தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அன்பின் வலிமை!

அன்பின் வலிமை!

அன்பின் வலிமை!


PUBLISHED ON : ஜூன் 24, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 24, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் இருந்தது அந்த பள்ளி. அங்கு, 5ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கல்விச் சுற்றுலா செல்ல காத்திருந்தனர். அதில் ஒருவன் சுந்தரம். மலையில், அணை மற்றும் பூங்காவை சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்திருந்தது பள்ளி சுற்றுலா குழு.

அவ்வூரில் சுந்தரத்தின் குடும்பத்தினருக்கு ஒரு பண்ணை இருந்தது. ஊர் மக்கள் பலர் அதில் வேலை செய்தனர். இதனால் மற்ற மாணவர்களுடன் நெருங்கி பழக மாட்டான், சுந்தரம். சீருடையில், எப்போதும், 'பளிச்'சென இருப்பான்.

சீருடையில் சிறிது கிழிசல் இருந்தாலும், அதை அணிந்திருக்கும் மாணவருடன் நட்பு பாராட்டுவதை தவிர்ப்பான். ஆசையுடன் பேச வந்தால் வெறுத்து விலகிச் செல்வான். அவர்களுடன் விளையாடுவதை முற்றிலும் வெறுத்தான். இதை எண்ணி பெற்றோர் மிகவும் மனம் வருந்தினர்.

இந்நிலையில் தான் சுற்றுலாவில் கலந்து கொள்ளப் போவதாக பிடிவாதமாக கூறிய சுந்தரத்தை, 'ஒரு நாள் தானே, சென்று வரட்டும்...' என அனுமதித்தனர் பெற்றோர்.

பேருந்தில் தனியாக ஒரு இடத்தில் அமர்ந்திருந்தான் சுந்தரம்; சுற்றுலா முடிந்து திரும்பிய போது, திடீரென மழை கொட்டத் துவங்கியது. வழியில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதாக செய்தி வரவே, மலையில் ஓர் ஆசிரமத்தில் தங்கியது சுற்றுலாக் குழு.

இரவு ஆசிரமத்தில் வழங்கிய உணவை சாப்பிட முடியாமல் தவித்தான் சுந்தரம்; மற்ற மாணவர்கள் சாப்பிடுவதைப் பார்த்து முகம் சுளித்தான்.

இரவில் மாணவர்கள் கவலை இல்லாமல் நன்றாக துாங்கினர். கொசுத் தொல்லை; கூடவே பசியால் துாக்கமின்றி தவித்தான் சுந்தரம். மற்றவர்கள் துாங்குவதை கண்டு பொறாமையாக இருந்தது. நடு இரவில் கண் விழித்த மாணவர்கள் சுப்புவும், ராமுவும் அவன் நிலையை உணர்ந்தனர்.

பால், பழம், பிஸ்கெட் சாப்பிட கொடுத்தனர். படுக்க வைத்து விசிறி விட்டனர். பின், அமைதியாக உறங்கிவிட்டான் சுந்தரம்.

காலை கண் விழித்ததும் நண்பர்கள் செய்த உதவியை எண்ணி கண் கலங்கினான். நல்ல உள்ளத்தையும், அன்பான செயல்களையும் அறியாமல் வெறுத்து ஒதுக்கியதை நினைத்து வருந்தி, உடன் படித்தவர்களிடம் மன்னிப்பு கேட்டான்.

காலை உணவை, சக மாணவர்களுடன் சேர்ந்து உண்டான்; மகிழ்ச்சியாக விளையாடினான். அவனுக்குள் ஏற்பட்ட மாற்றம் கண்டு வியந்தனர். சாலை சீரானதும் சுற்றுலா குழு ஊருக்கு திரும்பியது. பேருந்திலிருந்து, சக மாணவர்களோடு கைக்கோர்த்து வரும் மகனைப் பார்த்ததும் பெற்றோருக்கு பெரும் மகிழ்ச்சி!

குழந்தைகளே... இனம், மொழி, மதங்களை கடந்து, அனைவருடனும் அன்பு பாராட்டி வாழ வேண்டும்!

- வி. கற்பகவல்லி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us