PUBLISHED ON : ஆக 29, 2020

வாய் பிளந்தான் மணி!
திருவனந்தபுரம், பத்மநாப சுவாமி கோவில் அருகே, கருவேல்புர கொட்டாரத்தின் உச்சியில், வடக்கு நோக்கி வித்தியாசமான சுவர் கடிகாரம் கவரும் வண்ணம் உள்ளது.
இதை, வாய்பிளந்தான் மணி என்பர். நாளிகை சூத்திரச் சுவடி என்று அந்த காலத்தில் அழைத்தனர்.
இது, 1892ல் அமைக்கப்பட்டது. இன்றும், துல்லியமாக நேரம் காட்டிக் கொண்டிருக்கிறது. விந்தையான அமைப்புள்ளது.
கடிகாரத்தின் மேல் பகுதியில், மீசை முறுக்கிய மனித பொம்மைத் தலை உள்ளது. அதன் இரு புறங்களிலும், ஆட்டுகிடா பொம்மைகள், எதிர் எதிரே நிற்பது போல் அமைக்கப்பட்டு உள்ளது.
கடிகார முட்கள், பகல் 1:00 மணியை காட்டும் போது, மனித பொம்மையின் வாய் மெதுவாக திறக்கும். முழுவதும் திறந்ததும், ஆட்டுக்கிடாய்கள் இரண்டும், ஒரே நேரத்தில் பாய்ந்து வந்து மனிதத் தலையில் மோதும். மணி, ஒருமுறை ஒலிக்கும். தொடர்ந்து, மனித பொம்மை வாய் மூடிக்கொள்ளும்.
பகல் 12:00 மணியானால் மனித வாய், 12 தடவை திறந்து மூடும். ஆட்டுக்கடாக்கள், 12 முறை முட்டி மோதும்.
அந்தக்கால தொழில் நுட்பத்தில் உருவாக்கப் பட்டது. இப்போதும் சுவாரசியத்துக்கு குறைவில்லை; மகிழ்வைத் துாண்டும் வகையில் உள்ளது.
இந்த கடிகாரத்தை உருவாக்கியவர் குளத்துாரான் ஆச்சார்யா. கேரள மாநிலம், வஞ்சியூரைச் சேர்ந்தவர். பூட்டு முதல் பீரங்கி வரை, பழுது நீக்குவதில் வல்லவர்.
அன்றைய திருவிதாங்கூர் மன்னர் மற்றும் ஆலப்புழையில் வசித்த ஆங்கிலேய அரசின் பிரதிநிதி ஜான்கால்டி கேட் ஆலோசனைப்படி இந்த கடிகாரத்தை உருவாக்கினார்.
நேரங்காட்டுவதற்கு எத்தனையோ கருவிகள் வந்துவிட்டன. ஆனாலும், திருவனந்தபுரம், பத்மநாப சுவாமி கோவில் செல்வோர், வயது வித்தியாசமின்றி, இதை அண்ணாந்து பார்த்து வாய்பிளந்து ரசிக்கத் தவறுவதில்லை.
வரலாற்றின் கையில் உள்ள காலப்பெட்டகம்.
கரடித்தோல் தொப்பி!
ஐரோப்பிய நாடான பிரிட்டிஷ் அரச குடும்ப விழாக்களில், ராணுவ வீரர்கள் நீண்ட சிவப்புத் தொப்பி அணிந்து அணிவகுப்பதை பார்க்கலாம்.
அந்த வகைத் தொப்பி கரடித்தோலால் செய்யப்பட்டது; 700 கிராம் எடையும், 46 செ.மீ., உயரமும் கொண்டது.
இந்த கரடித்தோல் தொப்பியின் பின்னணியில் ஒரு கதை உள்ளது. ஐரோப்பாவில் பிரான்சு நாட்டு மன்னர் நெப்போலியன், வாட்டர்லுா என்ற இடத்தில், ஒரு யுத்தம் நடத்தினார்.
கிட்டத்தட்ட, 27 ஆண்டுகள் நடந்த போரில், பிரான்சை முறியடித்தது பிரிட்டிஷ் ராணுவத்தின் முதல் ரெஜிமெண்ட் பிரிவு.
இந்த வெற்றியை பிரிட்டீஷ் வீரர்கள் வினோதமாக கொண்டினர். சரணடைந்த பிரான்சு வீரர்களின் தொப்பியை பறித்து வானில் வீசிப்பிடித்து எழிலாக அணிந்தனர். அந்தத் தோப்பி கரடித்தோலால் ஆனது.
அந்த சம்பவத்துக்கு பின், பிரிட்டிஷ் ராணுவ முதல் ரெஜிமெண்ட் படை சீருடையில் கரடித்தோல் தொப்பி இணைந்தது.
இன்றும் அந்தப் படை பிரிவினர் தான், கரடித்தோல் தொப்பியை அணிந்து, பிரிட்டிஷ் அரசு பிரமுகர்களின் அதிகாரப்பூர்வ காவலர்களாக உள்ளனர்.
இது போன்ற நீண்ட தொப்பி அணியும் வழக்கம், 18ம் நுாற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில் பரவலாக இருந்தது. அது வீரர்களின் உயரத்தை அதிகமாக காட்டியதுடன், கடும் குளிரையும் தாக்குப் பிடிக்கும் வகையில் இருந்தது.
தொப்பிக்காக கரடித்தோல் பயன்படுத்துவதற்கு எதிராக, விலங்கு பாதுகாவலர்கள் குரல் எழுப்பியதை அடுத்து, தற்போது செயற்கைத் தோல் பயன்படுத்தி, தொப்பி உருவாக்குகிறது பிரிட்டீஸ் அரசு.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.
