PUBLISHED ON : ஜூன் 24, 2023

கடலுார் மாவட்டம், குமராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில், 1985ல், பிளஸ் டூ படித்தபோது விடுதியில் தங்கியிருந்தேன். அங்கு உணவு நன்றாக இருக்காது. எந்த பிரச்னை என்றாலும், அதை சரியான கோணத்தில் சிந்தித்து, தீர்த்து வைப்பதில் கெட்டிக்காரரான ஆசிரியர் கே.குணசேகரனிடம் இது பற்றி முறையிட்டோம்.
உடனே, விடுதி காப்பாளரை அழைத்து அறிவுரை கூறினார். ஆனால், அவர் அதை கண்டுகொள்ளவில்லை.
அன்று, காலை வழிபாட்டு கூட்டம் நடந்து கொண்டிருந்தது. குழுமியிருந்த மாணவர்களில் ஒருவன், திடீரென மயக்கம் போட்டு விழுந்தான். பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முகத்தில் தண்ணீர் தெளித்து அவனை விசாரித்தபோது, 'விடுதி சாப்பாடு சரியில்லை; அதனால், காலை உணவு சாப்பிடவில்லை...' என்றான். இது ஆசிரியர் குணசேகரனின் திட்டப்படி நடந்த நாடகம்.
விடுதி காப்பாளரை திட்டிய பள்ளி நிர்வாகம், மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் செய்யப் போவதாக கூறியது. உடனே அஞ்சி நடுங்கியபடி, 'மன்னித்து விடுங்கள்; இனி, நல்ல முறையில் சாப்பாடு கொடுக்கிறேன்...' என்றார். அன்று முதல் நல்ல உணவு கிடைத்தது. அந்த ஆசிரியரை பாராட்டி மகிழ்ந்தோம்.
தற்போது, என் வயது, 55; வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறேன். எளிமையாக திட்டமிட்டு பிரச்னையை தீர்த்து வைத்த அந்த ஆசிரியரை, இன்றும் என் மனதில் வைத்து போற்றுகிறேன்!
- ப.சிவகுமார், சிதம்பரம்.
