PUBLISHED ON : ஜூன் 24, 2023

துாத்துக்குடி மாவட்டம், வேம்பார், புனித செபஸ்தியார் நடுநிலைப் பள்ளியில், 1984ல், 6ம் வகுப்பு படித்த காலத்தில், குடும்பத்தில் வறுமை. அன்றாடம் உணவு கிடைப்பதே கஷ்டம்.
பட்டன் அறுந்த சட்டை, கொக்கி போன டவுசர் அணிந்து தான் வகுப்புக்கு போவேன். மதிய உணவிற்காக, மணி எப்போது ஒலிக்கும் என காத்திருப்பேன்.
ஒரு திங்கள் கிழமை, காலை வழிபாட்டு கூட்டத்துக்கு அழைப்பு மணி ஒலித்தது. பள்ளி வளாகத்தில், ஆசிரியர்களுடன் வரிசையில் நின்றோம். நிகழ்வில் கொடி ஏற்றுதல், பிராத்தனைப் பாடல், திருக்குறள், செய்தித்தாள் வாசித்தல் என்ற செயல்முறைகள் உண்டு.
அன்று எதுவுமின்றி, மாணவர்கள் அமைதியாக நின்றிருந்தோம். வழக்கமாக இந்நிகழ்வை நடத்தும், 8ம் வகுப்பு மாணவர்கள் கல்வி சுற்றுலா சென்றிருந்தனர். யாரும் பிரேயர் நடத்த முன்வராததால் கையைப் பிசைந்து நின்ற ஆசிரியர்களிடம், 'யாருக்கும் பிரேயர் நடத்த தெரியாதா...' என கோபத்தை காட்டினார் பள்ளி தாளாளர்.
நிலைமையை உணர்ந்த என் வகுப்பு ஆசிரியை மகத்துவசீலி, 'போடா... உன்னால் முடியும்...' என, என்னை முன்னால் தள்ளி விட்டார். டவுசரை அரைஞாண் கயிற்றில் இறுக்கி கட்டியபடி, 'பிரேயரை' நடத்தி பாராட்டு பெற்றேன். அந்த சம்பவம், மேடைக் கூச்சத்தை நீக்கி, தன்னம்பிக்கையை தந்தது.
தற்போது, 48 வயதாகிறது; அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். குழந்தைகளுக்காக, 'மயிலக்கா' என்ற பாடல் தொகுப்பை எழுதி வெளியிட்டுள்ளேன்.
என் மீது நம்பிக்கை வைத்து, உயர்வுக்கு களம் அமைத்து தந்த ஆசிரியையை எண்ணி, இப்போதும் பெருமிதம் கொள்கிறேன். முயற்சி என்ற சிறு விதைக்குள் தான், வெற்றி என்ற விருட்சம் இருக்கிறது என்பதை, என் அனுபவத்தில் உணர்ந்துள்ளேன்!
- மு.க.இப்ராஹிம், துாத்துக்குடி.
தொடர்புக்கு: 94428 85667
