தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அம்மா வந்திருக்கேன்!

அம்மா வந்திருக்கேன்!

அம்மா வந்திருக்கேன்!


PUBLISHED ON : ஜன 11, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 11, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்னொரு காலத்தில் காட்டை அடுத்துக் குடிசை ஒன்று இருந்தது. அந்த குடிசையில் ஆடு ஒன்று வாழ்ந்து வந்தது. அது ஏழு குட்டிகளைப் போட்டது. அந்தக் குட்டிகள் ஓடியாடி விளையாடின. இதைப் பார்த்து மகிழ்ந்தது ஆடு.

வழக்கம் போல், உணவை தேடி வர, தாய் ஆடு வெளியே புறப்பட்டது. அப்போது அந்த ஆடு, குட்டிகளைப் பார்த்து, ''என் அன்புக் குழந்தைகளே! உங்களுக்கு உணவு கொண்டு வர காட்டிற்குச் செல்கிறேன். நான் இல்லாத நேரத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். கொடிய ஓநாய் இந்தக் காட்டில் உள்ளது. அது சூழ்ச்சி நிறைந்தது. அதனிடம் சிக்கிக் கொண்டால், உங்களைத் தின்று விடும். என்னைத் தவிர யார் கதவைத் தட்டினாலும் திறக்காதீர்கள்,'' என்றது.

''அம்மா! நீதான் கதவைத் தட்டுகிறாய் என்பதை நாங்கள் எப்படி அறிவது?'' என்று கேட்டது ஆட்டுக் குட்டி ஒன்று.

''குழந்தைகளே! என் குரல் போல, ஓநாயின் குரல் மென்மையாக இருக்காது. என் கால்கள் போல அதன் கால்கள் கருப்பாக இருக்காது. நீங்கள் எளிதாக ஓநாயைக் கண்டுபிடித்து விடலாம்,'' என்றது ஆடு.

''அம்மா! நாங்கள் கவனமாக இருப்போம். நீ எங்களை பற்றிக் கவலைப்படாமல் போய் வா,'' என்றது இன்னொரு ஆட்டுக் குட்டி.

அங்கிருந்து சென்றது ஆடு.

சிறிது நேரம் சென்றது. அந்தக் குடிசையின் அருகே ஓநாய் வந்தது.

'கதவு தாழ்ப்பாள் போடப்பட்டு உள்ளதே... ஆட்டுக் குட்டிகளை ஏமாற்றி எப்படித் திறக்க வைப்பது' என்று சிந்தித்தது.

கதவைத் தட்டிய அது, ''அன்புக் குழந்தைகளே! சுவையான உணவுடன் வந்திருக்கிறேன், எல்லாரும் மகிழ்ச்சியாக உண்ணலாம். கதவைத் திறங்கள்,'' என்றது.

ஓநாயின் கொடூரமான குரலைக் கேட்ட ஆட்டுக் குட்டிகள் நடுங்கின.

''நீ எங்கள் தாய் இல்லை ஓநாய். எங்களை உன்னால் ஏமாற்ற முடியாது. நாங்கள் கதவைத் திறக்க மாட்டோம். இங்கிருந்து போய்விடு,'' என்றது ஒரு ஆட்டுக் குட்டி.

சூழ்ச்சி தெரிந்து விட்டதே... என்று திகைத்தது ஓநாய்.

''ஆட்டுக் குட்டிகளே! என்னை ஓநாய் என்று எப்படி கண்டுபிடித்தீர்கள்?''என்று கேட்டது.

''எங்கள் தாய் இனிமையான குரலில் பேசுவாள். உனக்கோ கொடூரமான குரல் உள்ளது. நீ பேசினாலே ஓநாய் என்பது தெரிந்து விடுகிறது,'' என்றது இன்னொரு ஆட்டுக் குட்டி.

'உங்களையா ஏமாற்ற முடியாது? என் திறமையைப் பார்க்கதான் போகிறீர்கள். அப்பொழுது நீங்கள் எல்லாரும் என் வயிற்றில் இருப்பீர்கள்' என்று கறுவியது ஓநாய்.

அருகிலிருந்த ஊருக்குள் ஓடியது. மளிகை கடைக்குள் நுழைந்தது. ஒரு பாத்திரத்தில் இருந்த வெண்ணெயை எடுத்தது. தன் நாவில் தடவிக் கொண்டது.

இப்பொழுது தன் குரல் இனிமையாக இருக்கும் என்று நினைத்தது. அங்கிருந்து புறப்பட்ட அது ஆட்டுக் குட்டிகள் இருந்த குடிசையை அடைந்தது. கதவைத் தட்டியது.

''அன்புக் குழந்தைகளே! கதவைத் திறந்து விடுங்கள்,'' என்று மென்மையாகப் பேசியது.

