PUBLISHED ON : ஆக 29, 2020

விரகனுார் பஞ்சாயத்து தலைவரிடம், விசித்திர வழக்கு வந்தது.
'வீட்டின் பின்புறம் வேலியை ஒட்டி நட்ட வாழை, குலைத்தள்ளி, பழுத்தது. கோவிலுக்கு எடுத்துப் போக முடிவு செய்திருந்தோம்... வாழைத்தாரை காணோம்...
வாழை மரம் வேலியைத் தாண்டி, வத்சலா வீட்டுப் பக்கம் தலைநீட்டியிருந்ததால், அவர்தான் வெட்டியிருக்க வேண்டும். விசாரித்து தீர்ப்பு சொல்லணும் ஐயா...' என்றாள் மேகலா.
வத்சலாவை அழைத்து, 'உங்களுக்குள் என்ன பிரச்னை அம்மா...' என்றார் தலைவர்.
'எங்க வீட்டில் கோழி உள்ளது. வேலியைத் தாண்டி, மேகலா வீட்டுப்பக்கம் முட்டையிடுகிறது. இதுவரை, 12 முட்டை இட்டுள்ளது; அவற்றை கொடுக்க மறுக்கிறாள். அதனால்தான், வாழைத்தாரை வெட்டினோம்... முட்டையை தந்தால், குஞ்சு பொறிக்க வைத்து, கோழி, சேவல் எல்லாம் கோவிலுக்கு கொடுக்க நினைத்திருந்தோம் ஐயா... நல்ல தீர்ப்புச் சொல்லுங்க...' என்றாள்.
'நாளை தீர்ப்பு சொல்றேன்...' என, இருவரையும் அனுப்பி வைத்தார் தலைவர்.
மறு நாள் -
இருவரும், காலையிலேயே காத்திருந்தனர்.
'வாழைமரம் மற்றும் கோழிக்கு ஆறு அறிவு இல்லை; வத்சலா வீட்டுப் பக்கம் குலை தள்ளினாலும் மேகலாவுக்குத் தான் சொந்தம். அதுபோல், மேகலா வீட்டில் முட்டை இட்டாலும், வத்சலாவுக்குத் தான் சொந்தம்; அவரவர் உடைமையை, அவரவரிடம் கொடுத்து சமாதானமாகச் செல்லுங்கள்... ஒற்றுமையாக இருந்தால் உதவியாக வாழ முடியும். விட்டு கொடுங்கள்...' என்று தீர்ப்பை வழங்கினார்.
குட்டீஸ்... அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படக் கூடாது; பக்கத்து வீட்டாரே, நெருங்கிய உறவினர். அன்புடன் விட்டுக் கொடுத்து வாழவேண்டும்.
ப.தேவி
