தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தேவலோகம்!

தேவலோகம்!

தேவலோகம்!


PUBLISHED ON : ஜன 15, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 15, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாதமுனி என்ற ஊரில் ஒரு கோவில் இருந்தது. அந்தக் கோவிலுக்குப் பக்கத்தில் ஓர் அழகிய பூந்தோட்டம் இருந்தது. அந்த பூந்தோட்டத்தை ஜீவா என்பவன் பராமரித்து வந்தான். மலர்ச் செடிகளை வைத்தல், பழைய மரங்களை நடுதல், தண்ணீர் பாய்ச்சுதல் முதலிய வேலைகளைச் செய்து வந்தான்.

ஜீவா பூந்தோட்டத்தில் காலியாகக் கிடக்கும் இடத்தைப் பண்படுத்தி சில வாழைக் கன்றுகளை நட்டான். சிறிது காலத்திற்குள் அந்தக் கன்றுகள் பெரியதாகிப் பெரிய தோட்டமாகி விட்டது. வாழை மரங்களில் குலை தள்ளின. இதைப் பார்த்து ஜீவா மகிழ்ச்சி அடைந்தான்.

ஜீவாவுடன் எந்நேரமும் ஒரு குரங்கு இருக்கும். சிறிது காலத்துக்கு முன் எங்கேயோ விழுந்து அடிபட்டு இந்தப் பூந்தோட்டத்திற்குள் வந்து நுழைந்தது. ஆரம்பத்தில் அதனை அடித்து விரட்டத்தான் ஜீவா நினைத்தான். ஆனால், அதனுடைய நிலையை அறிந்து, வீட்டிற்கு எடுத்துச் சென்று காயங்களைக் குணப்படுத்தினான். அன்று முதல் அந்த குரங்கு அவனை விட்டுப் பிரியாமல் அவனுடனேயே இருந்து வந்தது.

அன்று பவுர்ணமி முழு நிலா வானத்தில் மிதந்து கொண்டிருந்தது. ஜீவாவுக்கு தூக்கம் பிடிக்கவில்லை. வீட்டிலிருந்து வெளியே வந்தான். தோட்டத்தை நோக்கி நடந்தான். தூரத்தில் வரும்போதே வாழைத் தோட்டத்திற்குள் ஏதோ ஒரு பெரிய மிருகம் புகுந்து வாழை மரங்களைச் சாய்த்து வாழைக் குலைகளை சாப்பிடுவதைக் கண்டான்.

இதைப் பார்த்ததும் அவன் உடல் பதறியது.

'அய்யோ பல நாட்களாகப் பாடுபட்டு வளர்த்த தோட்டத்தை இந்தக் கொடிய மிருகம் ஒரு நொடியில் அழித்துப் பாழ் செய்துவிடும் போல இருக்கிறதே!' என்று நினைத்தவனாகத் தடியுடன் தோட்டத்திற்குள் புகுந்தான்.

அருகில் சென்று பார்த்ததும், அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

வாழை மரங்களுக்கு இடையே ஒரு பெரிய வெள்ளை யானை நின்று கொண்டிருந்ததைக் கண்டான் ஜீவா.

அதைப் பார்த்ததும், 'அடே, இது தேவலோகத்தைச் சேர்ந்த யானை போலிருக்கிறதே... இதைத்தான், 'ஐராவதம்' என்று சொல்லுவார்கள் போலிருக்கிறது!' என்று நினைத்த ஜீவா தடியைத் தூர ஏறிந்து விட்டு, ஒரு பழுத்த வாழைக் குலையைப் பறித்தவாறு யானையிடம் சென்றான்.

''தேவலோகத்து ஐராவதமே! உன்னைப் பார்த்தாலே நாங்கள் செய்த பாவங்கள் எல்லாம் போகும் என்று சொல்லுவார்கள். உன்னைப் பார்ப்பதற்கு நான் பெரிதும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அன்பு கூர்ந்து என்னுடைய காணிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும்,'' என்று கூறி வாழைக் குலையை அதன் முன் வைத்தான் ஜீவா.

ஐராவதம் ஜீவா கொடுத்த வாழைக் குலையை மகிழ்ச்சியுடன் சாப்பிட்டது.

''தோட்டக்காரா! உன் அன்பை மெச்சினேன்... என்னால் உனக்கு ஏதாவது காரியங்கள் நடக்க வேண்டுமானால் சொல், செய்து வைக்கிறேன்,'' என்றது.

''ஐராவதமே, இந்தப் பூத உடலுடன் அப்படியே என்னைத் தேவலோகத்துக்கு அழைத்துப் போக வேண்டும். இதைத்தான் நான் விரும்புகிறேன்,'' என்றான் ஜீவா.

''அடுத்த பவுர்ணமியன்று வருகிறேன். நான் இங்கிருந்து புறப்படும்போது, நீ என் வாலை கெட்டியாக பிடித்துக்கொள். உன்னை தேவலோகத்தில் விட்டு விடுகிறேன்,'' என்றது ஐராவதம்.

''ஒரு சின்ன வேண்டுகோள். என்னுடைய மனைவியையும், என் அருமை குரங்கையும் விட்டுப் பிரிந்திருக்க என்னால் முடியாது. அவர்களையும் என்னுடன் அழைத்து வருகிறேன்,'' என்றான் ஜீவா.

