
சென்றவாரம்: மங்காத்தாவுக்கும், மந்த்ராவுக்கும் இடையே போட்டி ஆரம்பித்தது. இனி-
அவள் சகாக்கள் இன்னும் பீதியிலிருந்து விடுபடாதவர்களாக விலகியே நின்றனர். விழிகள் விரிய, ''ஏய்! பெரிய 'பிஸ்தா'ன்னு நினைப்போ உனக்கு?'' என்று வெடித்தாள் மங்காத்தா.
''உன்னோட இந்தக் குட்டிச்சாத்தான் வேலையை கண்டு இந்த மங்காத்தா பயப் படமாட்டா தெரிஞ்சுக்கோ! உன்னோட இந்த 'சீப்' பான வேலையை வேற யாருகிட்டயாவது காட்டு எங்கிட்ட காட்டாதே!'' என்று உறுமினாள்.
மந்த்ரா அவளைப் பார்க்காமலேயே அலட்சியமாக இடது கையை ஆட்டி, ''சும்மா தொண தொணக் காதே... எனக்குத் தூக்கம் வருது. கொசுதான் இப்படி ஙொய்னு தொல்லை கொடுக்கும். நீயும் கொசுதான் போலிருக்கு!'' என்றாள்.
அடுத்த வினாடி...! அந்தப் பெரிய அறையில் மங்காத்தா, 'ஙொய்' என்று சத்த மிட்டபடி கொசுவைப் போல பறந்து கொண்டி ருந்தாள் தன் இருகைகளையும் அகல விரித்த படி!
''ஐயோ! என்னைக் காப்பாத்துங்க... காப்பாத்துங்க!'' என்று கத்தியபடி மங்காத்தா அவர்கள் தலைக்கு மேலாக அந்தரத்தில் சுற்றிக் கொண்டிருந்தாள். தான் அவளை கொசு என்று கூறியதும், அவள் நிஜமாகவே கொசுவைப் போல அந்தரத்தில் சுற்றுவதை கண்ட மந்த்ரா, 'க்ளூக்' கென்று சிரித்தாள்.
'என் நினைப்பே மந்திரம் போட்டது போலாகி விட்டதே!' என்று பெருமையாக இருந்தது அவளுக்கு.
'ஒருவேளை தாத்தா மந்திரம் போட்டு மங்காத்தாவை கொசு வாக்கி இருப்பாரோ?' என்ற எண்ணமும் வந்தது. பாவம் அந்த அடாவடிக் காரிக்கு இது போதும். சுற்றி, சுற்றி வந்து எங்காவது சுவரில் மோதிக் கொள்ளப்போகிறாள். அவளுடைய கொசுச் சுற்றலை மந்திரம் போட்டு நிறுத்துகிறேன் என்று கண்களை மூடிக்கொண்டு மந்திரங்களை மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.
''அய்யய்யோ!'' என்று மங்காத்தா கத்தினாள். தடால் என்று எதிர்ச்சுவரில் மோதிக் கீழே விழுந்தாள். அவளிடமிருந்த கொசுத் தன்மை மறைந்தது. மந்த்ராவின் மந்திரம் பலித்து விட்டது. குறும்பாகச் சிரித்துக் கொண்டு, போர்வையை போர்த்திக் கொண்டு படுத்தாள் மந்த்ரா.
மங்காத்தாவின் தோழிகளும் உடல் நடுங்க பீதியுடன், மந்த்ராவைப் பார்த்துக் கொண்டு தங்கள் கட்டிலில் போய் பொத் தென்று விழுந்தனர். அவசர அவசரமாகப் போர்வையினால் தலை முதல் கால் வரை மூடிக்கொண்டனர். அவர்களுக்கு மந்த்ராவைப் பார்க்கவே பயமாக இருந்தது.
போர்வைக்குள் இருந்த போதும் கூட மந்த்ராவின் பக்கம் பார்க்காமல் வேறு பக்கம் பார்த்தபடி திரும்பிப் படுத்தனர். அவர்களுடைய உடல் நடுக்கத்தை போர்வையின் அசைவு பறைசாற்றிக் கொண்டிருந்தது.
