
மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு, பார்வை மற்றும் கேட்கும் திறனை இழந்த பெண், இடையறாத முயற்சியால் உலக புகழ் பெற்றார்.
அமெரிக்கா, வட அலபாமா, டஸ்கும்பியா கிராமத்தில், ஜூன் 27, 1880ல், பிறந்தார் ஹெலன் கெல்லர். இரண்டு வயதில் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பார்வை மற்றும் பேசும் திறனை இழந்தார். 
விடாமுயற்சி, பயிற்சியால் ஓரளவு பேசும் திறன் பெற்றார். கல்வியில் தீவிர கவனம் செலுத்தி, 24ம் வயதில் முதுகலை பட்டம் பெற்றார். ஆங்கிலம், லத்தீன், பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழிகளையும் கற்று தேர்ந்தார். 
ஒருமுறை ஹெலன் கெல்லரை வண்டியில் அழைத்து சென்றார், ஆசிரியை ஆன் சல்லிவன். அப்போது, கவனத்தை ஒருமுகப்படுத்தும் பயிற்சி அளித்தார். அந்த பயிற்சியில் கவனம் கொண்டு, 'திறந்த வெளியில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்... வயல் வெளியில் செல்கிறோம்.... மரங்களுக்கு நடுவே செல்கிறோம்...' என பயணப் பாதையை உணர்ந்து கூறினார். இது, பெரும் வியப்பை தந்தது.
கல்லுாரியில் படித்த போது, 'என் கதை' என்ற தலைப்பில், சுயசரிதை நுாலை எழுதினார். தொடர்ந்து, 'இருளுக்கு வெளியே' என்ற இவரது கட்டுரை பிரபலமானது. 
ஹெலன் கெல்லர், 39 நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது பார்வையற்றோர், செவித்திறன் குன்றியோருக்கு, பள்ளிகள் திறக்கும்படி, பிரசாரம் செய்தார்; நிதியுதவியும் வழங்கினார். 
மாற்றுத் திறனாளிகள் வாழ்வு உயர, தொழிற்பயிற்சி தேவை என வலியுறுத்தினார். இந்தியாவில் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவை சந்தித்தார். பார்வையற்றோர், செவித்திறன் குறைந்தோருக்கு பல திட்டங்களை பரிந்துரைத்தார்.
அவரது வாழ்க்கை அனுபவம், 'மீட்சி' என ஆணவப் படமாக எடுக்கப்பட்டது. அதில் அவரே நடித்தார். பார்வையற்றோருக்காக தேசிய நுாலகம் ஒன்றையும் உருவாக்கினார்.
வாழ்நாளில், 12 முக்கிய நுால்களை எழுதியுள்ளார் ஹெலன். பொதுநலனில் பெரும் அக்கறை கொண்டிருந்தார். இருபதாம் நுாற்றாண்டில், உலகின் சிறப்பு மிக்க பெண்ணாக பாராட்டு பெற்றார். பல்வேறு வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்ட ஹெலன் கெல்லர், ஜூன் 1, 1968ல், 87ம் வயதில் மறைந்தார்.
அமெரிக்கா, அலபாமா மாநிலத்தில் 2009ல் ஹெலன் கெல்லருக்கு வெண்கலச் சிலை நிறுவப் பட்டது. முதன் முதலாக ஏழு வயதில், தண்ணீரைத் தொட்டு உணர்ந்து பொருளை புரிந்துகொண்ட காட்சி சிலையாக வடிக்கப்பட்டுள்ளது. 
- அ.யாழினி பர்வதம்

