PUBLISHED ON : அக் 07, 2016

ஒரு ஆழாக்கு பச்சரிசியை, உதிரியாக இருக்கும்படி வேக வைத்து ஆறவிடவும். 2 பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். 1/4 கிலோ கேரட்டைத் துருவி வைத்துக் கொள்ளவும். 4 சிகப்பு மிளகாய், 1 1/2 டீஸ்பூன் தனியா, 3/4 டீஸ்பூன் சீரகம் மூன்றையும் சிறிது எண்ணெயில் வறுத்து கடைசியில் 2 டேபிள் ஸ்பூன் கொப்பரை தேங்காய் சேர்த்து வறுத்து, பிறகு ஆற வைத்து பொடி செய்து வைக்கவும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுச் சூடாக்கி, 1 சிறு துண்டு பட்டை, 3 கிராம்பு மற்றும் வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நிறம் மாற ஆரம்பித்ததும், கேரட் சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை வதக்கவும். நன்கு வதங்கியதும், ஆற வைத்த சாதம், உப்பு, மசாலா பொடி (வறுத்து பொடித்து வைத்துள்ளது) சேர்த்து நல்ல தணலில் சாதம் சூடாகும் வரை கலந்து விடவும். அத்துடன் விருப்பப்பட்டால், வறுத்த வேர்க்கடலையை கரகரப்பாகப் பொடித்து சேர்க்கலாம். ருசியாக இருக்கும்.
கேரட் சாதத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர்.
