
முன்கதை: செவ்வாய் கிரகத்தில் அதிகார போட்டியால் பூமிக்கு வந்தாள் சிகப்பழகி. கல்வி சுற்றுலாவாக தஞ்சை பெரிய கோவிலுக்கு போன பள்ளி மாணவி கீதாவை மயக்கி, ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய நிகழ்வுகளை காட்டினாள். வியந்து நின்ற கீதாவை, செவ்வாய் கிரகத்துக்கு அழைத்தாள். இனி - 
சுரங்கம் இருண்டு காணப்பட்டது. பயத்தில் தவித்தாள் மாணவி கீதா.
'ஆம்... இது தான் சுரங்கத்தின் தற்போதைய நிலை; ஏற்கெனவே உனக்கு காட்டியது எல்லாம், என் சக்தியின் வெளிப்பாடு. என் விருப்பத்துக்கு நீ இணங்காததால், இப்படி செய்து விட்டேன். இது தான் சுரங்க பாதையின் நிலை... செவ்வாய் கிரகத்துக்கு வருவதாக ஒப்புக்கொண்டால், மீண்டும் ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்வேன். நீ அதிசயங்களை காணலாம். என்ன சொல்கிறாய்...'
மிரட்டும் தோரணையில் சொன்னாள் சிகப்பழகி. 
''போதும்... போதும்... உன் ஏமாற்று வேலையை புரிந்து கொண்டேன். என்னை மயக்கி அழைத்து வந்து, செவ்வாய் கிரகத்துக்கு கடத்த நினைக்கிறாய். அது நடக்காது. உன் கபட எண்ணத்தை புரிந்து கொண்டேன். மாயையில் இருந்து விடுபட விரும்புகிறேன்...'' 
இருட்டில் வேகமாக ஓடினாள் கீதா.
கோபம் கொப்பளிக்க, சிகப்பழகியின் கைகள் நீண்டு, கீதாவை இறுக பிடித்தது.
''என்னை விட்டு விடு...'' கெஞ்சினாள் கீதா.
எக்காளமாக சிரித்த சிகப்பழகி, 'அது எப்படி முடியும்; என் தலைவர் கட்டளையை மீற முடியுமா... சற்று நேரத்தில் நம்மை அழைத்து செல்ல மாய ராட்சச பறவை வரும்... அந்த நட்சத்திரத்தை பார்... அது தான் செவ்வாய் கிரகம்...'
அப்போது வானமே அதிர்ந்தது போல் பெரும் ஒலி கேட்டது. 
ராட்சத பறவையின் சிறகுகள் அடித்துக் கொள்ளும் சத்தம் கேட்டது. 
அதிர்ந்து போனாள் கீதா.
''காப்பாற்றுங்கள்... எனக்கு பெற்றோர் முக்கியம்; என்னை காப்பாற்றுங்கள்...'' 
அதே சமயம், சின்னசிட்டுவுடன் ஓடி வந்தான் குகன்.
'கீதா வசமாக சிக்கி விட்டாள். அதோ, வானத்தில் வருகிறது ராட்சச பறவை. அது, மந்திரவாதியால் உருவாக்கப்பட்டது. அந்த பறவை, பூமிக்கு வருவதற்குள் கீதாவை காப்பாற்ற வேண்டும். இல்லையேல் நம் முயற்சி வீணாகி விடும்...' என்றாள், சின்ன சிட்டு.
பதறியபடி, ''என்ன செய்யலாம்...'' என ஆலோசனை கேட்டான் குகன்.
'முதலில் கீதாவின் குரல் வந்த திசையில் சென்று பார்ப்போம்...'
நம்பிக்கையுடன் சின்னசிட்டு ஓடினாள். அவளை தொடர்ந்தான் குகன்.
கரடு முரடான சுரங்கபாதையில் கல்லும், முள்ளும் பாதங்களில் குத்தின. எதையும் பொருட்படுத்தாமல் ஓடினர்.
அப்போது, கீதாவின் கைகளைக் கட்டி, இழுத்தபடி ஓடினாள் சிகப்பழகி.
''ஐயோ... என்ன கொடுமை... எங்கே அழைத்து போகிறாள்...''
கவலையுடன் கேட்டான் குகன்.
'மந்திரவாதி அனுப்பியிருக்கும் ராட்சச பறவை இறங்கும் இடத்துக்கு... அது பூமியில் இறங்க சிறிது நேரம் தான் இருக்கிறது. அதற்குள் காப்பாற்ற வேண்டும். என் சக்தியை விட, அந்த தீயவளின் சக்தியே மேலோங்கி இருக்கும். இருந்தாலும், அவளுடன் சண்டையிட்டே ஆக வேண்டும்...
'எப்படியாவது, அவளது நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கான உபாயத்தை நீ தான் தேட வேண்டும். இந்த பூமியில் உங்களுக்கே அதுவும், தவ வலிமை உடையவர்களுக்கு சக்தி அதிகம்... கீதாவை காப்பாற்றும் வேலையை கவனி...' என்றாள் சின்ன சிட்டு.
அதே நேரம் சிகப்பழகியுடன், போருக்கு தயாரானாள் சின்ன சிட்டு. 
அது உக்கிரமாக நடந்தது. 
கண்களில் தீப்பொறி ஏற்படுத்தி, ஒருவர் மீது ஒருவர் ஏவி, அழிக்க முயன்றனர்.
எவரும் வெற்றி பெற முடியாத நிலை. மயங்கிய நிலையில் இருந்தாள் கீதா. 
அவளை உலுக்கி, சுயநிலைக்கு கொண்டு வந்தான் குகன்.
மெல்ல கண் திறந்தாள் கீதா.
''ஆபத்து... ஆபத்து... உடனே ஓடி தப்புவோம். சிகப்பழகி, மோசமானவள்... சிறுமிகளை கடத்துபவள்...'' என அவசரப்படுத்தினான் குகன்.
அழுதாள் கீதா.
சமாதானப்படுத்தியபடி, ''எல்லா விபரமும் எனக்கு தெரியும்... இப்போது தனித்து, தப்பித்து செல்ல முடியாது... சுரங்கப்பாதை கதவு மீண்டும் திறக்காது. எனவே, அதோ பார், ஒரு சின்ன உருவமாக, சிட்டு போல் இருக்கும் சிறுமி தான் காப்பாற்ற வந்தவள்... அவள் துணை புரிவாள்...'' என்ற குகன், நடந்த சம்பவம் பற்றி விசாரித்தான்.
''நம்ப முடியாதவற்றை எல்லாம் பார்த்தேன்... என்னால் வர்ணிக்கவே முடியாது...'' என்றாள் கீதா.
அப்போது, குகனுக்கு கேட்கும் படி, 'நாமும் ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும். அப்போது தான் கீதாவை காப்பாற்றும் உத்தி கிடைக்கும்...' என்றபடி இமைகளை வேகமாக சிமிட்ட முயன்றாள் சின்ன சிட்டு. 
அதை தடுத்தாள் சிகப்பழகி.
-- தொடரும்...
ஜி.சுப்பிரமணியன்

