
கன்னியாகுமரி மாவட்டம், அம்மாண்டிவிளை, அரசு மேல்நிலைப் பள்ளியில், 2004ல், 10ம் வகுப்பு படித்த போது, அறிவியல் ஆசிரியையாக இருந்தார் லதா. ஒருநாள், பாடம் குறித்த கேள்விக்கு, பதில் சொல்லாதவர்களை நிற்க வைத்திருந்தார்.
என் அருகிலிருந்த தோழிக்கு பதில் தெரியவில்லை. அவளுக்கு உதவ, புத்தகத்தை திறந்து மேஜையின் அடியில் வைத்து, பார்க்கும்படி உதவினேன்.
பக்கத்து வரிசையில் இருந்த மாணவர்கள், இதை போட்டுக் கொடுத்து விட்டனர். நன்றாக படிக்கும் மாணவி என்பதால், ஆசிரியர்களிடம் எனக்கு நல்ல பெயர் இருந்தது. அதனால், மாணவர்கள் கூற்றை நம்பாமல், 'அவளை பற்றி எனக்கு தெரியும். அப்படி எல்லாம் செய்ய மாட்டாள்...' என பரிந்துரைத்தார் ஆசிரியை. இதை நம்பாதவர்கள் மேஜையை சோதனையிட வலியுறுத்தியதால், உடனே, புத்தகத்தை மறைத்து விட்டேன்.
உணவு இடைவேளையின் போது, 'நம்பிக்கை வைத்திருந்தவரிடம் பொய் கூறி விட்டேனே' என்ற கவலையில், மனம் உறுத்தியது. உடனே, ஓய்வு அறையில் அமர்ந்திருந்த ஆசிரியையை சந்தித்து, உண்மையை கூறினேன். கனிவுடன், 'சரி விடு... இனி, இதுபோல் செய்யாதே...' என அறிவுரைத்தார்.
அன்று தான், 'நற்பெயர் பெறுவதை விட, அதற்கு தகுதியாக வாழ்வது தான் முக்கியம்; நம்புவோரிடம் பொய் சொல்வது மிக தவறான செயல்' என்பதை உணர்ந்தேன்.
எனக்கு, 32 வயதாகிறது; தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பணி செய்து வருகிறேன். வாழ்வில், புது வெளிச்சம் பாய்ச்சிய அந்த நிகழ்வை அடிக்கடி நினைத்து கொள்கிறேன்.
- எஸ்.பானுமதி, சென்னை.

