தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஆவிகள் இல்லையடி பாப்பா! (11)

ஆவிகள் இல்லையடி பாப்பா! (11)

ஆவிகள் இல்லையடி பாப்பா! (11)


PUBLISHED ON : ஜூலை 20, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 20, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்றவாரம்: பெரிய ராஜா பற்றிய கதையை கூறினார், காளியப்பனின் தந்தை. இனி -

''முதலில், அவனது மந்திர வேலைகள் மன்னருக்கு பிடிக்கவில்லை. ஆனால், 'சகோதரன் சோமன் செய்த மந்திரத்தால் தான் நமக்கு குழந்தை பாக்கியமே வரக்காரணம்...' என்று கூறி, சப்போட்டா பழகாரி மன்னரை வசியப்படுத்தி, சம்மதிக்க வைத்துவிட்டாள்.

''அரண்மனையில், சோமனும், அவள் சகோதரியும் வைத்தது தான் சட்டம். பட்டத்து ராணி மிகவும் சாது; அவர்கள் எதையுமே கண்டு கொள்ளவில்லை; ஆனால், மன்னர் பட்டத்து ராணியிடமும் அன்பாகவே நடந்து கொண்டார்; இருப்பினும், அரண்மனை கைதிபோல் ஆகிவிட்டார் மன்னர் ராஜ ராஜ சிம்மர்.

''அதே போல், அரண்மனை ஆட்களும் மாற்றப்பட்டு சோமனின் உறவினர்களும், அவன் இனத்தை சேர்ந்த காட்டு வாசிகளும் அரண்மனையில் குடியேறினர். இது பிடிக்காமல், பணியில் இருந்த வேலையாட்களும், நின்று விட்டனர். மன்னர் மிகுந்த மன வருத்தம் அடைந்தார்.

''என் தந்தை மட்டும் ராஜாவுக்காக, அரண்மனைக்கு சென்று கொண்டிருந்தார். அவருக்கு சம்பளம் கூட கொடுக்க மறுத்துவிட்டான் சோமன். அப்போதுதான், அந்த நல்ல செய்தி வந்தது. ஆம்... பட்டத்து ராணி கருவுற்று இருப்பதாக அரண்மனை வைத்தியர் கூறினார். மன்னர் வெகுண்டார்; ஆனால், பிரயோஜனமில்லை; அவருக்குத் தான் எந்த அதிகாரமும் இல்லையே.

''பின், ஒரு முடிவு செய்தார்; 'பட்டத்து ராணியை அரண்மனையில் வைத்திருந்தால், அது அவள் உயிருக்கே ஆபத்தாக முடியலாம்...' என்று எண்ணி, என் தந்தையை அரண்மனைக்கு வரவழைத்து, தன் அச்சத்தை கூறி, அதை நிறைவேற்றும்படி வேண்டினார்.

அன்று அமாவாசை, நடு இரவில் கொட்டும் மழையில், இடுகாட்டு வழியாக குறுக்கு வழியில், லாவகமாக குதிரை வண்டியை ஓட்டி சென்ற போது, இடுகாட்டில், உக்கிர பூஜையில் இருந்த சோமன், அதை பார்த்து விட்டான். 'டேய் யாருடா... நில்; இல்ல உங்கள் மேல் ஆவியை ஏவி விடுவேன்...' என்று எச்சரித்தும், என் அப்பா நிற்க வில்லையாம்; ராணி கூட பயந்து நிற்கச் சொன்னார்களாம்; ஆனால், என் தந்தை துணிச்சலுடன் இன்னும் அதிவேகத்தில், வண்டியை ஓட்டியிருக்கிறார்.

''என் தந்தை, பத்திரமாக மகாராணியை அவர்கள் பெற்றோரிடம் ஒப்படைத்து, மன்னர் ஆலோசனைப்படி அங்கேயே தங்கி விட்டார்.

''ஒரு நாள், மகாராணிக்கு ஆதவ வம்சமே விருத்தியாகும் படி, ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பெரியவர் சற்று நிறுத்தி, அவர்தான் இப்போது இருக்கும் ராஜா, நம்ம ராமு தம்பியின் அப்பா!

''செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தார் மன்னர்; குழந்தையை பார்க்க துடித்தார்; ஆனால், சப்போட்டா பழகாரி சுந்தரியும், அவள் அண்ணன் சோமனும், அவர் உடல் நிலையை காரணம் காட்டி, அரண்மனை வைத்தியர்களை கையில் போட்டு, செல்ல விடாமல் தடுத்து விட்டனர்.

