
முன்னொரு காலத்தில், பான நாடு என்றொரு நாடு இருந்தது. அந்த நாட்டை துருவிதன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தார். குடிமக்கள் எல்லாரும் அவரை, 'துருவி மன்னன்' என்றே அழைப்பர்.
துருவிதன் தன் நாட்டு மக்களுக்கு எந்தக் கவலையும் கொடுக்காமல், மக்கள் மீது அதிக வரியினை செலுத்தாமல், சீரும் சிறப்பு மாக ஆட்சி செய்து வந்தான்.
துருவிதன் சிறப்பாக ஆட்சி செய்வது தேவலோகத்திற்குத் தெரிய வந்தது. தேவலோகத்தில் பிரம்மண்டி என்ற ரிஷி இருந்தார். அவர் துருவிதனுக்கு மோட்சம் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்று நினைத்தார். இருந்தாலும், அவருக்கு மன்னர் துருவிதன் மீது சிறிய சந்தேகம் ஏற்பட்டது. சோதனைக் காலத்திலும், அவன் நேர்மையுடன் நடந்து கொள்கிறானா அல்லது பொய் பேசாமல் இருக்கிறானா என்பதனை அறிய நினைத்தார்.
உடனே தன்னை ஒரு புலவராக வேடம் தரித்துக் கொண்டு, துருவிதனின் அரண்மனைக்குச் சென்றார். மன்னர் துருவிதன் புலவரை இன்முகத்துடன் வரவேற்றார்.
''புலவரே, தங்களின் வருகையால் இந்த அரசபை மிகவும் மகிழ்ச்சியடைகிறது. தாங்கள் வந்த நோக்கம் என்ன? தங்களின் நோக்கம் எதுவாகயிருந்தாலும், அதனை நிறைவேற்றத் தயாராக இருக்கிறேன்,'' என்றான் துருவிதன்.
''மன்னனே, வணக்கம்! என்னை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். உன்னிடம் ஒரு மாபெரும் பரிசினைப் பெற வேண்டியே வந்துள்ளேன். அந்த பரிசினை உடனடியாக நீ எனக்குத் தருவாய் என்று நம்புகிறேன்,'' என்றார் புலவர்.
''புலவரே, தங்களைப் பார்க்கிறபோது பேராற்றல் மிக்கவர் போன்றே தெரிகிறீர்கள். தங்கள் முகத்தில் ஏதோ தெய்வீக ஒளியானது வீசுவதாகவே எனக்குத் தோன்றுகிறது. அதனால் உங்கள் விருப்பம் எதுவாக இருந்தாலும் அதை நிறைவேற்றி வைப்பது என்னுடைய கடமையாகும். என் கடமையினை நிறைவேற்ற நான் எப்போதுமே தயங்கியதில்லை. எனவே, நீங்கள் தாராளமாக என்னிடம் எதுவாக இருந்தாலும் கேட்கலாம்,'' என்றார்.
''மன்னனே, உன்னுடைய பணிவு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதே நேரத்தில் உனது நற்குணத்திற்கே சவால் விடுகின்ற விதத்தில் உன்னிடம் ஒன்று கேட்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. உனது முன்னோர்கள் எல்லாம் என்னைப் போன்ற புலவர்களுக்கு நாடு நகரத்தையெல்லாம் காணிக்கையாக கொடுத்திருக்கின்றனர். நான் இந்நாட்டை உன்னிடம் காணிக்கையாக கேட்கிறேன். நீ எனக்கு இந்த நாட்டைத் தர வேண்டும். நீ சத்தியவானாக இருந்தால் இதனை இப்போது நிறைவேற்று பார்க்கலாம்,'' என்றார் புலவர்.
புலவரின் இந்தப் பேச்சைக் கேட்டதும் அரசபையில் இருந்த அனைவருமே திடுக்கிட்டனர். ஆனால், மன்னர் துருவிதன் மட்டும் தனக்குள் சிரித்துக் கொண்டான்.
தன் தலையில் இருந்த கிரீடத்தை எடுத்துக் கொண்டு புலவரை நோக்கிச் சென்றார். அவர் தலையில் அந்தக் கிரீடத்தை சூட்டி அரியணையில் அவரை அமர வைத்தார். இதனைக் கண்ட அனைவரும் திடுக்கிட்டனர்.
''அரசே, தங்களுக்கு என்ன நேர்ந்தது? இந்தப் புலவருக்கு அரச பதவியா? தாங்கள் செய்வது அறிவற்ற செயல்,'' என்று கூச்ச லிட்டனர்.
''இதோ பாருங்கள், எது அறிவற்ற செயல், எது அறிவான செயல் என்பதெல்லாம் எனக்குத் தெரியும். நீங்கள் அமைதியாக இருங்கள். நான் என் சத்தியத்திற்கு இழிவு வராத வகையில் நடந்து கொள்கிறேன். இனிமேல் இந்நாட்டு மன்னர் இந்தப் புலவர்தான்,'' என்று கூறியபடி அரசபையை விட்டு வெளியேறினார்.
