
ரமேஷ் மற்றும் சுரேஷ் இரட்டையர்கள். குணத்தில் ஒற்றுமை இல்லாதவர்கள்; எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருப்பர். அன்றாட வேலைகளை தட்டி கழிப்பர். வெறுத்து போன பெற்றோர், வீட்டு வேலைகளை பகிர்ந்து தந்தனர்.
ஒரு நாள் -
ரமேஷுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தான். அவன் செய்ய வேண்டிய வேலைகள் தேங்கின. அவற்றையும் சேர்த்து கவனிக்க சுரேஷிடம் வலியுறுத்தினார் அம்மா.
''அவரவர் வேலையை அவரவர் தான் செய்ய வேண்டும்...''
அலட்சியமாக கூறி மறுத்துவிட்டான் சுரேஷ். அன்று மாலையே அவனுக்கு கடும் பல்வலி ஏற்பட்டது.
பரிசோதித்த மருத்துவர், ''வலது பக்கத்தில் இருக்கும் பற்கள் பாதிக்கப்பட்டுள்ளன; சில நாட்கள் சிகிச்சை பெற வேண்டும்; வலியை தவிர்க்க, இடது பக்கமுள்ள பற்களால் மட்டுமே உணவை மென்று விழுங்க வேண்டும்...'' என அறிவுறுத்தினார்.
வீடு திரும்பியவனுக்கு, உணவு தரவில்லை அம்மா.
சோர்வுடன் துாங்கி விட்டான்.
மறுநாள் காலையும், இதே நிலை நீடித்தது.
மிகுந்த கோபத்துடன், ''எனக்கான உணவு எங்கே... ஏன் என்னைப் பட்டினி போடுகிறீர்கள்...'' என கேட்டான் சுரேஷ்.
''வலது பக்க பற்களை உபயோகிக்க முடியாத நிலையில், இடது பக்க பற்களால் மட்டுமே உணவை மென்று தின்ன அறிவுரை வழங்கியுள்ளார் மருத்துவர். ஆனால், அப்படி செய்வது சரியில்லை. இடது பக்க பற்களுக்கு, அதிக வேலைப் பளு தருவது தவறல்லவா... அவரவர் வேலையை அவரவர் தான் செய்ய வேண்டும். எனவே, வலப்பக்க பற்கள் குணமாகும் வரை, உனக்கு உணவு இல்லை...'' என்றார் அம்மா.
தவறை உணர்ந்தான் சுரேஷ்.
பாடம் கற்று திருந்தினான். அன்று முதல், சகோதரனுடன் நட்புடன் பழகி நல்லபெயர் வாங்கினான்.
குழந்தைகளே... முதியோர், உடல் நலம் குன்றியோருக்கு தேவையான உதவிகளை தயக்கமின்றி செய்யுங்கள்.
ஆர்.மாலதி

