PUBLISHED ON : ஜன 11, 2013

'மயிலே, மயிலே என்றால் இறகு போடாது. நாம்தான் பிடுங்க வேண்டும்' என்று நினைத்தான் ஹெர்குலிஸ்.
ஒரே தாவாகத் தாவி அந்தப் படகில் அமர்ந்தான். தன் கையிலிருந்த கதையை ஓங்கினான்.
''படகை ஓட்டுகிறாயா இல்லை இங்கேயே உன்னைக் கொன்று போடவா!'' என்று மிரட்டினான்.
நடுங்கிய படகோட்டி, அவனை மறுகரையில் சேர்த்தான்.
கையில் பெரிய கதையுடன் பெருமிதமாகப் பாதாள உலகத்திற்குள் நுழைந்தான் ஹெர்குலிஸ்.
அங்கிருந்த ஆவிகள் அவனைக் கண்டு ஓட்டம் பிடித்தன.
காவல் இருந்த வீரன் ஒருவன் ஹெர்குலிசைத் தாக்க ஓடி வந்தான். ஒரே அடியில் அவனை வீழ்த்தினான் ஹெர்குலிஸ். அந்த வீரனைத் தூக்கி எறியத் தயாரானான். இதைப் பார்த்த மற்ற வீரர்கள் கூச்சல் போட்டனர்.
அவர்களின் கூச்சல் கேட்டு அங்கு வந்தாள் பாதாள உலக அரசி பெர்சியோனா.
''ஹெர்குலிஸ் அவனை விட்டுவிடு,'' என்றாள்.
ஹெர்குலிசும் அந்த வீரனைக் கீழே விட்டான்.
''இங்கு நீ யாருடனும் சண்டை போட வேண்டாம். உனக்கு என்ன வேண்டுமோ அதைப் பாதாள அரசனிடம் கேள். என்னுடன் வா. உன்னை அரசவைக்கு அழைத்துச் செல்கிறேன்,'' என்றாள் அவள்.
ஹெர்குலிசும் அவளைப் பின்தொடர்ந்து சென்றான்.
அங்கே அரசவை கூடியிருந்தது. பாதாள உலக அரசன் ஹாடேசு அழகிய அரியணையில் அமர்ந்திருந்தார்.
அவரைப் பணிவாக வணங்கினான் ஹெர்குலிஸ்.
''பாதாள உலக அரசரே! தேவர்களும் போற்றும் தேவனே. நீங்கள் அறியாதது ஒன்றும் இல்லை. பாதாள உலகக் காவல் நாயான செரிபரசை அழைத்துச் செல்ல வந்துள்ளேன். அதைக் கொடுத்து உதவ வேண்டும்,'' என்று வேண்டினான்.
இதைக் கேட்டுச் சிரித்த ஹாடேசு, ''ஹெர்குலிஸ்! நீ யாருக்கும் அஞ்சாத மாவீரன் என்று கேள்விப்பட்டேன். இப்படிப் பைத்தியம் போலப் பேசுவாய் என்று நினைக்கவில்லை. இங்குள்ள காவல் நாயைக் கேட்கிறாயே... அதை உன்னுடன் அனுப்பி விட்டால் இங்கே காவல் காப்பது யார்? நீயே சொல்,'' என்று கேட்டார்.
''அரசே! நீங்கள் இப்படிப் பேசுவது எனக்கு விந்தையாக உள்ளது. எனக்கு இடப்படும் சோதனைகளில் நான் தனியாகத்தான் வெற்றி பெற வேண்டும். பிறர் உதவியை நாடக் கூடாது. இது ஜீயசு தேவனின் கட்டளை.
''இதுவரை, பதினோரு சோதனைகளை நிறைவேற்றி விட்டேன். அவை எவ்வளவு கடினமானவை என்பது உங்களுக்கே தெரியும்.
''இது எனக்கு வைக்கப்பட்ட கடைசித் சோதனை. இதில், நான் வெற்றி பெற வேண்டும். இல்லையேல், செத்து மடிய வேண்டும். வேறு வழிக்கே இடம் இல்லை. என் குறிக்கோள் எல்லாம் காவல் நாயை அழைத்துச் செல்ல வேண்டும். அது இல்லாமல் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பது என் கவலை இல்லை.
''காவல் நாய் இல்லாவிட்டால் என்ன? உங்களுக்கு இங்கே உதவி செய்யப் பலர் இருக்கின்றனர். எனக்கு யார் இருக்கின்றனர்? எல்லாவற்றையும் நான் தன்னந்தனியாக செய்து வருகிறேன்,'' என்றான் ஹெர்குலிஸ்.
அவன் பேச்சில் நியாயம் இருப்பதை அறிந்தார் அவர்.
