
ரயில் பஸ்!
சாலையில் ஓடும்போது பார்ப்பதற்கு சாதாரண மினிபஸ் போல் தெரியும். வழியில் ரயில் தண்டவாளத்தை கண்டால் அந்த பஸ் குணம் மாறிவிடும். பஸ்சின் அடிப்பகுதியில் மறைந்திருக்கும், ஸ்டீல் சக்கரங்கள் வெளியே வரும். அதன் துணையால் தண்டவாளத்தில் ஓடும் ரயிலாக மாறிவிடும் அந்த பஸ்.
கிழக்காசிய நாடான ஜப்பானில், 'டுவல் மோடு வெகிகிள்' என புதிய தொழில் நுட்பத்தில் ரயில் - பஸ் வாகனம், 2020ல் அறிமுகமாகியுள்ளது.
விற்பனை உத்தி!
மனிதர்கள், தங்களை எடுப்பாக காட்டும் வகையில், கோட்டு என்ற உடையை அணிவர். இது இயல்பானது. ஆனால், ஒரு பெரிய கட்டடம் முழுக்க கோட்டுகளாக தொங்கினால் எப்படி இருக்கும். இது பற்றி பார்ப்போம்...
ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் உள்ளது கோபன்ஹேகன் நகரம். இந்த நகரில், 1936ல் தெருவில் சென்றவர்கள் ஓர் அபூர்வத்தைக் கண்டனர். ஐந்து மாடிகள் கொண்ட அந்த கட்டடத்தில், இடைவெளி இன்றி விலை உயர்ந்த கோட்டுகள் தொங்கவிடப்பட்டு இருந்தன.
இதை வேடிக்கை பார்க்க திரண்ட கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
துணி வியாபாரி கிறிஸ்டியன் ஸ்ட்ரோயல்ஸ்டவ் என்பவருக்கு சொந்தமான கடை அது. மிகப் பழமையானது. புதிதாக கட்டியிருந்த கட்டடத்தில் அந்த கடையை மாற்றினர். பழைய கடையில் ஆயிரக்கணக்கில் கோட்டுகள் விற்பனையாகாமல் கிடந்தன. அவை புதிய கட்டடத்தில் தொங்க விடப்பட்டிருந்தன. விலை அதிரடியாக குறைக்கப்பட்டிருந்தது.
இந்த நுாதன விளம்பரத்தால் அவற்றை வாங்க திரண்டனர் மக்கள்.
எதிர்பார்த்தபடி, கடையில் தேங்கியிருந்த அனைத்து கோட்டுகளும் விற்று தீர்ந்தன. பத்திரிகைகளிலும் இந்த உத்தி பற்றி படங்களுடன் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
எலும்புண்ணி!
ஒருவகை கழுகு, எலும்புண்ணி என அழைக்கப் படுகிறது. மெல்லிய அளவிலான எலும்புகளை பிரச்னையின்றி கொத்தித்தின்னும்.
குரல்வளை வழியாக விழுங்க முடியாத பெரிய எலும்புகளை கண்டால் கழுகின் மூளை வேலை செய்ய ஆரம்பிக்கும். பெரிய எலும்மை நகங்களால் பற்றியபடி உயரத்தில் பறக்கும்.
குறிப்பிட்ட உயரத்தில் பறந்து கொண்டிருக்கும்போதே, அந்த எலும்பை பாறைப்பகுதியில் போடும். விழுந்த எலும்பு இறைச்சியுடன் சில்லுகளாக உடையும். உடைந்து சிதறிய எலும்பை இந்த கழுகுகள் ருசித்து உண்டு ஏப்பம் விடும்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

