
''என்னை எதிர்த்துப் பேசினாய் அல்லவா. அதற்குத்தான் இந்த தண்டனை,'' என்று ஈவு, இரக்கமின்றி சபித்து விட்டு, அவ்விடத்தை விட்டு நகர்ந்தான் அந்த கொடூரன்.
இந்த ரகளையில், அச்சிறுவன் தப்பி ஓடி விட்டான்!
இந்த கொடூரனை எதிர்க்க திராணியற்ற அங்கிருந்த அடிமைகள் கூட்டம் அவன் அங்கிருந்து நகர்ந்ததும், ஓடிச் சென்று சிறுமியை அள்ளி எடுத்து... தங்களுக்கு தெரிந்த முதலுதவியைச் செய்து, அவளை பெற்றோர்களிடம் கொண்டு போய் சேர்த்தனர்.
சுயநினைவின்றி அப்படியே படுத்த படுக்கையாகி விட்டாள் அச்சிறுமி. எப்போதேனும் சற்று நினைவு திரும்பும் போது, 'கடவுளே! இந்த அடிமை விலங்கிலிருந்து எங்களைக் காப்பாற்று!' என்று கதறி அழுவாள்.
இவள் உடல் நலம் தேறிய பின்னர்... தலையில் குண்டடி பட்டதின் பயனாக, சிற்சில சமயங்களில் சட்டென்று இவளுக்கு நினைவு தப்பிவிடும்... அப்போதெல்லாம் கடவுளிடம் கெஞ்சுவாள்.
'கடவுளே! நான் மேற்கொள்ளவிருக்கும் அந்த அபாயகரமான பணியில் இதைப்போல் என் நினைவு தப்பினால், நான் எப்படி அந்தப் பணியை பூர்த்தி செய்ய முடியும்? தயவு செய்து எப்போதும் என்னுடனேயே இருந்து, நான் செய்யவிருக்கும் பணியில் எனக்கு உதவி செய்' என்று நெஞ்சாழத்திலிருந்து கதறுவாள்.
நாட்கள் செல்லச் செல்ல... அவளுக்குள் ஒரு தீவிரம்... 'கடவுளே! முதலில் நான் இங்கிருந்து தப்ப வேண்டும். அதன் பின்னர் எங்களைப் போன்ற பாவப்பட்ட குடும்பங்களையும், இந்த அடிமைத்தளைகளிலிருந்து மீட்டு, அவர்களின் எதிர்காலத்தை செம்மையாக்க வேண்டும்' என்ற எண்ணம் அவளை தீவிரமாக பிடித்துக் கொண்டது.
பன்னிரெண்டே வயது நிரம்பிய ஒரு சின்னஞ்சிறு அடிமைப்பெண்ணால்... இதனை சாதிக்க முடியுமா? உம் முடிந்தது... சாதித்தாள். மிகவும் சமத்காரமாக சாதித்து, அதில் உலகமே வியக்கத்தக்க வெற்றியும் கண்டாள் என்பதுதான் சத்தியம்.
''ஓ! அன்று முற்றிய இரவு. முடிவெடுத்த இரவு. இங்கிருந்து தப்பிக்க முடிவெடுத்த இரவு. எங்கு போக வேண்டும்... யாருடைய உதவியை நாட வேண்டும் என்பதையெல்லாம் நன்றாக யோசித்து முடிவெடுத்த முற்றிய இரவு... எங்கும் அடர்ந்த நிசப்தம். அடிமைகளின் குடியிருப்பைச் சுற்றி, சுற்றி வலம் வந்தவள். மிகவும் மெலிதாக... இதோ நான் என் இலக்கை நோக்கி புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நாளை மறுநாள், அதற்கும் மறுநாள் உங்கள் அனைவரையும் என் குடியிருப்பில்... சுதந்திர காற்று வீசும் அந்த என் குடியிருப்பில் சந்திக்க வைப்பேன்...'' என்று பாடிக்கொண்டே சுற்றி, சுற்றி வந்தாள்.
பாவம்... அடிமைகளின் மனம் நிறைந்த கனவுப்பாட்டு இது. தங்களின் சுதந்திர ஏக்கங்களை இப்படித்தான் பாடிப்பாடி புலம்புவர்... தான் இங்கிருந்து தப்பியோடப் போவதைப் பற்றி பெற்றோர்களிடம் கூட கூறவில்லை அச்சிறுமி. எப்பவும் தன் பாட்டை கேட்பவர்கள் அவர்களுக்குத் தெரிவிப்பர் என்று தீர்மானித்து விட்டாள்! என்னே ஒரு திடமான தீர்க்க தரிசனம்...
இங்கிருந்து புறப்பட்டு எங்கே? எப்படி? போகவேண்டும் என்பதையெல்லாம் சில நாட்களுக்கு முன்பே தீர்மானித்து விட்டாள் அச்சிறுமி. அவள் தலையில் அடிபட்டு தன் நினைவிழந்து படுத்த படுக்கையில் இருந்த போது, ஒரு நாட்டு மருத்துவர் இவளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இவளின் இருப்பிடம் தேடிவந்தார்.
சாதாரணமாக, அடிமைகளுக்கு இப்படியெல்லாம் மருத்துவ வசதி செய்து கொடுப்பது வழக்கமே இல்லை... இந்த கேடுகெட்ட அடிமை கழுதைகளுக்கு எதற்கு இந்த படாடோபம் என்றெல்லாம் நினைத்த அந்த முதலாளி முதலைகள் இதையெல்லாம் செய்யமாட்டர்.