''ஹெர்குலிஸ்! படைக் கருவிகளை நீ பயன்படுத்தக் கூடாது. உன்னால் முடியுமானால், காவல் நாயை அழைத்துச் செல். அதை மீண்டும் இங்கே கொண்டு வந்து விட்டு விட வேண்டும்,'' என்றார்.
''நன்றி அரசே! என் மீது அன்பு வைத்து இந்த அனுமதி கொடுத்தீர்களே. எனக்கு இது போதும்!'' என்று அவன் அவரையும், அரசியையும் வணங்கினான்.
அங்கிருந்து சென்ற ஹெர்குலிஸ் காவல் நாய் செரிபரசு இருந்த இடத்திற்கு வந்தான்.
மூன்று தலைகளுடன் பயங்கரமாகக் காட்சி அளித்தது. பாம்பு போல நெளியும் வால் அதற்கு இருந்தது. வால் முழுவதும் ரம்பம் போலக் கூர்மையாக இருந்தது. குட்டி அரக்கனைப் போல அது காட்சி அளித்தது.
சிறிதும் அஞ்சாத ஹெர்குலிஸை பார்த்து, அந்த நாய் ஓடி வந்தது.
மூன்று வாய்களாலும் அது கடிக்க முயலும். எந்த வாயில் சிக்கினாலும் பற்களால் என் தசையைப் பிடுங்கி எடுக்கும். உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை என்பதை அறிந்தான் ஹெர்குலிஸ்.
அவன் மேல் வேகமாகப் பாய்ந்தது நாய்.
கவனமாக இருந்த அவன் அதன் கடியிலிருந்து தப்பித்துக் கொண்டான். அப்படியே தன் கைகளை நீட்டி அதன் மூன்று தலைகளும் இணைந்துள்ள கழுத்தைப் பிடித்துக் கொண்டான்.
அவன் பிடிதான் இரும்புப் பிடி ஆயிற்றே. அவன் பிடியிலிருந்து விடுபட அந்த நாய் போராடியது. அவனையும் இழுத்துக் கொண்டு அப்படியும், இப்படியும் உருண்டது.
நேரம் ஆக, ஆக அவன் பிடி இறுகிக் கொண்டே வந்தது. அதற்கு மூச்சுத் திணறியது.
அந்த மாவீரனிடமிருந்து விடுபட முடியாது என்பதை அறிந்தது. அவன் வலிமைக்கு அடங்கியது.
அந்த நாயை இழுத்துக் கொண்டு மைசின் நகரம் வந்தான் ஹெர்குலிஸ்.
மூன்று தலைகளை உடைய அந்த நாயைப் பார்த்தார்கள் நகர மக்கள். அஞ்சி நடுங்கிய அவர்கள் அலறியபடியே ஓடி ஒளிந்தனர்.
அரசவைக்குள் நுழைந்தான் ஹெர்குலிஸ்.
அரியணையில் வீற்றிருந்த யுரிஸ்தியசு அந்த நாயை கண்டு நடுங்கினான்.
''ஹெர்குலிஸ்! உன்னைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். இந்த நாயை இங்கிருந்து இழுத்துச் சென்றுவிடு. நான் வைத்த எல்லா சோதனைகளிலும் வெற்றி பெற்றுவிட்டாய். ஜீயசின் கட்டளையை நிறைவேற்றி விட்டாய்.
''என் மீது எந்தத் தவறும் இல்லை. ஜீயசின் கட்டளையைத் தான் நிறைவேற்றினேன். இந்தச் சோதனைகளில் நீ மேலும் புகழ் பெற்றாய். என்னைத் தண்டித்து விடாதே. நாயை இழுத்துச் சென்றுவிடு,'' என்று கெஞ்சினான்.
அவனைப் பெருமிதத்துடன் பார்த்தான் ஹெர்குலிஸ். பிறகு அந்த நாயை இழுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டான்.
மீண்டும் பாதாள உலகத்தில் அந்த நாயை சேர்த்துவிட்டுத் திரும்பினான்.
வீரச் செயல்களால் தன் புகழ் உலகம் எங்கும் பரவி இருப்பதை அறிந்தான் ஹெர்குலிஸ். மக்கள் தன்னைத் தெய்வமாகப் போற்றுவதை அறிந்து பெருமைப்பட்டான்.
தன் வீரம் மக்களுக்குப் பயன்பட வேண்டும். தொண்டாற்றுவதே தன் கடமை என்று நினைத்த ஹெர்குலிஸ், மக்களுக்குத் துன்பம் தந்த கொடிய அரக்கர்களையும், விலங்குகளையும் தேடிச் சென்றான். அவர்களைக் கொன்று ஒழித்தான்.
செயற்கரிய செயல்கள் புரிந்த அவன், தெய்வமாக ஆனான். ஒலிம்பிய மலையில் வீற்றிருந்த அவனை மக்கள் வணங்கி வழிபட்டனர்.
முற்றும்.
