
விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஊராட்சி ஒன்றியம், ஆற்காடு கழக உயர்நிலைப் பள்ளியில், 1963ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்த போது வகுப்பாசிரியர் என்.கோபாலகிருஷ்ணய்யர். அன்று மதியம், முதல் பாடவேளையில், பாபர் படை எடுப்பு பற்றிய வரலாற்று பாடத்தை நடத்திக் கொண்டிருந்தார். அப்போதெல்லாம், கரும்பலகையில் தரும் குறிப்பை, பாட நோட்டில் கவனமுடன் எழுத வேண்டும்.
நோட்டு புத்தகம் எடுத்து போகாததால், சக மாணவன் எழுதியதை பார்த்துக் கொண்டிருந்தேன். இதை கவனித்தவர், 'என்னடா செய்ற...' என்று காதை திருகி, பெஞ்ச் மேல் நிறுத்தினார். மீண்டும் கேள்வி பதில் எழுதி போட்டவர், தனியே அழைத்து அறிவுரை கூறினார். பின், தவறாமல் நோட்டு புத்தகம் எடுத்து வந்து, முறையாக பாடங்களை எழுதி கவனித்தேன். நன்றாக படித்து, பொது தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன்.
போக்குவரத்து வசதியற்ற பின் தங்கிய கிராமத்தை சேர்ந்தவன் நான். பள்ளிப்படிப்பை முடித்து அடுத்து என்ன செய்வதென்று தெரியாது திணறிய போது, ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து படிக்க உதவினார் அந்த ஆசிரியர். என் வயது, 74; அவரது வழிகாட்டுதலில் ஆசிரியர் பணி ஏற்று, நல்லாசிரியர் விருதுடன் ஓய்வு பெற்று சிறப்புடன் வாழ்கிறேன்.
- ந.குணசேகர், புதுச்சேரி.
தொடர்புக்கு: 88707 75966