''சோமன், நான் அங்கு செல்வதற்கு முன்பே, தன் இனதவன் ஒருவனை அனுப்பி, மகாராணிக்கு எதையோ பருக கொடுத்து, குழந்தையை கொல்ல முயன்றுள்ளான். அதை தடுத்து நிறுத்தி, குழந்தையை துாக்கியபடி ஓட்டமாக ஓடி, 'மன்னா... மன்னா... இந்தாருங்கள் உங்கள் வாரிசு...' என்று கூறி, குழந்தையை மன்னர் மடியில் கிடத்திவிட்டு, ஓடி வந்த களைப்பில், மயங்கி விழுந்திருக்கிறார் என் தந்தை நாகப்பன்.

''ஒரு பக்கம் மட்டற்ற மகிழ்ச்சி; அடுத்த பக்கம் நாகப்பன் மயங்கி விழுந்ததில், ஏற்பட்ட மன வருத்தம். அரண்மனைக்கு உண்மையான வாரிசு வந்ததும், கொட்டம் போட்ட சப்போட்ட பழக்காரியும், சோமனும், மன்னருடன் பகை கொண்டு, தன் இனத்தவர்களையும் அழைத்து, அரண்மனையிலிருந்து வெளியேறினர்.

''சில ஆண்டுகளுக்கு பின், சாதாரண மந்திரவாதியாக இருந்த சோமன், கொடூர மந்திரவாதியானான். சப்போட்டா பழக்காரி விஷ ஜந்து கடித்து, இறந்தாள். நிறைய சப்போட்டா பழங்களை போட்டு அவளை புதைத்தனர். அவள் புதைக்கப்பட்ட புதை குழி எதிரில், ஒரு சப்போட்டா மரக்கன்றை நட்டனர்.

''சோமன் மட்டும் அங்கிருந்து வரவே இல்லை. கடும் மந்திரம் கூறியபடி, மூன்று நாட்கள் இருந்தான். அவள் இறந்த பிறகு தான், அரண்மனைக்கு கேடு வந்தது.

''அடுத்த மூன்று நாளில், மூத்த ராஜா மாரடைப்பால் காலமானார். அரண்மனை பூஜை அறையில் வெடிப்பு ஏற்பட்டது...'' என்று கூறி கொண்டே, ''டேய் காளியப்பா... உடனே இந்த இடத்தை தோண்டுடா...'' என்றார் பெரியவர். அங்கேயும் பொம்மை தான் இருந்தது. அதில் இருந்து, ஒரு தங்க சப்போட்டா பழம் ஓடியது.

அச்சமயம், அந்த பயங்கரம் நிகழ்ந்தது; 'சர சர' என்ற பெரும் சத்தம்... உடனே, எதிரில் இருந்த சப்போட்டா மரம் முறிந்து விழுந்தது. அதில் இருந்த பழங்கள் எல்லாம் உருண்டு, அவர்கள் தோண்டிய குழியை மூடின. அவர்கள், அதை ஒரு பயத்துடன் பார்த்தபடி இருந்தனர்.

மறுபடியும் பக்கத்தில் இருந்த குழியை தோண்டும் போது, மூக்கை துளைக்கும் சந்தனம், ஜவ்வாது வாசம் வீசியது.

''அப்பா... இங்க சந்தனப் பூ சுற்றி, தங்க பெட்டி இருக்குப்பா...'' என்றான்.

அதை திறந்து பார்த்ததில், ஒரு முழு உருவம், தலையில் இருந்து, கால் வரை முடியை படர விட்டு, முகத்தை மூடி படுத்திருக்க, அதன் மார்பு மீது, ஆறடி ராஜ நாகம் படம் எடுத்து காத்திருந்தது.

கம்பை எடுத்து, தலையை மூடியிருந்த உருவத்தின் முடியை விலக்கினார்.

'ஐய்யய்யோ... இவன் சோமன்... ஓடுங்க... ஓடுங்க... ஆபத்து... ஆபத்து...'' என்று பெரியவர் கூக்குரல் இட, கடும் சினத்துடன் எழுந்தான், சோமன்.

பெரியவர் அறிவுரைப்படி, அனைவரும் ஓடினர். ஓடியதில் காட்டு பகுதிக்கு வந்துவிட்டனர். சல சலப்பு சத்தம் கேட்டு, ''யாரங்கே நில்...'' என்று ஒரு குரல் கேட்டது.

குதுாகலம் அடைந்த பெரியவர், 'ஆஹா... அதே குரல்... அதே குரல்...'' ஆனந்த கூத்தாடினார். யார் பேச்சையும் கேட்காமல், எல்லை தாண்டினார். பெண் குரல், வந்த திசை நோக்கி ஓடினார்; பார்த்தார்; திகைத்தார்; வயதான சரீரம். ஆனாலும், அதே கம்பீரமான பார்வை.