ஆயினும் இந்த நாட்டு மருத்துவர் ஒரு அலாதி பிறவி என்று தான் சொல்ல வேண்டும். தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், இந்த காடுகளுக்கு வந்து தங்களுக்கு வேண்டிய மூலிகைகளை பறித்துச் செல்வார். அதற்கு பிரதியாக அங்குள்ள தலைமை கங்காணிக்கோ, அவனின் குடும்பத்தாருக்கோ ஏதேனும் மருத்துவ உதவி தேவைப்பட்டால், இந்த நாட்டு மருத்துவர் அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்வார்.
எது எப்படியோ சிறுமி டப்மேனின் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். அன்று அந்த கங்காணி அச்சிறுவனின் மீது ஒரு இரும்பு குண்டை வீசியபோது, குண்டு குறிதவறி சிறுமியின் தலையை தாக்கியபோது, தற்செயலாக அங்கே வந்திருந்த இந்த நாட்டுவைத்தியர் பதறிப்போய் ஓடிச்சென்று சிறுமிக்கு முதலுதவி செய்து அவளின் வீட்டில் கொண்டு போய் சேர்த்தார்.
டப்மேனிடம் இந்த நாட்டு வைத்தியருக்கு ஒரு அலாதியான ஈடுபாடு உண்டு. அவளுக்கு சற்றே நினைவு திரும்பும் போதெல்லாம், இவரின் கைகளைப்பற்றிக் கொண்டு, 'நாங்கள் என்ன பாவம் செய்தோம் என்று தெய்வம் எங்களுக்கு இப்படி ஒரு கீழ்த்தரமான பிறவியை அளித்திருக்கிறது... எங்களுக்கு விடிவு காலமே கிடையாதா?' என்று கதறுவாள்.
உடனே அவளை மிக ஆதரவுடன் தட்டிக் கொடுத்து, மெல்லிய குரலில், 'நீ உடல் நலம் தேறியதும், உனக்கு நான் ஒரு வழிகாட்டுகிறேன்... அதுவரை நீ மவுனம் காக்க வேண்டும். நீ இரைந்து பேசி... அது இந்த கேடுகெட்ட கங்காணிகளின் காதில் விழுந்து விட்டால், அப்புறம் உன்னை கொலை செய்யவும் தயங்க மாட்டர். என்னையும் இங்கே காட்டினுள் அனுமதிக்க மாட்டர்' என்று ஆறுதல் கூறுவார்.
நாட்கள் நகர, நகர அச்சிறுமியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்.
''உன் உடல்நலம் தேறிவிட்டால், உடனே இந்த கங்காணி அயோக்கியன் உன்னை வேலைக்கு அனுப்பிவிடுவான். அதனால் அவன் இந்தப் பக்கம் வரும் போது, நீ படுக்கையிலேயே இரு,'' என்று மிக ஆதரவாக புத்திமதி சொல்வார் அந்த நல்ல உள்ளம் படைத்த நாட்டு வைத்தியர்.
அன்று வழக்கம் போல் பச்சிலைகள் பறிக்க வந்த அந்த நாட்டு வைத்தியர், தற்செயலாக அச்சிறுமியை பார்க்க செல்வதைப் போல் அவள் குடிசைக்குள் நுழைந்தவர், ''ஹேரியட்! உனக்கு ஒரு நல்ல செய்தி. இன்று இரவு உங்களை கண்காணிக்க வரும் கங்காணி வழக்கம் போல் இரவு ரோந்து வரமாட்டான். அவனுக்கு காய்ச்சல். அவனுக்கு நான் கொடுத்த கஷாயத்தில் நிறையவே தூக்கத்திற்கான சாறுகளை கலந்து கொடுத்திருக்கிறேன்... ஆகை யால், அவன் நாளைக்காலை வெகுநேரம் சென்ற பின்னர்தான் கண் விழிப்பான்.
''நீ இங்கிருந்து புறப்படுவதைப்பற்றி யாரிடமும் மூச்சுவிடாதே... ஏன்... உன் பெற்றோர்களுக்குக் கூட தெரியவேண்டாம். நீ தைரியமாக இரவு அனைவரும் உறங்கிய பின்னர், தெய்வத்தின் துணையுடன் இங்கிருந்து புறப்படு. கவனமாகக் கேட்டுக் கொள்... நான் சொல்லப்போகும் குறுக்குப் பாதையில் வேறு எந்த கங்காணிகளின் நடமாட்டமும் இருக்காது. உன் குடிசையின் இடது புறத்தில் சிறிது தூரம் சென்றால், செடிகளும், கொடிகளும் அடர்ந்த ஒரு மேடான இடம் வரும்... வலது புறமுள்ள இந்த இடத்தில் நுழைந்தால் போதும்... துரிதமாக நடந்தால் சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு நீ நல்ல ஒரு கப்பிரோடை அடைவாய். அங்கிருந்து பார்த்தால் சற்று தள்ளி எதிர்புறத்தில் சற்று பெரியதொரு வீடு தெரியும். அதுதான் என் வீடு. எப்படியும் பொழுது விடியுமுன் நீ அங்கு வந்து சேர்ந்து கதவில் மெதுவாக மூன்று முறை தட்டினால் போதும். உன் வரவை மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நான் கதவை திறப்பேன். அப்புறம் உன் விடுதலைக்கான விவரங்களை தெரிவிப்பேன்... ஜாக்கிரதை என்று சொல்லிவிட்டு விடை பெற்றார் அந்த மிக நல்ல உள்ளம் படைத்த மருத்துவர்.
உடனே அவரின் கரங்களைப் பற்றி கண்களில் ஒற்றிக் கொண்டு கேவினாள் ஹேரியட் டப்மேன்...
- தொடரும்.