
ஒட்டகத்தில் அமர்ந்து பாலைவனத்தை கடந்து கொண்டிருந்தார் அரேபியர். வெப்பமும், புயலும் வருத்தின. நாள் முழுதும் பயணம் செய்து, உணவு, தண்ணீருக்காக மட்டும் எங்காவது நிற்பார். அன்று களைப்பு ஏற்பட்டதால், சற்று ஓய்வு எடுக்க கூடாரம் ஒன்று அமைத்தார். அதனுள் உறங்க சென்றார். கூடாரம் மிகவும் சிறியதாக இருந்தது.
அதன் வெளியே படுத்திருந்தது ஒட்டகம்.
இரவில் குளிர் ஆரம்பித்தது. அதில் நடுங்கியபடி, 'ஐயா... குளிர் அதிகமாகி விட்டது. தாங்க முடியவில்லை. என் தலையை மட்டும் கூடாரத்துக்குள் வைத்து கொள்ள அனுமதிக்க வேண்டும்...' என கெஞ்சியது ஒட்டகம்.
அதற்கு அனுமதித்தார் அரேபியர்.
சிறிது நேரத்தில், 'ஐயா... குளிர் மிகவும் வாட்டுகிறது; முன்னங்கால்களை மட்டுமாவது கூடாரத்தில் வைத்து கொள்ள அனுமதியுங்கள்...' என்றது.
அதற்கும் அனுமதித்து, குறுகிய இடத்தில் உடலை மடித்து படுத்துக் கொண்டார்.
நடு இரவானது.
'ஐயா... குளிர் தாங்க முடியவில்லை... என்னை உள்ளே வர விடுங்கள்...'
கெஞ்சலாக கேட்டது ஒட்டகம்.
'இங்கு சிறிதும் இடமில்லை; நீ உள்ள வர முடியாது; அங்கேயே இரு...'
கண்டிப்பாய் கூறினார் அரேபியர்.
'உள்ளே விடவில்லை என்றால், குளிரால் நடுங்கி இறந்து விடுவேன்; நீங்கள், பயணம் செய்ய முடியாது...'
கூறியபடியே கூடாரத்தில் நுழைந்த ஒட்டகம், 'இங்கு நல்ல வெது வெதுப்பாய் இருக்கிறது; நீங்கள் கூறியது சரிதான்; ஒருவர் மட்டும் தான் இங்கே இருக்க முடியும்; நீங்கள் வெளியே செல்லுங்கள்...' என எட்டி உதை விட்டது.
அரேபியர் கூடாரத்துக்கு வெளியே வந்து விழுந்தார். குளிரில் நடுங்கியபடியே படுத்திருந்தார்.
குழந்தைகளே... பாத்திரம் அறிந்து பிச்சையிட வேண்டும்.
கே.என்.ராமகிருஷ்ணன்

