
'என்ன குமாரு இப்படி செய்துட்ட...'
'என்னப்பா... இது மாதிரி நடந்துடுச்சு...'
அலைபேசியில் வந்த பதற்ற கேள்விகளால் சலிப்படைந்தான் குமார்.
நண்பரின் திருமணத்துக்கு கொடுக்க வாங்கி வந்திருந்த பரிசு பார்சல் விழுந்து நொறுங்கி விட்டது. கவனப்பிசகால் நடந்ததை அலைபேசியில் வீடியோ எடுத்து, உறவினர்களுக்கு அனுப்பி விட்டாள் மனைவி. அது, பதற்றமாக கேள்வி எழுப்பும் நிலைக்கு கொண்டு வந்து விட்டது.
கவலையில் ஆழ்ந்திருந்தான் குமார்.
பள்ளி முடிந்து வீடு திரும்பிய மகன் குணா, தந்தை முகத்தில் வாட்டத்தைக் கண்டான்.
தேற்றும் வகையில், ''கவனக்குறவை சரி செய்து விடலாம் அப்பா... இன்னும் ஒரு பரிசுப் பொருள் வாங்கி விடலாம். ஆனால், கவலையால் இழக்கும் நேரத்தை, ஈடு செய்ய முடியுமா...'' என, கட்டிக்கொண்டான்.
சிறுவனின் சொற்கள் தெளிவை தந்தன.
இரு நாட்களுக்கு முன் -
மகன் ஒழுங்காகப் படிக்கவில்லை என ஆத்திரத்தில் தண்டித்தான் குமார். அதை வீடியோவில் பதிவு செய்து, 'உன் லட்சணத்தை எல்லாரும் பார்த்தா தான் புத்தி வரும்...' என வசைப்பாடியபடி, உறவினர்களுக்கு அனுப்பியிருந்தான்.
இப்போது, அதற்காக வெட்கப்பட்டான்.
'தொழில்நுட்ப வசதி, மகிழ்ச்சி பரிமாற்றத்துக்கு பயன்பட வேண்டுமே தவிர, மனநிலையை பாதிப்பதற்காக அல்ல' என்ற எண்ணம் ஏற்பட்டது. அதை செயலில் காட்டினான் குமார். அவனிடம் ஏற்பட்ட மாற்றம், குடும்பத்தில் அமைதி, மகிழ்ச்சியை கொண்டு வந்தது.
குழந்தைகளே... எந்த செயலையும் சிந்தித்து செயல்படுத்த பழக வேண்டும்.
ந.மோகன்ராஜ்

