தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஹாலோவீன்!

ஹாலோவீன்!

ஹாலோவீன்!


PUBLISHED ON : ஜூலை 20, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 20, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹாலோவீன் என்னும் வித்தியாசமான சொல்லை, அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். அப்படி என்றால் என்ன... ஹாலோவீன் என்பது, மேற்கத்திய நாடுகள் பலவற்றில் கொண்டாடப்படும், ஒரு வித்தியாசமான திருவிழா!

தமிழகத்தின் அறுவடைத் திருவிழா, பொங்கல். அதுபோன்று, அயல்நாடுகளில், அறுவடைக் காலம் முடிந்ததை, அறிவிக்கும் வகையில், 'சம்ஹென்' என்ற பெயரில், ஒரு திருவிழா கொண்டாடப்பட்டது. அந்த, 'சம்ஹென்' என்ற பெயரே திரிந்து, இன்று, 'ஹாலோவீன்' என மாறியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்படும் ஹாலோவீன், தற்போது, ஆவிகளை ஆராதிக்கும் திருவிழாவாக மாறி விட்டது. இறந்த பின், ஆவிகளாக அலைந்துக் கொண்டிருக்கும் மக்கள், பொறாமை காரணமாக, பூமியில் வாழும் மனிதர்களுக்கு பல வகையில், துன்பங்கள் விளைவிப்பர் என, நம்புகின்றனர். எனவே, ஆவிகளை திருப்திப்படுத்த, ஆடு, மாடுகளின் எலும்புகளை அக்னிக்கு இரையாக அளிக்க துவங்கினர். அப்படியும் திருப்தி கொள்ளாமல், துன்பம் விளைவிக்க வரும் ஆவிகளை எப்படிச் சமாளிப்பது...

உடலின் முக்கியமான பகுதி தலையல்லவா... ஆகவே, பூசணிக்காய் மற்றும் நுாக்கல் போன்ற காய்கறிகளைப் பயங்கரமா மனித தலைகளை போல் செதுக்கி, வாசல்களில் வைத்து, தொல்லை கொடுக்க வரும் தீய சக்திகளை பயமுறுத்தி விரட்டுகின்றனர்.

மேலும், ஆவிகளை அமைதிப்படுத்தும் வகையில், தீய சக்திகளைப் போல் வேடம் அணிந்து, இரவு முழுவதும், குழந்தைகள், வீடு வீடாகச் செல்கின்றனர்.

பேய்கள், எலும்புக் கூடுகள், மந்திரக்காரக் கிழவிகள் என ஆரம்பித்து, 'டிவி' தொடர்களில் வரும் பேய்க் கதாபாத்திரங்களைப் போலவும், குழந்தைகள் வேஷமிடுவர். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நிற்கும் குழந்தைகள், 'மிட்டாய் தருகிறாயா... இல்லை மிளகாய் சாப்பிடுகிறாயா...' என்று வினவுவர்.

வீட்டின் சொந்தக்காரர் ஏதும் பரிசுப் பொருட்களோ, இனிப்புகளோ தரவில்லை எனில், அவர்கள் மீது திடீரென்று பனிக் கட்டிகளை எறிவர் குழந்தைகள். யாரும் அறியா வண்ணம், பின் வாசல் வழியாக, வீட்டின் உள்ளே நுழைந்து, கூச்சலிட்டு, வீட்டில் உள்ளவர்களை திடுக்கிட வைப்பர் அல்லது ஏற்கனவே பல வீடுகளில் இருந்து பெற்று வந்த சாக்லெட்டுகளையும், மிட்டாய்களையும் அவர்கள் மீது எறிவர்.

குழந்தைகளின் தீங்கு விளைவிக்காத இந்த குறும்பு விளையாட்டுகளை ரசிப்பதற்கென்றே, பெரியவர்கள், குழந்தைகளுக்குப் பரிசுப் பொருட்களை உடனே தராமல், சற்றுநேரம் அவர்களோடு விளையாடி, அதன் பின் பரிசு கொடுத்து மகிழ்வர்.

சில பகுதிகளில் குழந்தைகள் பாட்டுப் பாடியோ, நடனமாடியோ பேய்க் கதைகளைச் சொல்லியோ, தங்கள் இனிப்பை பெறுவர்.

சர்க்கரைப் பாகில் தோய்த்தெடுக்கப்பட்ட ஆப்பிள், பூசணி, பாப்கார்ன், சாக்லெட்டுகள் போன்ற இனிப்புகளை பரிமாறிக் கொள்வர். கருப்பு மற்றும் ஆரஞ்சு வண்ண உடைகளை இத்திருவிழாவின் போது அதிகமாக அணிவர்.

இத்திருவிழாவை அடிப்படையாக கொண்டு, ஹாலிவுட்டில் தயாரிக்கப்படும் பயங்கரமான பேய்ப் படங்கள், உலகம் எங்கும், எக்கசக்க வரவேற்பை பெற்றுள்ளன.

- சாரதா விஸ்வநாதன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us