
திருநெல்வேலி மாவட்டம், பழவூர், அரசு உயர்நிலைப் பள்ளியில், 1996ல், 8ம் வகுப்பு படித்தபோது வகுப்பாசிரியை உமா கல்யாணி, ஆங்கிலம், அறிவியல் பாடங்களை கற்பிப்பார்.
பல மொழிகளில் புலமை பெற்ற அவர், கதை, கவிதை எழுதுவதிலும் வல்லவர். 'தினமலர் - வாரமலர்' இதழில் அவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளதை கண்டு வியந்திருக்கிறேன்.
ஆங்கில மொழி மீதிருந்த தயக்கத்தை உடைத்து, ஈர்ப்பை ஏற்படுத்தினார். ஒவ்வொரு நாளும் காலை பிரார்த்தனை கூட்டம் முடிந்தவுடன், ஆங்கிலத்தில், பிரசன்ட் டென்ஸ், பாஸ்ட் டென்ஸ், பாஸ்ட் பார்டிசிபிலில் வினை சொற்களை வாக்கியத்தில் அமைத்து பேசி பயிற்சி பெறுவோம்.
அக்கரையுடன் கவனித்து, கனிவாக திருத்துவார். முதலில், ஐந்து சொற்கள் கற்றிருந்தோம். தொடர்ந்து, ஆண்டு இறுதிக்குள், 100 சொற்களை பயன்படுத்த கற்றுக்கொண்டோம். அவர் தந்த பயிற்சியால், ஆங்கிலம் மீதான தயக்கம் மறைந்து, புலமை பெற்றேன்.
தற்போது, என் வயது, 38; ஆங்கில பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றுகிறேன். அந்த ஆசிரியையிடம் கற்றது போல், என் மாணவர்களுக்கும் பயிற்சி அளித்து மகிழ்கிறேன்.
- எஸ்.வள்ளியம்மாள், திண்டுக்கல்.
தொடர்புக்கு: 94860 76105

