
மேரி அந்த பள்ளியில், தமிழ் ஆசிரியையாக சேர்ந்து, ஐந்து ஆண்டுகள் ஆகின்றன; மாணவர்களின் முழு கவனமும், பாடத்தில் பதிய செய்வதில் நிகரற்றவர். வகுப்பில், நீதி போதனை கருத்துகளை கூறி நல்வழியில் நடக்க ஊக்குவிப்பார்.
அன்று வகுப்பறையில், ''நாளை காலை பள்ளிக்கு வருவதற்குள் யாருக்காவது செய்த உதவி ஒன்றை சொல்ல வேண்டும்...'' என அறிவித்தார். மாணவ, மாணவியர் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
மறுநாள் -
வகுப்பில் நுழைந்தவுடன், ஒவ்வொருவரும் செய்திருந்த உதவி செயல் பற்றி கூறக் கேட்டார். பெற்றோர் செலவுக்கு தந்த காசை, பிச்சைக்காருக்கு கொடுத்ததாக பலர் கூறினர். பணம் இல்லாததால் உதவ முடியவில்லை என்று வருந்தியவரும் உண்டு.
அவர்களை சமாதானப்படுத்தி, ''உதவி என்றால் பணத்தால் செய்வது மட்டுமில்லை; படிப்பைத் தவிர வேறு என்ன செய்தீர் என்பதை சொல்லுங்க...'' என்றார் மேரி.
''பள்ளிக்கு வந்தபோது, பார்வையற்ற ஒருவருக்கு சாலையை கடக்க உதவினேன்...'' என்றான் கோபால்.
''நல்ல விஷயம்... இது எவ்வளவு பெரிய காரியம்...''
புகழ்ந்தார் மேரி.
''முதியவர் துாக்கி வந்த சுமையை, என் மிதிவண்டியில் ஏற்றி, அவர் வீட்டில் கொடுத்தேன்...'' என்றான் மற்றொரு மாணவன் மகேஷ்.
''சமையலில் அம்மாவுக்கு தேவையான பொருட்களை கடையில் வாங்கி கொடுத்தேன்...'' என்றாள் சங்கீதா.
''மனிதாபிமானத்துடன் உதவி செஞ்சிருக்கீங்க. பணம் கொடுப்பது மட்டுமே உதவி என்று எண்ண வேண்டாம்; செயலிலும் காட்டலாம் என நிரூபித்துள்ளீர்...''
பாராட்டினார் மேரி.
குழந்தைகளே... ஒருவரின் தேவை அறிந்து, சரியாக உதவுவதற்கு கற்று கொள்ளுங்கள்!
- என்.உஷா தேவி

