PUBLISHED ON : மார் 05, 2022

முன்கதை: அன்டார்டிகா உறைபனியில் கிடந்த டைனோசர் உடலில் இருந்து, டைனோ குட்டியை உருவாக்கி சிறுவன் சந்திரஜெயனுக்கு பரிசளித்தார் விஞ்ஞானி யோகிபாபு. அது பொதுமக்களுக்கு தொந்தரவு செய்வதாக வழக்கு போட்டு பறிமுதல் செய்ய வந்தனர் போலீஸ் மற்றும் வன அதிகாரிகள். இனி -
போலீஸ் கமிஷனர், சந்திரஜெயனிடம் விசாரித்துக் கொண்டிருந்ததைக் கண்டு ஓடிவந்து, ''என் நண்பனின் டைனோவை தொடாதீங்க...'' என தடுத்தாள் தீவிதா.
'விலகிச் செல் சிறுமியே...' என, டைனோ வசித்த மரக்கூண்டை எடுத்தனர் அதிகாரிகள்.
சந்திரஜெயனின் வளர்ப்பு மிருகங்கள் மற்றும் பறவைகள் அவர்களை தாக்க ஆரம்பித்தன.
வேதனையில், 'பிராணிகளை அமைதியாக இருக்க சொல்லுங்கள்...' என்றனர் வன அதிகாரிகள்.
''தயவுசெய்து அமைதியாக இருங்கள் நண்பர்களே...'' என அன்பொழுகக் கூறினான் சந்திரஜெயன். அழுதபடி இருந்தது சின்சான்.
'என்னை காப்பாத்து' என, சமிக்ஞையில் சொன்னது டைனோ.
அதை கூண்டோடு துாக்கியபடி வண்டியில் ஏற்றினர் அதிகாரிகள்.
இதற்கிடையே அங்கு கூடிவிட்டனர் ஊர்மக்கள்.
'டைனோவை காட்டி தான், குழந்தைக்கு சோறு ஊட்டுறோம்; அதை கெடுத்திராதீங்க; அந்த மிருகம் எந்த தொந்தரவும் யாருக்கும் கொடுக்கல; அதை விடுங்க...'
- வன விலங்கு அதிகாரிகளிடம் முறையிட்டனர் ஊர்மக்கள்.
'எங்களை பணி செய்ய விடாமல் தடுத்தால், சட்டம் உங்கள் மீதும் பாயும்...'
- வன விலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்தனர்.
இதை கேட்டு, ஆதரவு குரல் கொடுத்தோர் பம்மினர்.
டைனோவுடன், காவல் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கிளம்பினர்.
''டைனோ... உன்னை திரும்ப பெறாமல் ஓய மாட்டேன்...''
கதறியபடி சபதம் ஏற்றான் சந்திரஜெயன்.
ஊடகங்கள் இரண்டாய் பிரிந்து, சந்திரஜெயனுக்கு ஆதரவு தெரிவித்தும், அதேசமயம், எதிராகவும் செய்திகளை வெளியிட்டன. மக்களிடம் கருத்து கேட்டு பதிவு செய்தன.
'ஒரு ஆட்கொல்லி மிருகத்தை வீட்டில் வளர்த்து, பொது மக்களுக்கு அச்சுறுத்தலாய் விளங்கி இருக்கிறான் சிறுவன் சந்திரஜெயன். இத்தனை நாள், அவனை ஏன் விட்டு வைத்தது காவல் துறை...' என கேள்வி கேட்டன சில ஊடகங்கள்.
'மிருகங்கள் மற்றும் மனிதர்களுக்கு இடையே, நல்லுறவை அரசு ஊக்கப்படுத்த வேண்டும். ஊக்கப்படுத்தாமல் இருந்தால் கூட போகட்டும்; ஆனால், களங்கப்படுத்தாமல் இருக்கலாம்; சந்திரஜெயனிடம் டைனோவை மீண்டும் ஒப்படைக்க வேண்டும்...' என பேசினர் ஊர்மக்கள்.
