
அன்பு சகோதரி பிளாரன்சுக்கு...
என் வயது 40; மருந்தகத்தின் உரிமையாளராக இருக்கிறேன். எனக்கு, 15 வயதில் ஒரு மகன், 10ம் வகுப்பு படிக்கிறான். கடந்த, ஒரு ஆண்டாக, 'செஸ்' விளையாட்டை பிடித்து தொங்குகிறான். நண்பன் ஒருவன் இந்த விளையாட்டை அறிமுகப்படுத்தி இருக்கிறான்.
நம்பிக்கையுடன், 'இனி செஸ் விளையாட்டு தான் என் எதிர்காலம்...' என்கிறான்.
எனக்கு செஸ் விளையாட்டு பற்றி எதுவும் தெரியாது. அதன் விபரங்களை கொஞ்சம் சொல்லுங்கள். செஸ் விளையாட்டில், என் மகனுக்கு நல்ல எதிர்காலம் அமையுமா என்பது பற்றியும் கூறுங்கள் சகோதரி.
- இப்படிக்கு,
பெயர் வெளியிட விரும்பாத தந்தை.
அன்பு சகோதரருக்கு...
செஸ் விளையாட்டு, 'சத்ரங்' என்ற பெயரில், இந்தியாவில், கி.பி., 8ம் நுாற்றாண்டில் அறிமுகமானது. பின்னாளில், ஐரோப்பா சதுரங்க விளையாட்டில், பல்வேறு மாற்றங்கள் செய்தது.
சதுரங்கம் ஓர் உள்ளரங்க விளையாட்டு; ஒரு நேரத்தில், இருவர் விளையாட முடியும். சதுரங்க அட்டையில், மொத்தம், 64 சதுரங்கள் உள்ளன. ஒரு அணிக்கு, 16 காய்கள்; ஒருவர் வெள்ளை நிற காய் வைத்திருப்பார்; இன்னொருவர் கறுப்பு நிற காயால் விளையாடுவார்.
ஒருவரின், 16 காய்களில், ஒரு ராஜா, ஒரு ராணி, இரண்டு யானை, இரண்டு குதிரை, இரண்டு மந்திரி, எட்டு சிப்பாய்கள் இருப்பர்.
சதுரங்க விளையாட்டில், ஐந்து முடிவுகள் உள்ளன.
அவை...
* எதிரியின் ராஜாவுக்கு, 'செக்' வைத்து வெற்றி பெறுவது
* தோல்வியை ஒப்புக் கொண்டு, ஆட்டத்திலிருந்து விலகுவது
* குறித்த நேரத்தில், எதிரியை தோல்வி நிலைக்கு தள்ளுவது
* மோசடிதனமாய் விளையாடினால், எதிராளி வெற்றி பெற்றதாக அறிவிப்பது
* இருவரும் சரிசமம்; யாருக்கும் வெற்றியில்லை என்ற நிலை.
இதில் ஐந்து விதமான ட்ராக்கள் உள்ளன.
சதுரங்க விளையாட்டை நிர்வகிக்க, சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு, எப்.ஐ.டி.இ., என்ற அமைப்புகள் உள்ளன. இந்த விளையாட்டின் முதல் உலக சாம்பியன், வில்ஹெம் ஸ்டெய்னைட்ஸ். அவரை சதுரங்க விளையாட்டின் தந்தை என கூறுவர்.
தற்போதைய சாம்பியன் மேக்னஸ் கார்ல்ஸன்.
சதுரங்க விளையாட்டில், கடவுளாக காரி காஸ்பரோவை கூறுவர்.
இந்தியாவை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த், 17ம் வயதில், ஜூனியர் சாம்பியன்ஷிப் பட்டத்தை, 1987ல் வென்றார்.
தற்போதைய சதுரங்க விளையாட்டில், கணிதம், கணினி, விஞ்ஞானம், மனோதத்துவம் ஊடுருவி விட்டன. சதுரங்கத்தில், செஸ் டைட்டன்ஸ், செஸ் அல்ட்ரா, செஸ் சேரியா, பாட்டில் செஸ் போன்ற வீடியோ கேம்கள் வந்து விட்டன.
சதுரங்க விளையாட்டை தமிழகத்தில் கற்றுக் கொடுக்க, நுாற்றுக்கணக்கான அமைப்புகள் உள்ளன.
ஒரு மணி நேரம் கற்று தருவதற்கு, 1,000 ரூபாய் வசூலிக்கின்றனர்; சதுரங்க விளையாட்டில், போட்டி அதிகம். சவாலான கேரியரை மேற்கொள்ள வேண்டி வரும்.
வெற்றிகரமான சதுரங்க ஆட்டக்காரராக, உங்கள் மகன் மாறினால், இப்போதைய நிலையில் மாதம், 2 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்க வாய்ப்பு இருக்கிறது.
சவால் எடுக்க பிடிக்கும் என்றால், மகனை கட்டாயம் சதுரங்க விளையாட்டில் ஈடுப்படுத்தலாம்.
- அன்புடன், பிளாரன்ஸ்.