புலவரோ கம்பீரமாக அரியணையில் அமர்ந்து கொண்டார்.
பின்னர் மன்னரும், ராணியும் சாதாரண குடிமக்கள் போல உடையணிந்து கொண்டு அரண்மனையை விட்டு வெளியேறினர்.
இதனைக் கேள்வியுற்ற புலவர், காவலர்களை அனுப்பி மன்னரையும், ராணியையும் தம் முன்னே அழைத்து வரும்படி கூறினார். காவலர்கள் ஓடோடிச் சென்று மன்னரையும், ராணியையும் அழைத்து வந்து புலவரின் முன்னே நிறுத்தினர்.
''மன்னா, உன் நிலையைப் பார்க்கும் போது எனக்கு மிகவும் பரிதாபமாகவே இருக்கிறது. நீ எனக்காக வேண்டி சத்தியத்தையும், தர்மத்தையும் மீறி நடக்க வேண்டும். ஒருமுறை மட்டும் நீ அவ்வாறு நடந்து கொண்டால் நான் உன் நாட்டைத் திருப்பி தந்துவிடுகிறேன்,'' என்றார் புலவர்.
''புலவர் பெருமானே, நான் நாட்டை தந்ததோடு மட்டுமில்லாமல் என் உயிரையும் தருகிறேன். ஆனால், சத்தியத்தையும், தர்மத் தையும் நான் என்றுமே மீற மாட்டேன்,'' என்றார் மன்னன் துருவிதன்.
மன்னன் துருவிதனின் பேச்சைக் கேட்ட மாத்திரத்தில், புலவருக்குக் கோபம் ஏற்பட்டது.
''மன்னனே, என் பேச்சுக்குக் கட்டுப்படாத நீயும், உன் மனைவியும் பல துன்பங்கள் அனுபவிக்கப் போகிறீர்கள். இனிமேல் நீங்கள் இந்த நாட்டில் இருக்கக்கூடாது. காட்டில்தான் குடியிருக்க வேண்டும். இது புதிய மன்னனான எனது அரச கட்டளை,'' என்றார் புலவர்.
மன்னன் துருவிதனும், ராணியும் புலவரின் கட்டளையை ஏற்றுக்கொண்டவர்களாக நாட்டை விட்டே வெளியேறினர். காட்டில் ஓர் குடிசை அமைத்து தங்கினர்.
மன்னன் துருவிதன் காட்டில் கிடைக்கிற காய், கனிகளைக் கொண்டு வந்து ராணிக்கு கொடுத்தான். தன் கணவனின் துயரத்தினைப் பங்கு போட்டுக்கொண்ட ராணியும், அதனை அரண்மனையில் கிடைத்த அறுசுவை உணவாக நினைத்துக் கொண்டு சாப்பிடத் தொடங்கினாள்.
ஒருநாள் மன்னரும், ராணியும் நீரோடையில் நீர் அருந்திவிட்டு வந்து கொண்டிருந்தனர். இவருவரின் கால்களிலும் காட்டில் உள்ள முட்கள் தைத்து காயத்தை ஏற்படுத்தின.
மன்னர் கால்களிலும், ராணியார் கால்களிலும் ரத்தம் வடிந்தது. ரத்தம் வடிந்த கால்களுடனேயே இருவரும் தள்ளாடிய படியே நடந்து சென்றனர்.
அந்த நேரம் புதிய மன்னரான புலவர் தனது படைகளை எல்லாம் அழைத்துக் கொண்டு காட்டிற்கு வேட்டையாட வந்தார். மன்னரும், ராணியும் அவர் எதிரே நடந்து வந்தனர். அதனைப் பார்த்த புலவரோ குதிரையில் அமர்ந்தபடியே ஏளனமாகச் சிரித்தார்.
''மன்னனே, உன்னை நினைக்கும்போது எனக்கு ஏளனமாகவும், பரிதாபமாகவும் இருக்கிறது. உனது வளமான நாட்டையும், வளமான வாழ்க்கையும் இழந்து விட்டு இப்படி கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாயே, இப்போதும் ஒன்று குறைந்து விடவில்லை. நீ எனக்காக உனது சத்தியத்தையும், நேர்மையையும் ஓரம் கட்டி வைத்துவிட்டு ஒரே ஒரு முறை மட்டும் எனக்காக இறங்கி வா.
''அப்படி நீ இறங்கி வந்தால் இப்போதே உன் நாட்டை உன்னிடம் ஒப்படைக்கிறேன். நீ உனது ஆசை மனைவியோடு காட்டில் வாழும் பரிதாப நிலை ஏற்படாது. என்ன சொல்கிறாய்?'' என்று அதட்டலாகக் கேட்டார் புலவர்.
- தொடரும்.