
விருதுநகர் மாவட்டம், சாத்துார், இந்து நாடார் எட்வர்டு உயர்நிலைப் பள்ளியில், 1966ல், 8ம் வகுப்பு படித்த போது, தலைமை ஆசிரியராக இருந்தார் மாரியப்பன்.
அன்று வகுப்புக்கு புதிதாக வந்த தமிழாசிரியர் கனக சுப்புரத்தினம், ஒவ்வொருவராக எழுந்து அறிமுகப்படுத்த கூறினார். என்முறை வந்தபோது, 'தமிழ் புத்தகம், செய்தித்தாள்கள் எல்லாம் ஆவலுடன் படிப்பேன்; கவிதை கூட எழுதுவேன்...' என்றேன்.
சிரித்தபடி, 'ஒரு கவிதை எழுதி காண்பி...' என்றார். தயங்காமல், 'உன்னைத்தான், என்றென்றும் எண்ணித்தான், பைத்தியம் என்னைத்தான் பற்றிடுமோ தோழி' என எழுதி காண்பித்தேன்.
வியந்தவர், 'இந்த வயதில், அறிவு முற்றி காதல் கவிதை எழுதுகிறாய்; ஆனால், சூழ்நிலை அறிந்து, புரிந்து எழுத வேண்டும். மாணவன் என்பதால், 'தோழி' என முடித்ததற்கு பதிலாக, 'தோழா' என மாற்றிக் கொள். பருவத்துக்கு ஏற்றார் போல் நட்பின் முக்கியத்துவத்தை விளக்கும்படி இருக்கும்...' என தட்டிக் கொடுத்தார்.
என் வயது, 69; தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். பத்திரிகைகளில், கதை, கவிதைகள் எழுதி, பரிசு, பாராட்டுகள் பெற்றுள்ளேன். இதற்கு, அந்த ஆசிரியர் தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்தியதே காரணம். இன்று ஆன்மிக பேச்சாளராக திகழும் அவரது சொற்பொழிவுகளை கேட்டு சிறப்பாக வாழ்கிறேன்.
- வி.ரவீந்திரன், ஈரோடு.
தொடர்புக்கு: 95782 03618

