
காரைக்குடி, முத்துக்கருப்பன் விசாலாட்சி முனிசிபல் உயர்நிலைப் பள்ளியில்,1958ல், 10ம் வகுப்பு படித்த போது, கற்பதில் மந்தமாக இருப்பேன். குடும்ப சூழ்நிலையால் டியூஷன் வைக்க வசதியில்லாமல் தவித்து வந்தேன்.
வகுப்பாசிரியர் ராஜாராமன் ஒருநாள், 'வகுப்பு முடிந்தவுடன், என் அறையில் வந்து பார்...' என்று கூறினார். அதன்படி சந்தித்த போது, 'தினமும் டியூஷனுக்கு வந்து விடு. பணம் எதுவும் தர வேண்டாம். காலையில் முன்னதாகவே புறப்பட்டு என் வீட்டுக்கு வா...' என்று கூறி, விலாசத்தை கொடுத்தார்.
அதன்படி சென்றேன். ஒவ்வொரு நாளும் பாடங்களைக் கற்று தந்து, வீட்டு வேலைகளையும் கவனிப்பார். மிகவும் கனிவுடன் ஆதரித்து, ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் சிறப்பு பயிற்சி தந்தார்.
பின்னாளில், பெரிய நிறுவனத்தில் பணியில் சேர இது உதவியது. இந்தியா முழுதும் சுற்றி, 'சேல்ஸ் எக்ஸிக்யூட்டிவ்' என்ற பணியை மகிழ்ச்சியுடன் செய்தேன். இப்போது எனக்கு, 78 வயதாகிறது; முழு மனதுடன், பிரத்யேகமாக நேரம் ஒதுக்கி கற்பித்து வாழ்க்கையில் ஒளி ஏற்றிய, அந்த ஆசானை தினமும் வணங்குகிறேன்.
- வி.ராஜூ, சென்னை.
தொடர்புக்கு: 97910 08579

