
திண்டுக்கல் மாவட்டம், புனித மரிய அன்னை உயர்நிலைப் பள்ளியில்,1964ல், 9ம் வகுப்பு படித்தேன். அந்த காலத்தில், 'காம்போசிட் மேத்ஸ்' என்ற கணக்கு பாடம் மிகவும் சிறப்பானது. ஆனால், கடினமானது. யாரும் விரும்பி படிப்பதில்லை.
நான் தைரியமாக, அதை தேர்வு செய்திருந்தேன். கணித ஆசிரியர் சிவன்பிள்ளை மிகவும் கண்டிப்பானவர். சதா வெற்றிலை, பாக்கு குதப்பியபடி இருப்பார். பாடத்தை துவங்கினால், வகுப்பறை அமைதியாகி விடும். கல்வி ஆண்டின் துவக்கத்தில், நோட்டு புத்தகங்களின் முகப்பு பக்கத்தில், 'கடவுளை நினை... கடமையை செய்... கடினமாய் உழை...' என்ற முத்தான வாசகங்களை கட்டாயம் எழுத சொல்வார்.
இவற்றின்படி, அன்றாடம் செயலை அமைத்துக் கொள்ள கனிவுடன் கூறுவார். தினமும் படித்ததால் அந்த வாசகங்கள் மனதில் பதிந்தன. அது வாழ்வில் எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.
எனக்கு, 72 வயதாகிறது. வகுப்பில் அந்த ஆசிரியர் போட்ட அடித்தளத்தை முறையாக கடை பிடித்து வாழ்வில் உயர்ந்துள்ளேன்.
- பி.முனிசாமி, திண்டுக்கல்.
தொடர்புக்கு: 96884 40155

