
திருச்சி, புனித பிலோமினா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1996ல், 10ம் வகுப்பு படித்தேன். வகுப்பு ஆசிரியை ஸ்டெல்லா, பெற்ற தாய்க்கு சமமானவர்; முற்போக்கு சிந்தனை உடையவர்.
நாட்டு நடப்பை அறிந்து கொள்ளும் வகையில் தினமும் செய்திதாள் படிக்க வலியுறுத்துவார். வகுப்பில் பாடம் ஆரம்பிக்கும் முன், அன்றைய முக்கிய செய்திகளை கூறுவார். கல்வி சம்பந்தமாக கட்டுரைகள் வந்தால் பத்திரப்படுத்த சொல்வார்.
தன்னம்பிக்கை, தன்மானத்துடன் சுயகாலில் நிற்க வலியுறுத்தி வந்தார்; ஏழ்மை நிலையிலிருந்தவர்களுக்கு, புத்தகம், பேனா வாங்கி தருவார். நான் பிளஸ் 2 முடித்ததும், திருமணம் முடிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. சில ஆண்டுகள் கூட இணைந்து வாழ முடியவில்லை.
பிரிந்து, தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். சுயமாக உழைத்து இரு குழந்தைகளை வளர்க்கிறேன். தற்போது, என் வயது, ௪௦; என் உள்ளத்தில் அந்த ஆசிரியை விதைத்த தன்னம்பிக்கை, உழைப்பாக வழி நடத்துகிறது.
- கே.சையது ராபியத்துல் பசரியா, திருச்சி.

