PUBLISHED ON : பிப் 13, 2021

முன்கதை: லட்சுமியின் மகன் சூரியராஜா. மாணவப் பருவத்தில், வீட்டை விட்டு ஓடினான். அவனை மும்பையில் கண்டு பேசியது பற்றி விவரித்தார் உறவினர். அதை ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்தார் லட்சுமி. இனி -
''பிடிச்ச கையை விட்டுட்டா, உங்க மகன் கூட்டத்துல பூந்து ஓடிடுவான் போல தோணுச்சி... அதனால கைய இறுக்கமா பிடிச்சிட்டே விவரத்தை கேட்டேன்...'' என பெருமையை பறை சாற்றிக் கொண்டார் செல்வானந்தம்.
மும்பையில் சூரியராஜாவை சந்தித்து பேசியதை அப்படியே விவரித்தார்.
'நீ முத்து மாமா மகன் சூரியராஜா தானே...'
தீர்மானமில்லாமல் தலையாட்டினான்; மறுக்க வில்லை.
அவன் கையை பட்டென பற்றினார்.
'கைய விடுங்கோ...'
'விட்டுட்டா, எங்க தேடறது சொல்லு...'
'ஓடிட மாட்டேன்...'
'ஏம்பா... தவியா தவிக்க வச்சி, ஊரை விட்டு ஓடியாந்துட்டியே, இது நியாயமா...'
பதில் பேச முடியாமல் முகத்தை பார்த்தபடி நின்றான்.
'என்னை ஞாபகமிருக்கா...'
'ம்... தெரியும்...'
'புள்ளைங்க சரியாக படிக்கலன்னா, பெத்தவங்க கண்டிக்கத்தானே செய்வாங்க; அப்பா அடிச்சார்ன்னு ஊரை விட்டு ஓடியாந்துட்டியே... அவங்க மனசு என்ன பாடுபட்டுகிட்டிருக்குன்னு தெரியுமா...'
'அது அப்போ புரியல...'
'போனது போகட்டும் சூரியராஜா... இனியாவது ஊருக்கு வந்து சேரு... என் கூடவே வா! கூட்டிட்டு போறேன்; உன் கடமையை இனி மேலாவது சரியா செய்...'
பதில் பேசாம தலையை குனிந்தபடி நின்றான்.
பின், 'அங்க எல்லாரும் என்ன சொல்லுவீங்களோன்னு ரொம்ப தயக்கமா இருக்கு...' என்றான் சூரியராஜா.
'தயங்கறத்துக்கு அவசியமே இல்லை... பிள்ளைய மறுபடியும் கண்ணுல காட்டிடு கடவுளேன்னு உங்கம்மா சதா வேண்டிட்டு கிடக்கிறார்...'
'ஓ... அப்படியா...'
'அப்புறம் முக்கியமான விஷயம்... உங்க அப்பா, சாலை விபத்துல லாரி மோதி செத்துப்போயிட்டாரு...'
கண்ணீர் வடித்தவன், 'எரியுற நெருப்பை எடுத்து, என் கை காலெல்லாம் சூடு போட்டுட்டார் என் அப்பா... அத தாங்காமதான் ஓடிவந்துட்டேன்... ஏதோதோ நடந்துப்போச்சு!' என்றான்.
'உன் அம்மா இப்ப தனியா வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க! அப்பப்ப கிடைக்கிற கூலி வேலய செஞ்சி கெடைக்கிற காசுல சாப்பிட்டுகிட்டிருக்காங்க! இப்பவும், அதே வாத்தியார் வீட்டுல தான் குடியிருக்காங்க...'
'ஓ... அப்படியா...'
'அந்த வீட்டுக்காரர், ஆசிரியர் வேலையிலிருந்து ரிடையர் ஆகிட்டாரு... டியூஷன் நடத்தி காலத்தை தள்ளுறாரு. அந்த ஐயா தான், சொந்த சகோதரியா, உன் அம்மாவை கவனிச்சுக்குறாரு... அவரோட குடும்பமும் ரொம்ப பாசமா பாத்துக்குறாங்க...'
'அவரு எப்பவுமே நல்லாதானே பாத்துக்கிட்டாரு...'
'நீயும் என்ன பண்ணுவ... பாவம்! உன்ன பாத்தாலே கஷ்டமா தெரியுது...'
'இனி எந்த குறையும் வைக்க மாட்டேன். சீக்கிரமா வந்து அம்மாவை மும்பைக்கு அழைச்சுக்கிட்டு வந்து பத்திரமா பாத்துக்குவேன்...'
இப்படி, மும்பையில் நடந்த உரையாடலை, லட்சுமியிடம் சொல்லிக்கொண்டிருந்தார் உறவினர் செல்வானந்தம்.
அப்போது, மின் கணக்கீட்டு ஊழியரின் குரல், வாசல் பக்கம் கேட்டது.
பேச்சு தடைப்பட்டது.
மின் பயனீட்டு அளவை, பதிவு அட்டையைக் கொடுத்தார் லட்சுமி. அதில் மின் அளவை பதிந்து சென்றார் ஊழியர்.
திரும்பி வந்ததும் தொடர்ந்தார் செல்வானந்தம். ஆவலுடன் கேட்டார் லட்சுமி.
''கோபத்தோட இங்கயிருந்து புறப்பட்ட சூரியராஜா, ரயிலேறி மும்பைக்கு போயிருக்கான்! ரொம்ப சிரமப்பட்டிருக்கான். ஆரம்பத்துல, சின்ன ஓட்டல் கடையில் எடுபிடி வேலை தான் கிடச்சுருக்கு...''
''ஓஹோ... குழந்தையல்லவா அவன்...''
''அங்கேயே வேலையை கத்துகிட்டு, சில ஆண்டுகளிலே சுவையா சமைக்க கற்று பெரிய சமையல் மாஸ்டரா ஆயிட்டான்! வாடிக்கையாளர் திருப்திப்படும் வகையில் சமையல் செய்திருக்கான். இவனோட திறமையை பார்த்து, அதே ஓட்டல்லேயே வேலை பாத்த ஊழியர், தன்னோட பொண்ணை கட்டி கொடுத்திருக்காரு... இப்ப குடும்பஸ்தன் ஆயிட்டான்...''
''அப்படியா! கல்யாணம் கட்டிகிட்டானா... நல்லாயிருக்கட்டும்... நல்லாயிருக்கட்டும்! பெத்த புள்ளை கல்யாணத்தை கண் குளிர பார்க்க குடுத்து வைக்கல...''
விழியோரம் வழிந்த கண்ணீரைத் துடைத்து கொண்டார் லட்சுமி!
''அத உடுங்கக்கா... கல்யாணத்த தான பார்க்க முடியல... இப்ப ஒரு வயசுல ஆண் குழந்தை இருக்கு... அடுத்த வாரம், உன் பேரனும், தக்கா புக்கான்னு நடந்து வரப்போறான் பாரு! அதை பார்த்தாவது சந்தோஷப்பட்டுக்கோ...''
''வரட்டும் வரட்டும் எல்லாம் நல்லாயிருக்கணும்! அது தான வேணும்...''
''ஆயிரம் இருந்தாலும் உனக்கு கல் மனசு கூடாதுப்பா. அம்மா அப்பாவை கூப்பிடாம கல்யாணம் கட்டிக்கிட்டது சரியான்னு கேட்டேன்...''
''நல்லா கேட்டிருக்கே... ரொம்ப சரியான கேள்வி தான்...''
ஆதங்கத்துடன் சொன்னார் லட்சுமி.
- தொடரும்...
நெய்வேலி ராமன்ஜி