'இது என்ன கனவா, நிஜமா? இவள் மந்திரக்காரியா? என்று தன் போர்வைக்குள் கூனிக் குறுகி முடங்கியபடி வினா எழுப்பிக் கொண்டிருந்தாள் மங்காத்தா.
'என்னால் இன்றிரவு தூங்க முடியாது போலிருக்கே!' அவள் உடல் நடுங்கியது. இமைகள் இணையமறுத்தன.
மந்த்ராவும் விட்டத்தை பார்த்தபடி யோசித்துக் கொண்டிருந்தாள். 'இந்த விளை யாட்டெல்லாம் போதும்... இனி ஒழுங்கா படிக்க வேண்டும்' என்ற முடிவோடு தூங்கு வதற்கு கண் மூடினாள்.
மறுநாள் காலை மந்த்ரா உற்சாகமாக எழுந்திருந்தாள்.
'பாவம் தாத்தா! இரவு எங்கே தங்கினாரோ; எப்படித் தூங்கினாரோ?என்ற பரிவான நினைப்போடு!' ஆனால், 'கவலைப்பட வேண்டாம். என் தாத்தா பலே கெட்டிக்காரர்; யார் வீட்டு மெத்தையிலாவது சுகமாக படுத்துத் தூங்கி இருப்பார்!' கருப்புப் பூனையின் நினைப்பு வரவே களுக்கென்ற சிரிப்பும் வந்தது மந்த்ராவுக்கு.
வகுப்பறையில் மங்காத்தாவும், அவள் தோழிகளும் மிரட்சியுடன் மந்த்ராவைப் பார்த்துக் கொண்டே தங்கள் டெஸ்கில் அமர்ந் திருந்தனர். அதே சமயம் அவர்களுக்கு ஆத்திர மாகவும் இருந்தது. ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
'நான் நன்றாகப் படித்து பட்டம் பெற்று முதல் மாணவியாக வரவேண்டும். அப்போது தான் அப்பாவும், அம்மாவும் சந்தோஷப் படுவர். பாட்டியும், தாத்தாவும் சந்தோஷப்பட நான் மாஜிக்கிலும் வல்லவளாக வேண்டும்.
மந்த்ரா இப்படி சிந்தனையில் மூழ்கியிருந்த அதே வேளையில், மங்காத்தா...
''இந்த மந்த்ராவுக்கு நான் யார் என்பதை காட்ட வேண்டும். என்னை அவமானப்படுத்தி விட்டதாக அமர்ந்திருக்கும் இவளை இப்போ என்ன செய்கிறேன் பார்!'' என்று தன் தோழி யிடம் கிசுகிசுத்தாள், கடைசி வரிசையில் அமர்ந்திருந்த மங்காத்தா.
இங்க் பாட்டிலின் மூடியை திறந்து ஒரு சின்ன பிளாஸ்டிக் பையில் இங்கை ஊற்றி நிரப்பினாள். பிறகு அதை தன் பிளாஸ்டிக் ஸ்கேலின் முனையில் அழுத்திப் பிடித்துக் கொண்டு மந்த்ராவுக்கு குறி பார்த்தாள். 'ஸ்கேலை இழுத்து விட்டதும் இங்க் உள்ள பிளாஸ்டிக் பை மந்த்ரா முகத்தில் தாக்கி முகம் முழுவதும் இங்க் வழியும்.' அந்தக் கற்பனை யில் மகிழ்ந்தபடி ஸ்கேலை வளைத்தபடி சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்!
மந்த்ராவின் தாத்தா கேசவன் குட்டி தன் பேத்தியைப் பார்க்க வந்தார். அவர் மனித உருவில் இல்லை. கருப்புப் பூனை உருவில் மந்த்ராவுக்கு பாதுகாப்பாக இருப்பதுதான் உங்களுக்குத் தெரியுமே. பள்ளி வகுப்பறை யின் ஜன்னல் வழியே உள்ளே புகுந்த தாத்தா கருப்புப் பூனை, மந்த்ரா அமர்ந்துள்ள டெஸ்கின் கீழே போய், அவள் கால்களின் தன் பட்டுடலால் உரசியது.