''அம்மா வந்துவிட்டாள். கதவைத் திறப்போம்,'' என்றது ஆட்டுக் குட்டி ஒன்று.

''நாம் எதற்கும் கவனமாக இருப்போம். அம்மாதானா என்று உறுதிப்படுத்திக் கொள்வோம்,'' என்றது இன்னொரு ஆட்டுக் குட்டி.

''அம்மா! கதவு இடைவெளி வழியாக உன் காலை நீட்டு. நாங்கள் பார்த்துவிட்டுக் கதவைத் திறக்கிறோம்,'' என்றன குட்டி ஆடுகள்.

தன் கால்களில் ஒன்றை உள்ளே நீட்டியது ஓநாய்.

அதைப் பார்த்த ஆட்டுக் குட்டிகள் நடுங்கின.

''நீ எங்கள் அம்மா இல்லை. எங்கள் அம்மாவின் கால் கருப்பாக இருக்கும். உன் கால்கள் வெண் பழுப்பு நிறமாக உள்ளது. நீ ஓநாய்தான் நாங்கள் ஏமாந்து கதவைத் திறக்க மாட்டோம்,'' என்றன ஆட்டுக் குட்டிகள்.

உண்மை தெரிந்து விட்டதே... என்று கோபம் கொண்டது ஓநாய். பற்களை நறநறவென்று கடித்தது.

ஊருக்குள் ஓடிய அது சாயக் கடைக்குள் நுழைந்தது.

கருப்புச் சாயத்தைத் தன் கால்களில் நன்றாகப் பூசிக் கொண்டது. மீண்டும் அங்கு வந்த அது கதவைத் தட்டியது.

''அன்புக் குழந்தைகளே! கதவைத் திறந்து விடுங்கள்,'' என்று மென்மையாக பேசியது. கருப்புச் சாயம் பூசிய தன் காலை உள்ளே நீட்டியது.

''அம்மா! வாருங்கள்! அந்தக் கொடிய ஓநாய் இரண்டு முறை எங்களை ஏமாற்ற முயன்றது. நாங்கள் ஏமாறவில்லை,'' என்று மகிழ்ச்சியுடன் கத்திய ஆட்டுக் குட்டிகள் கதவைத் திறந்தன.

தன் கொடிய பற்களைக் காட்டியபடி ஓநாய் உள்ளே நுழைந்தது. அதைப் பார்த்த ஆட்டுக் குட்டிகள் அலறின. தப்பிக்க நினைத்த அவை அங்கும் இங்கும் ஓடின.

ஒரு ஆட்டுக் குட்டி மேஜைக்கு அடியில் ஒளிந்தது. இன்னொரு குட்டி, ஜன்னலுக்கு அடியில் பதுங்கியது. மற்றொரு ஆட்டுக்குட்டி நாற்காலிக்கு அடியில் மறைந்து கொண்டது.

நான்காவது குட்டி, அடுப்புக்குள் சென்று பதுங்கியது. ஐந்தாவது குட்டி தொட்டிக்குள் இறங்கி மறைந்து கொண்டது. ஆறாவது குட்டி கதவின் பின்னால் ஒளிந்தது. ஏழாவது குட்டி கடிகாரத்துக்குள் சென்று ஒளிந்து கொண்டது.

ஓநாய் ஒவ்வொரு இடமாகப் பார்த்து கொண்டே வந்தது. அங்கிருந்த ஆட்டுக் குட்டிகளை கண்டுபிடித்து விழுங்கியது.

கடிகாரத்திற்குள் ஒளிந்திருந்த ஆட்டுக் குட்டி மட்டும் அதன் கண்களில் படவில்லை.

ஆறு ஆட்டுக் குட்டிகளை விழுங்கியதால் அதன் வயிறு பெருத்தது. அதனால் நடக்கவும் முடியவில்லை. தள்ளாடியபடியே மெல்ல நடந்து அங்கிருந்து சென்றது.

சிறிது நேரம் சென்றது. ஆட்டுக் குட்டிகளுக்கு உணவுடன் தாய் ஆடு அங்கு வந்தது. வீட்டுக் கதவு திறந்து கிடப்பதைப் பார்த்துத் திகைத்தது.

பரபரப்புடன் உள்ளே நுழைந்தது. எல்லாப் பொருள்களும் சிதறி கிடப்பதைப் பார்த்துப் பதறியது.

''ஐயோ! என் குழந்தைகளுக்கு என்ன நேர்ந்ததோ? தெரியவில்லையே... அவர்களை எங்கே காண்பேன்?'' என்று அழுது புலம்பியது.

கடிகாரத்திற்குள் ஒளிந்திருந்த ஆட்டுக் குட்டி தாயின் அழுகையைக் கேட்டு, தலையை வெளியே நீட்டியது.

-1 தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us