பதறியடித்து வந்து சேர்ந்தார் விஞ்ஞானி யோகிபாபு.
வழக்கறிஞர் ஆலோசனையில் வழக்கு தொடரப்பட்டது. அது உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சந்திரஜெயனுக்கு ஆதரவாக வழக்கறிஞர், வாதத்தை நீதிமன்றத்தில் எடுத்துரைத்தார்.
''நீதிமன்றம் வித்தியாசமான வழக்கை சந்தித்துக் கொண்டிருக்கிறது; உலகில், 100 கோடி வகை ஜீவராசிகள் உள்ளன; ஒவ்வொன்றும் அன்பால் இணைக்கப்பட்டுள்ளன... அன்பு என்பது பிரபஞ்ச மொழி; ஒரு ஜீவராசி தனக்கு உயிராபத்து ஏற்படுத்தும் என்றால், அந்த ஜீவராசியிடமிருந்து மற்றொன்று விலகி ஓடும்...
''அன்பு இருந்தால், யானை, பூனை கூட நண்பர்களே... கொடிய விலங்கு, வளர்ப்பு மிருகம் என, இரண்டு வகை உயிரினத்தை இயற்கை உருவாக்கவில்லை; மனிதன்தான் பிரித்து பார்க்கிறான்...
''சிங்கத்துடன், தோழமையோடு பழகுகிறாள் ஒரு பெண்; ஆழ்கடலில் நீந்தி, ஆக்டோ பஸ்சுடன் கொஞ்சி விளையாடுகிறார் ஒருவர். கப்பல் பயணியருடன் துள்ளி விளையாடுகிறது திமிங்கலம்; பாம்பை மாலையாக அணிந்து விளையாடுகிறாள் ஒரு சிறுமி...
''கும்பிடு போடும் இளைஞரை, எந்த தீங்கும் செய்யாமல் விலகி செல்கிறது யானை. தேனீக்களை உடலில் கூடு கட்ட அனுமதிக்கிறார் ஒரு இளைஞர்; அன்பு காட்டினால், மிருகங்கள் நட்பாய் மண்டியிடும்; டைனோசரை, யாராவது பார்த்திருப்போமா...
''கறுப்பா, சிவப்பா, சைவமா, அசைவமா என யாருக்கு தெரியும்... விஞ்ஞானி யோகிபாபு, டைனோசர் சதையில் இருந்து மரபியல் வரைப்படம் கண்டுப்பிடித்து, போன்சாய் உத்தியில், டைனோ குட்டியை உருவாக்கி பரிசளித்துள்ளார்...
''ஆட்கொல்லியின் குணம், அளவை மாற்றி, வீட்டில் வளர்க்கும் வகையில் உருவாக்கியுள்ளார்; அது பொமேரியன் நாய்குட்டி போல சாதுவானது... ஒரு அடி உயரத்துக்கு மேல் வளராது; ஐந்து கிலோ எடைக்கு மேல் கூடாது; வன விலங்கு பாதுகாப்பு சட்டத்திற்கு உட்பட்ட மிருகமல்ல; அது மக்களை துன்புறுத்தவும் இல்லை...
''டைனோ ஒரு காட்சி பொருள் என எண்ணி, மக்கள் அதைக் கண்டு புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்; இது மனிதன் - மிருகம் இடையேயான உறவில், புதிய அத்தியாயத்தை துவக்கியுள்ளது...
''மனிதருக்காக தான் சட்டமே தவிர, சட்டத்திற்காக மனிதன் கிடையாது; அதனால், வழக்கிலிருந்து சந்திரஜெயனை விடுவிக்க வேண்டும். டைனோவை மீண்டும் அவனிடம் ஒப்படைக்க கேட்டுக் கொள்கிறேன்...'' என அமர்ந்தார் சந்திரஜெயனின் வழக்கறிஞர்.
- தொடரும்...
- வஹித்தா நாசர்
