PUBLISHED ON : ஜூன் 24, 2023

திருப்பூர் மாவட்டம், அவினாசி, புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், 1995ல், 2ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம் இது...
அன்று மதிய உணவுக்கு மணி ஒலித்தது. எனக்கு சளி பிடித்திருந்ததால், மிகவும் சிரமத்துடன் இருந்தேன். வகுப்பு ஆசிரியர் செல்வராஜ், என் மூக்கில் வழிந்திருந்த சளியை, சிறிதும் அருவருப்பு படாமல் பரிவுடன் துடைத்து விட்டார்.
பின், முகம் கழுவி விட்டு, சிரமம் இன்றி சாப்பிட உதவினார். அது என் மனதை நெகிழ வைத்தது. அதோடு, எல்லா மாணவ, மாணவியருக்கும் உதவும் அவரது சேவை மனப்பான்மையை கண்டு நெகிழ்ந்தேன்.
இப்போது, எனக்கு, 33 வயதாகிறது; சட்டப்படிப்பு முடித்து வழக்கறிஞராக பணியாற்றுகிறேன். அந்த ஆசிரியரை, பல ஆண்டுகளுக்குப் பின், என் அலுவலகத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது பள்ளி கால நிகழ்வை பகிர்ந்து, நன்றி தெரிவித்தேன். அவரும் மனம் திறந்து என்னை பாராட்டியது கண்டு மகிழ்ந்து பூரித்தேன்!
- ஜி.கார்த்திகா, திருப்பூர்.
