PUBLISHED ON : மார் 05, 2022

விழுப்புரம் மாவட்டம், மாம்பழப்பட்டு, அரசு மேல்நிலைப் பள்ளியில், 1977ல், எஸ்.எஸ்.எல்.சி.,
படித்தபோது, தலைமை ஆசிரியராக இருந்தார் சந்தானம்; மிகவும் கண்டிப்பானவர். என் வகுப்பாசிரியராகவும் இருந்தார். சரளமாக ஆங்கிலம் பேசி தெளிவாக பாடம் நடத்துவார்.
அன்று காலாண்டு தேர்வு ஆங்கில விடைத்தாளை திருத்தி கொடுத்தார். என் அருகில் அமர்ந்திருந்தவன் அதிக மதிப்பெண் பெற்றிருந்தான். என் மதிப்பெண்ணைப் பார்க்க முயன்றான். குறைவாக பெற்றிருந்ததால் பையில் அவசரமாகத் திணித்து மறைத்தேன்.
அதில் கசங்கிய விடைத்தாளைக் கண்டு, 'படிப்பில் அக்கறை காட்டாமல், விடைத்தாளை கசக்கி எறிந்தாயா... மதிய இடைவேளையில் என் அறைக்கு வா...' என கோபமாக சொன்னார் ஆசிரியர்.
மதிய உணவு இடைவேளையில் தயங்கியபடி சந்தித்தபோது, 'மற்ற பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளாய்... ஆங்கிலம் கடினம் என்று கவலைப்படாதே... பாடங்களை திரும்பத் திரும்ப எழுதி படி...' என அறிவுரைத்தார்.
அதை பின்பற்றி, பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன்.
என் வயது, 60; பள்ளியில் தமிழாசிரியராக பணி புரிந்த போது அந்த ஆசிரியர் காட்டிய வழியை பின்பற்றி, மந்தமாக கற்கும் மாணவர்களை திறம்பட கையாண்டேன். அதனால், தமிழக அரசு வழங்கிய டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதைப் பெற்றேன்.
- நா.வேலாயுதம், கடலுார்.
தொடர்புக்கு: 93606 44434
