PUBLISHED ON : ஜூலை 20, 2018

கடந்த, 1967ல், உயர்நிலைப் பள்ளியில், 12ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்ச்சி! மதிய உணவு இடைவேளையில், எங்கள் ஆசிரியர், முஸ்லீம் மாணவன் ஒருவனை அழைத்து, 'கற்கண்டு வாங்கி வா...' என்று, 10 பைசா கொடுத்தார். அந்த மாணவன் கடைக்கு சென்று, வெகுநேரம் ஆகியும் வரவில்லை.
ஆசிரியர், வேறு மாணவரை அனுப்பி தேடிவரச் சொன்னார். வெகு நேரத்திற்குப் பின் இருவரும் வந்தனர்.
'ஏன் தாமதம்...' என்று கேட்க, '10 பைசாவுக்கு எல்லாம் கற்கண்டு கொடுப்பதில்லை...' என்று கடைக்காரர் கூறவும், வீட்டிற்கு போய், 50 காசு எடுத்து வந்து, கற்கண்டு வாங்கியதால் நேரம் ஆகி விட்டது ...' என்று கூறி, பொட்டலத்தை கொடுத்தான்.
விவரம் தெரிந்த, மாணவர்கள் சிரித்து விட்டனர்; ஆசிரியரும், சிரித்தபடியே, 'நான் கூறியது கற்கண்டு பத்திரிகை...' என்று, விளக்கினார். அன்று முதல், அந்த மாணவனுக்கு, 'கற்கண்டு பாய்...' என்ற பட்டம் வழங்கப்பட்டது.
சமீபத்தில், அந்த மாணவரை பார்த்து, நலம் விசாரித்த போது, துபாயில் வேலை செய்வதாக கூறினான். பேச்சினிடையே, 'கற்கண்டு பாய்...' என்று கூற, சிரித்து விட்டான்.
- பி.செல்வராஜ், தேவகோட்டை.
