PUBLISHED ON : நவ 08, 2013

மருதூர் நாட்டை இளங்குமரன் என்ற அரசர் ஆண்டு வந்தார்.
அமைச்சர்களிடம் அவர், ''நம் நாட்டை அடுத்துள்ள அரசர்கள் அனைவரும் நமக்கு பகைவர்களாக உள்ளனர். அவர்களை அழிக்க ஏதேனும் வழி இருந்தால் சொல்லுங்கள்,'' என்று கேட்டார்.
''அரசே! உங்களைப் போலவே அவர்களும் வலிமை படைத்த அரசர்கள். அவர்களை அழிக்க முயற்சி செய்தால் நமக்குப் பேரழிவுதான் ஏற்படும்,'' என்றார் தலைமை அமைச்சர்.
''அவர்களை அழிக்க உங்களுக்கு வழி தெரியவில்லை. நானே வழி கண்டுபிடிக்கிறேன்,'' என்றான் இளங்குமரன்.
சில நாட்கள் சென்றன.
தூதர்களை அழைத்த இளங்குமரன் அண்டை நாடுகளுக்கு அவர்களை அனுப்பி வைத்தான்.
ஒவ்வொரு நாட்டு அரசரையும் சந்தித்த அவர்கள், ''அரசர் பெருமானே! மருதூர் நாட்டில் கோடை விழா கோலாகலமாக நிகழ உள்ளது. தாங்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வேண்டும். எங்கள் அரசரின் அன்பு வேண்டுகோள்,'' என்று பணிவுடன் அழைத்தனர்.
அழைப்பை ஏற்று எல்லா அரசர்களும் மருதூர் நாட்டிற்கு வந்தனர்.
அவர்களை வரவேற்க, மருதூர் நாடெங்கும் அழகிய தோரணங்கள் வைக்கப்பட்டன.
இன்னிசை முழங்க, அரசன் இளங்குமரன் அவர்களை ஆரவாரமாக வரவேற்றான். இரு பக்கங்களிலும் குழுமி இருந்த மக்களின் வாழ்த்தொலி விண்ணைப் பிளந்தது.
தங்களுக்குக் கிடைத்த வரவேற்பைக் கண்டு அவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்களிடம் இனிமையாக பேசினான் இளங்குமரன். எந்தக் குறையும் ஏற்படாமல் கவனித்துக் கொண்டான்.
கோடை விழா இனிதே முடிந்தது. அரசர்களை வழி அனுப்பும் விழா நடந்தது.
''என் அழைப்பை ஏற்று விழாவைச் சிறப்பித்த உங்களுக்கு நன்றி. உங்கள் வருகையால் எங்கள் நாடே பெருமை பெற்றது. எந்த உதவியானாலும் தயங்காமல் கேளுங்கள்,'' என்று உணர்ச்சி பொங்கப் பேசினார் இளங்குமரன்.
அவர்களுக்கு விலை உயர்ந்த பரிசு தந்து அனுப்பினார். அவர்கள் உயிருக்கு ஆபத்து இல்லை என்பதை அறிந்த அமைச்சர்கள் நிம்மதி அடைந்தனர்.
அரசனிடம் அவர்கள், ''அரசே! பகைவர்களை எல்லாம் அழிக்கப் போவதாகச் சொன்னீர்கள். முடியாது என்று நாங்கள் சொன்னோம். நாங்கள் சொன்னது தானே நடந்தது?'' என்று கேட்டனர்.
''அமைச்சர்களே! நான் சொன்னதுதான் நடந்தது. பகை அரசர்களை எல்லாம் அழித்து விட்டேன்,'' என்றார் இளங்குமரன்.
''அரசே! அவர்களை வரவேற்று விருந்து அளித்து அனுப்பிவிட்டீர்கள். அவர்களை அழித்து விட்டதாக சொல்கிறீர்களே!'' என்றனர் அமைச்சர்கள்.
''பகைவர்களாக இருந்த அவர்கள் மீது அன்பு மழை பொழிந்தேன். இப்போது அவர்கள் நம் நண்பர்களாகி விட்டனர். நான் சொன்னது போலப் பகைவர்களை அழித்து விட்டேனா? இல்லையா?'' என்றார்.
''அரசே! நீங்கள் சொன்னதைச் செய்து விட்டீர்கள். உங்களைப் போன்றே மற்ற அரசர்களும் இருந்தால், இந்த உலகில் பகையே இருக்காது,'' என்றனர் அமைச்சர்கள்.
***