
ஆசிய - ஐரோப்பிய கண்டங்களை உள்ளடக்கிய ரஷ்ய நாட்டு மக்களால், புரட்சித்தாய் என்று போற்றப்படுபவர் குரூப்ஸ்காயா. உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக போராடியவர். பின்னாளில், ரஷ்ய புரட்சிதலைவர் லெனின் மனைவியானார்.
இவரது முழுப் பெயர் நெடஸ்தா கான்ஸ்டாண்டி நோவா குரூப்ஸ்காயா. தந்தை ராணுவ அதிகாரி; ரஷ்யாவில் ஜார் மன்னரின் ராணுவத்தில் பணியாற்றினார்; நேர்மை உள்ளம் உடையவர் என்பதால் ஊழலுக்குத் தடையாக இருந்தார்.
ஊழல் பெருச்சாளிகள் அவரை விடவில்லை. மேலதிகாரிகளை துாண்டி, குற்றச் சாட்டுகளைச் சுமத்தி பதவியைப் பறித்தனர்.
குடும்பத்தைக் காப்பாற்ற நிலப்பிரபுக்களிடம் அடிமையாக பணியாற்றினார். அப்போது பள்ளியில் படித்தார் குரூப்ஸ்காயா. விவசாயப் பண்ணைகளில் அடிமைகள் படும் துயரத்தை கண்டார். அதிகாரிகளின் ஆணவப் போக்கை மாற்றுவது பற்றி யோசித்தார். அப்போது, திமோ பேய்க்கா என்ற ஆசிரியையுடன் பழக்கம் ஏற்பட்டது.
புரட்சி எண்ணம் கொண்ட அந்த ஆசிரியை, உலக சரித்திர நிகழ்வுகளையும், மக்கள் நடத்திய புரட்சிகள் பற்றியும், மன்னராட்சியில் நிலவிய கொடுமைகள் குறித்தும் கதைபோல் அடிக்கடி கூறுவார். குரூப்ஸ்காயா மனதில், புரட்சி எண்ணம் வளர்ந்தது. சமூக இயக்கங்களுடன் தொடர்பு கொண்டார். அது, அரசுக்கு தெரிந்து விட்டது.
திடீரென அந்த ஆசிரியை கைது செய்யப்பட்டு, சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அது குரூப்ஸ்காயாவுக்கு அதிர்ச்சி தந்தது.
அந்த காலத்தில் ஏழை மாணவர்கள் தரையில் அமர்ந்துதான் பாடம் கேட்க வேண்டும்; பள்ளி துப்புரவுப் பணியையும் செய்ய வேண்டும். இந்த நிலையில் மிகவும் சிரமப்பட்டு படித்தார் குரூப்ஸ்காயா. ஆசிரியையாவதை லட்சியமாக கொண்டிருந்தார்.
ஒருநாள் மாணவர்கள் நடத்திய கூட்டம் ஒன்றிற்கு சென்றார். அங்கே, தத்துவ மேதை காரல் மார்க்ஸ் கருத்துக்களை மேற்கோள் காட்டி பலர் பேசினர். அந்த கருத்து, பிரச்னைகளை தெளிவாக அறியவும், திறம்பட வாதம் புரியவும், தீர்வு காணவும் உரிய வழிமுறையை கொண்டிருந்தது.
இந்த நிலையில் பள்ளியில் ஆசிரியை பணி கிடைத்தது. அங்கு அரசுக்கு எதிரான கருத்துக்களை விதைத்தார். புரட்சிக் கனவை துாண்டினார். இதையடுத்து அவரை கை விலங்கு பூட்டி இழுத்துச் சென்றது ராணுவம். புரட்சிக்காரி என்று குற்றம் சாட்டி, கொடிய சைபீரிய காட்டுப் பகுதி சிறையில் அடைத்தது.
குரூப்ஸ்காயா மனம் கலங்கவில்லை; அங்கு சிறை வைக்கப்பட்டிருந்த லெனினுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது; இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சிறையில் லெனின் எழுதிய புத்தகங்களைப் பிரதி எடுக்கும் பணியை செய்தார் குரூப்ஸ்காயா.
விடுதலையானதும் இருவரும் ஐரோப்பிய நாடான பிரான்ஸ், பாரீசுக்கு சென்றனர். தொடர்ச்சியாக வேலை, வறுமை, அலைக்கழிப்பு, பட்டினியால் வாடினார் குரூப்ஸ்காயா.
அந்த வேளை, ரஷ்யாவில் புரட்சி வெடித்தது. செய்தி அறிந்து, லெனினுடன் மாறுவேடத்தில், ரஷ்யா சென்றார். சோவியத் குடியரசு உருவாக உழைத்தார். பெண்களின் மேம்பாட்டுக்காக, ஒரு நுாலையும் எழுதினார். தொடர்ந்து பொதுச்சேவைகளில் ஈடுபட்டு வந்தார். ரஷ்யாவில், 1939ல் நடந்த மாநாட்டில் உரையாற்றினார். அங்கு ஓய்வெடுத்த போது, 70ம் வயதில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