''அவர்களை எப்படி உன்னுடன் அழைத்து வருவாய்?'' என்றது ஐராவதம்.

''நான் தங்கள் உடலைப் பிடித்துக் கொள்கிறேன். குரங்கு என் தோளின் மீது இருக்கும். என் மனைவி என் கால்களைப் பிடித்துக் கொள்வாள்,'' என்றான் ஜீவா.

''சரி, ஆகட்டும்!'' என்று சொல்லி விட்டு ஐராவதம் மேலே பறந்து சென்று விட்டது.

மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்த ஜீவா, தூங்கிக் கொண்டிருந்த தன் மனைவியை எழுப்பி, தோட்டத்தில் ஐராவதத்தைப் பார்த்தது முதல் நடந்த அனைத்தையும் கூறினான்.

இதைக் கேட்ட அவன் மனைவி, ''என்ன தூக்க கலக்கத்திலே உளறுகிறீர்களா அல்லது கனவு கண்டீர்களா?'' என்று அவனை கடிந்து கொண்டாள்.

''நான் உளறவில்லை. உண்மையாகத்தான் சொல்கிறேன். என் மீது ஆணையாகச் சொல்கிறேன். நான் சொல்வது அத்தனையும் உண்மை. வேண்டுமானால் தோட்டத்துக்கு வந்து பார்,'' என்றான்.

இவ்வளவு தூரம் ஜீவா சொன்ன பிறகு, 'ஒரு வேளை உண்மையாயிருக்குமோ!' என்று அவன் மனைவி கனகா நினைத்தாள்.

''ஏங்க, அடுத்த பவுர்ணமிக்கு வெள்ளை யானை கண்டிப்பா கோவில் தோட்டத்துக்கு வந்து விடுமா?'' என்று கேட்டாள்.

''கண்டிப்பாக வரும். தேவலோகத்து யானை அது. ஒரு போதும் வாக்குத் தவறாது'' என்றான் ஜீவா.

''தேவலோகத்திலே இங்கே பாடுபடுகிற மாதிரித் துன்பப்பட வேண்டியதில்லையாம். எப்போதும் மகிழ்ச்சியாயிருக்கலாம்னு கதா காலட்சேபத்திலே கேட்டிருக்கிறேன். அது உண்மைதானா?'' என்றாள் கனகா.

''உண்மைதான்! நாம் அங்கே செல்வதற்கு எவ்வளவோ புண்ணியம் செய்திருக்க வேண்டும்,'' என்றான் ஜீவா.

''ஏங்க, அப்படிப்பட்ட இடத்துக்கு நாம் மட்டும் போய் என்ன பயன்? என்னுடைய அம்மாவையும், தங்கையையும் கூடக் கூட்டிப் போவோமே!'' என்றாள் கனகா.

''இதோ பார்! பைத்தியக்காரத்தனமாக எதுவும் உளறி வைக்காதே. நமக்குக் கிடைத்திருப்பதே பெரிய வாய்ப்பு. நீ அவர்களையும் உன்னுடன் அழைத்து வருகிறேன் என்றால், கடைசியில் நாமும் அங்குப் போக முடியாதபடி ஆகிவிடும். ஆகவே, நாம் தேவலோகத்துக்குப் போகப் போகிற செய்தியைப் பற்றி ஒருவரிடமும் மூச்சு விடாதே!'' என்றான் ஜீவா.

கனகா இதற்குச் சரி என்று கூறி விட்டாளே தவிர, இந்த ரகசியச் செய்தியை யாரிடமாவது சொல்லாவிட்டால், அவளுக்கு மண்டை வெடித்து விடும் போல் இருந்தது.

அன்று பகல் தாய் வீட்டுக்குச் சென்றாள்.

''என்ன திடீர்னு வந்துருக்கே? வீட்டிலே எல்லாரும் நலம்தானே?'' என்று கேட்டாள் கனகாவின் தாய்.

''ஒன்றுமில்லை. உங்களை எல்லாம் பார்த்து விட்டுப் போகலாம் என்று வந்தேன். உம். அடுத்த பவுர்ணமிக்குப் பிறகு உங்களை எப்படிப் பார்க்க முடியும்?'' என்று பெருமூச்சு விட்டாள் கனகா.

''என்ன இப்படிப் பேசுகிறாய்?'' என்று கவலையுடன் கேட்டாள் கனகாவின் தாயார்.

''யார் கிட்டேயும் சொல்லக் கூடாது என்று சொல்லியிருக்கிறார் என் கணவர்,'' என்றாள் கனகா.

''சொல்லும்மா. நான் உன்னைப் பெற்ற தாயார் இல்லையா? என்னிடம் கூடவா உண்மைகளை மறைக்க வேண்டும்!''

''வேறு ஒன்றுமில்லை. அடுத்த பவுர்ணமியன்று நானும் என் வீட்டுக்காரரும் தேவலோகத்துக்குப் போகப் போகிறோம்!'' என்றாள்.

''உனக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? தேவலோகத்துக்குப் போகிறீர்களா?'' என்று வியப்புடன் கேட்டாள் கனகாவின் தாய்.

கனகா முழுக் கதையையும் தாயாரிடம் கூறினாள். கனகா கூறியதைக் கேட்டதும் அவளுடைய தாயாருக்கும் தேவலோகம் செல்ல வேண்டும் என்கிற விருப்பம் ஏற்பட்டு விட்டது.

- தொடரும்...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us