PUBLISHED ON : மே 27, 2023

கரிச்சாம்பட்டியில், காது குத்து நிகழ்வு விமர்சையாக நடந்து கொண்டிருந்தது.
கிராமத்தினர் அன்போடு பரிமாறிய இயற்கை உணவை மகிழ்ச்சியாக உண்டான் தினேஷ். அங்கு நிலவிய பழக்க வழக்கங்கள் சுவாரசியம் தந்தன.
தந்தையிடம், ''உறவினர் வீட்டு விழாவுக்கு அழைத்து வந்ததற்கு நன்றி...'' என்றான் தினேஷ். புன்னகைத்தார் அப்பா வேணு கோபால். அவரது அலைபேசி சிணுங்கியது.
''மன்னிக்கணும்... ஏற்கெனவே அலுவலகத்தில் விடுப்பு சொல்லிட்டேன்; விடுப்பில் இருப்பதால் 'ஷூம் மீட்டிங்' கலந்துக்க இயலாது...''
அலுவலக ஊழியரிடம் எடுத்துரைத்தார்.
உரையாடலை முடித்த அப்பாவிடம், ''அலுவலக வேலைகளை வீட்டிலிருந்தே சில மாதங்களாக செய்து வருகிறீர்; தேவை இல்லாமல் ஏன், விடுப்பு எடுக்குறீங்க; விழாவில் கலந்தபடியே, அலுவலக வேலையும் செய்து இருக்கலாமே...'' என கேட்டான் தினேஷ்.
''அது தவறு... அப்படி செய்தால் வேலையில் கவனம் இருக்காது; விழாவிலும் பங்கேற்க இயலாது...''
''விடுப்பு சொல்லாமலே தனிப்பட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளலாமே அப்பா; யாருக்கு தெரியப் போகிறது...''
புன்னகைத்தபடி, ''அந்த முறைகேடு அலுவலக மேலாளருக்கு தெரியாமல் போகலாம்; ஆனால், என் மனசாட்சிக்கு தெரியும்... உண்மையை மறைத்தால் மன அமைதி இழக்க வேண்டி வரும். அது போல் செய்தால் நீ தான் மதிப்பாயா...'' என்றார் அப்பா.
அதில் உள்ள உண்மையை உணர்ந்து, எப்போதும் மனசாட்சிக்கு நேர்மையாக இருக்க முடிவு செய்தான் தினேஷ்.
குழந்தைகளே... மனசாட்சிபடி உண்மையாக வாழ முயற்சியுங்கள்.
- ஜனமேஜயன்