டெஸ்க் அடியில் அது என்ன என்று பார்க்க மந்த்ரா குனியவும், அதே சமயம், மங்காத்தா இங்க் பையை விடுவிக்கவும் சரியாக இருந்தது! மந்த்ராவுக்கு வைத்த குறி டீச்சரின் நெற்றியைத் தாக்கியது. மந்த்ராவுக்கு செய்யப்பட இருந்த இங்க் அபிஷேகம் ஆசிரியைக்கு நடந்தது. அவர் முகம் மற்றும் உடையெங்கும் ஒரே இங்க் சிதறல்!
நடந்த களேபரம் எதையும் அறியாமல், மந்த்ரா கீழே குனிந்து கருப்புப் பூனையை பார்த்துக் கொண்டிருந்தாள். வகுப்பில் ஏற்பட்ட களேபரமும், கூச்சலும் அடுத்த வினாடி மந்த்ரா கவனத்தை ஈர்த்து அவளை நிமிரச் செய்தது. முகத்திலும், உடையிலும் நீல மைக் கரையுடன் ஆசிரியை கூச்சல் போட்டுக் கொண்டிருந்தார்.
''யாருடைய குறும்பு இது? யாருடைய விஷமம் இது?'' கைக்குட்டை என்று எண்ணி கரும்பலகையை துடைக்கும் டஸ்டர் துணி யினால் தன் முகத்திலுள்ள இங்கை துடைத்துக் கொண்டே தவிக்கும் ஆசிரியையும், முகம் வெளுத்து தலைகுனிந்து உட்கார்ந்திருக்கும் மங்காத்தாவையும் பார்த்தாள் மந்த்ரா. அவளுக்கு விஷயம் புரிந்து விட்டது. அது தனக்கு வைத்த குறி என்பதையும் தெரிந்துக் கொண்டாள். தன் தாத்தா தன்னை தேடிக் கொண்டு வகுப்பறைக்கு வந்த காரணமும் விளங்கியது. கருப்புப் பூனை ஓசைபடாமல் ஜன்னல் கட்டைக்குத் தாவி வெளியேறுவதை கண்டு, 'பொல்லாத தாத்தா' என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.
மாணவியர் எல்லாரும் மவுனமாக எழுந்து நின்று கொண்டிருந்தனர்.
''யாரும் பேச மாட்டீர்கள் இல்லையா? இந்த விஷமத்தை யார் செய்தது என்று ஒப்புக் கொள்ளப் போவதில்லை?'' ஆசிரியை தன் முகத்தில் வழிந்த இங்கை ஒருவாறு துடைத்துக் கொண்டு தலைகுனிந்து நிற்கும் மாணவியரைப் பார்த்துக் கேட்டார்.
அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவி களிடம் நன்னடத்தையை எதிர்பார்க்க முடியாது. அடங்காப்பிடாரிகளும், முரட்டுத் தனமும் கொண்ட மாணவியரிடம் ஆத்திரப் படுவதில் அர்த்தம் இல்லை என்பதையும் அறிந்தவர்கள் அந்தப் பள்ளி ஆசிரியைகள்.
ஆகவே, ''எல்லா மாணவியரும் வகுப் பறையில் ஏற்பட்டுள்ள இந்த களேபரத்தை மைக் கரைகளை ஒழுங்கு செய்ய வேண்டும். தரையைக் கழுவி துடைத்து, பொட்டு இங்க் கூட இல்லாமல் சுத்தப்படுத்த வேண்டும். குற்ற வாளிகள் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டு முன் வராததினால், உங்கள் அனைவருக்கும் இந்த தண்டனை,'' என்று அறிவித்து விட்டு இங்க் கரைபட்ட உடையை மாற்றிக் கொள்ள, தன் அறைக்குச் சென்றார் ஆசிரியை. ஆசிரியை போனதும் முகம் சிவக்க மங்காத்தா தலை நிமிர்ந்தாள். அவளும், அவள் கோஷ்டியும் மந்த்ராவை சூழ்ந்துக் கொண்டனர்.
- தொடரும்.