''ராஜமாதா, நீங்களா... உங்களை, ஏதோ மிருகம் கொன்று விட்டதாக அல்லவா படுபாவி சோமன் கூறினான்...'' என்று, 'ஓ...' என அழுதபடி, ராஜமாதா மகாராணியின் பாதங்களில் விழுந்தார் பெரியவர்.

உற்று உற்று பார்த்தாள் ராஜமாதா. உடனே, ராமுவை அழைத்து வந்து, ''இதுதான் உங்கள் வம்சம் தழைக்க வந்த, ஆல விழுது...'' என்றபடி, ராமுவின் கையை, ராஜ மாதாவின் கரங்களில் ஒப்படைத்தான்.

''ஏம்பா... உன் அப்பா ஆதவன் எப்படி இருக்கான்...'' என்று, ராஜ மாதா, ராமுவை கேட்டதும், மாரியப்பனை பார்த்தான்.

''சின்ன ராஜ என்ன பார்க்கிறீங்க... இவங்க தான், உங்க அப்பாவை பெத்தவங்க; உங்க பாட்டியம்மா; நம்ம அரண்மனை ராஜமாதா...'' என்றதும், ராமு மகிழ்ந்து, பாட்டியின் கால்களில் விழுந்தான்.

''அப்பா நன்றாக இருக்கிறார்; ஆனால், அரண்மனைக்கு சில கேடுகள் இருக்கின்றன. அவற்றை களைய, முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்...'' என்றான், ராமு.

''அந்த சோமன் இருக்கும் வரை, பிரச்னை தான். பேசாமல், அனைவரும் இங்கு வந்து விடுங்கள். நமக்கு அரண்மனை வாசமே வேண்டாம். அரண்மனை இல்லாமல், நான் நிம்மதியாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...'' என்றார் ராஜ மாதா.

''இப்போது தாங்கள், யார் உதவியுடன் இங்கு இருக்கிறீர்...'' என்று, பணிவுடன் கேட்டான், மாரியப்பன்.

'அம்மா... அம்மா...' ஒரு குரல் வந்தது.

''தம்பி... நீங்க... நீங்க... ஜோசியர் மகன் தானே...'' கேட்டார் பெரியவர்.

''ஆமாம்... சரியான தருணத்தில் தான் கூடியிருக்கிறோம்... என் அப்பா எழுதிய ஜோதிட ஓலையில், நாளைய தினம், 'பஞ்சமி திதி' அன்று, ஒரு பேரழிவு நடக்க இருக்கிறது. அதை நாம் தடுத்தாக வேண்டும்...''

''அதெப்படி...''

''மூத்த ராஜாவின் ஜாதகப்படி, 'பஞ்சமி திதி' அன்று, அரண்மனை அழியும் அல்லது தீயவர் மடிவர். எனவே, நாம் அரண்மனையை காக்கவும், ராஜாவை பாதுகாக்கவும் செல்ல வேண்டும்...'' என்றார் ஜோதிடர் மகன்.

ஜோதிடர் சமாதியில் இருந்து எடுத்த ஓலை சுவடியிலும், 'பஞ்சமி திதி' என்று தான் எழுதப்பட்டு இருந்தது. ஆனால், அதை சொன்னால், மூத்த ராஜா தான், ஜோதிடரை கொன்றார் என்ற விபரம் தெரிந்து விடும். அதனால், யாரும் அது பற்றி வாய் திறக்கவில்லை.

ராஜமாதாவுக்கு பல்லக்கு தயார் செய்து, அனைவரும் அவர்கள் பயணத்தை துவக்கினர்.

வெகு துாரம் சென்றதும், ''சிறிது நேரம், இங்கு அமர்ந்து சென்றால் என்ன...'' என்று கேட்டார் ராஜமாதா.

ஜோதிடர் மகனும், ''அப்படியே செய்யலாம்...'' என்றான்.

அப்போது, ராஜமாதா அருகில் வந்தான் ராமு.

''பாட்டி... நீங்க எப்படி தப்பிச்சிங்க... சோமனுக்கு தெரிந்தால், உயிருடன் விட மாட்டானே... கொஞ்சம் விவரமாக சொல்ல முடியுமா...'' என்று கேட்டான்.

''அன்று, பல்லக்கில் இருந்த நான், மெல்ல மயக்கம் தெளிந்து எழுந்தேன்; அருகில், குழந்தை இல்லாது தவித்தேன்; அழுதேன்...

அப்போது -

- தொடரும்...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us