
தஞ்சாவூர், மானப்புச்சாவடி, மிஷன் தெரு, புனித அந்தோனியர் மேல்நிலைப் பள்ளியில், 1974ல், 6ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.
பள்ளி ஆண்டு விழா நாடகத்தில், மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியராக நடிக்க வைத்தார், வகுப்பு ஆசிரியை பார்பதா. அதற்கான உடையை சொந்த செலவில் தைத்து தந்தார்.
நோயாளிகளை கவனிக்கும் முறை, அன்புடன் கூடிய கண்டிப்பு, மருத்துவ சேவையின் முக்கியத்துவம் பற்றி எல்லாம் பயிற்சி கொடுத்தனர். எங்கள் நாடகமான, 'பணியும் பாசமும்!' பரிசு பெற்றது. பாராட்டு குவிந்தது. சிறப்பாக நடித்த என்னை, 'பிற்காலத்தில் செவிலியராகி மக்களுக்கு சேவை செய்வாய்...' என, வாழ்த்தினார் ஆசிரியை.
மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், ஒரே மாதத்தில் இறந்தார். தாயற்ற பிள்ளைகள் போல் தவித்தோம். அவர் வாக்கை நிறைவேற்றும் விதமாக, செவிலியராகும் கனவுடன் படித்தேன். குடும்ப பொருளாதாரம் இடம் தருமா என்ற ஐயம் ஏற்பட்டது. ஆனாலும், விடாமுயற்சியுடன் தொடர்ந்தேன். பின், கன்னியர் இல்லத்தில் சேர்ந்தேன்.
அங்கு செவிலியர் படிப்புக்கு அனுமதி கிடைத்தது. கவனமுடன் படித்து பயிற்சி மேற்கொண்டேன். அவர் போட்ட விதை, முளைத்தது.
என் வயது, 59; செவிலியராக, 30 ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகிறேன். என் இதயத்தில் தெய்வமாக அந்த ஆசிரியை வீற்றிருக்கிறார்.
- சகோ.செபஸ்தியம்மாள், விழுப்புரம்.
தொடர்புக்கு: 86105 25086

