒட்டி கேரள மாநிலம், ஆலப்புழை, புன்னமடக்காயலில் பாம்புப்படகு போட்டி நடைபெறும். அது பற்றி பார்ப்போம்...
கேரள மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது திருவிதாங்கூர். இங்கு, கீழ் தெக்கும்கூர், வடக்கும்கூர், செம்பகசேரி என்ற நாடுகள் இருந்தன. இவற்றில், 'வள்ளப்படை' என்ற கடல்படை இருந்தது. சுதந்திரம் பெற்ற பின், பிரதமர் நேரு, 1952ல் கேரளா வந்தார். அவரை வரவேற்கும் விதமாக படகுப்போட்டி நடத்தப்பட்டது.
அதில் கேரளாவின் புகழ்பெற்ற வஞ்சிப்பாட்டான, 'தெய்... தெய்... தெய்... தெய்... தித்தைத்தக தெய்தெய்தோம்!' என, பாடியபடி பாம்பு படகை செலுத்திய ஆவேசம் கண்டு உற்சாகமடைந்தார் நேரு. உணர்ச்சி பெருக்கால் படகில் குதித்து வாழ்த்துப் பத்திரம் கொடுத்தார். முதலில் இது, 'பிரைம் மினிஸ்டர்ஸ் டிராபி...' என்று அழைக்கப்பட்டது. நேரு மறைவுக்குப் பின், அவர் பெயரில் நடத்தப்படுகிறது. காயலில் நடக்கும், ஒலிம்பிக் என்றும் குறிப்பிடுவர்.
போட்டியில் பங்கேற்கும் ஒரு பாம்பு படகின் நீளம், 100 அடி. அதில், 150 பேர் அமர்ந்து துடுப்பு போடுவர். இது மெய்சிலிர்க்க வைக்கும். இந்த உலகப்புகழ் பெற்ற படகு போட்டி, ஓணம் பண்டிகையை ஒட்டி நடத்தப்படுகிறது.
- எல்.மீனாம்பிகா