PUBLISHED ON : ஏப் 16, 2022

சென்னை, அசோக் நகர், ஜவஹர் வித்யாலயா ஆரம்ப பள்ளியில், 1968ல், 1ம் வகுப்பில் சேர்த்து, வீடு சென்றனர் பெற்றோர்.
மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருந்ததால் கூட்டமாக இருந்தது. வகுப்பை விட்டு வெளியே வந்தேன்; பள்ளி கதவுக்கும், ரோட்டுக்கும் சின்ன இடைவெளி இருந்தது. அதில் நுழைந்து வெளியேறி சாலைக்கு வந்தேன். போக்குவரத்து நெரிசல் மிகுந்திருந்தது.
வீட்டுக்கு செல்ல வழி தெரியாமல் தவித்தபடி நின்றிருந்தேன். அங்கு வந்த அண்ணனிடம் விலாசத்தை காட்டி, வீட்டில் சேர்க்க கெஞ்சினேன். அன்புடன் வீட்டுக்கு அழைத்து சென்றார்.
என்னை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர் பெற்றோர். விபரம் அறிந்து கடும் கோபம் அடைந்த அப்பா, பிரம்பால் அடி வெளுத்து விட்டார். அம்மா எவ்வளவு தடுத்தும், விடவில்லை.
விளாசி முடித்து மிகுந்த ஆவேசத்தில் அம்மாவிடம், 'இப்படி சொல்லாமல் வருவது தவறான முன்னுதாரணமாகிவிடும். உடனே, வகுப்பு ஆசிரியையிடம் அழைத்து சென்று நடந்ததை சொல்லு...' என்றார் அப்பா.
அம்மாவுடன் மீண்டும் பள்ளி சென்ற என்னிடம், 'நீ செய்தது மிகப் பெரிய தவறு; வீட்டுக்கு போக வேண்டும் என்று தோன்றினால், என்னிடம் அல்லவா கேட்டிருக்க வேண்டும். திருடனை போல் மறைந்து செல்லலாமா; நேர்மையை கடைபிடிப்பது முக்கியம் அல்லவா...' என்று அறிவுரைத்தார் ஆசிரியை. அது மனதில் பதிந்தது.
எனக்கு, 59 வயதாகிறது; பிரபல வங்கி ஒன்றில், நேர்மையாக பணிபுரிந்து, மேலதிகாரியிடம் நற்பெயர் பெற்றுள்ளேன். இளம் வயதில் நல்லதை விதைத்த அந்த ஆசிரியையை மனதில் கொண்டுள்ளேன்.
- டி.வி.ரவி, சென்னை.
தொடர்புக்கு: 82206 64409
